
ஆந்திராவில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் கிடைத்த வொர்க் ப்ரம் ஹோம் ஆஃபரைப் பயன்படுத்தி மாடித்தோட்டம் மூலம் விவசாயியாக மாறிய சாப்ட்வேர் இன்ஜினியர், தற்போது டிராகன் பழ சாகுபடி மூலமாக நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.
2020ம் ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தோற்று, ஏராளமான தனிப்பட்ட மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. வேலையிழப்பு, ஊதியக்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் ஐ.டி. ஊழியர்கள் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகினர். இதில் ஒரு சிலர் மட்டுமே அனைத்து தடைகளையும் தாண்டி தனியார் நிறுவன ஊழியரில் இருந்து தொழில்முனைவோராக உருவெடுத்தனர். இதனால் தொழில் துறைகளிலும் பல்வேறு புதுமையான விஷயங்கள் உருவானது.
அப்படி சாப்ட்வேட் இன்ஜினியராக இருந்து விவசாயியாக மாறிய நபர் இன்று டிராகன் பழ விவசாயத்தில் வருமானம் ஈட்டி வருகிறார்.

டெக்கி டூ விவசாயி:
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் ராஜம் நகரில் உள்ள தோலாப்பேட்டையைச் சேர்ந்த சுதர்சனம் அதிகாரி என்ற 40 வயது நபர், பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். 2020ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், சொந்த ஊர் திரும்பியுள்ளார். அங்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்த சுதர்சனம், வேலை நேரம் முடிந்த பிறகு தனக்குச் சொந்தமான இடத்தில் டிராகன் பழங்களை பயிரிட ஆரம்பித்தார்.
விவசாயம் மீது திடீரென ஆர்வம் பிறந்தது குறித்து சுதர்சனம் அதிகாரி கூறுகையில்,
“எனது பெற்றோர் மூலமாக எனக்கு தோட்டக்கலை மீது ஆர்வம் பிறந்தது. சின்ன வயதில் எங்கள் வீட்டில் தோட்டம் போட்டுள்ளோம். அதில் என் அம்மா சொல்லிக்கொடுத்தபடி, குறைவான தண்ணீரில் வீட்டின் மாடியிலேயே இயற்கை முறையில் டிராகன் பழங்களை வளர்க்க முடிவு செய்தேன். எனது பெற்றோரின் 6 சென்ட் பரப்பளவு உள்ள மொட்டை மாடியை விவசாய நிலமாக மாற்றினேன். 2021 கோடையில் ககிதப்பள்ளி கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 100 டிராகன் பழங்களை நட்டேன்.”

8 மாதங்களில் கொட்டிய வருமானம்:
சுதர்சனம் அதிகாரி தனது வீட்டு மொட்டை மாடியில் 8 மாதங்களாக டிராகன் பயிர்களை பயிரிட்டு வளர்த்துள்ளார். இதன் மூலம் முதல் அறுவடையிலேயே அவருக்கு 150 கிலோ டிராகன் பழங்கள் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்தமாக 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்த சுதர்சனம் அதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
“டிராகன் பழங்கள் விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடியது. ஆனால், இதனை சாகுபடி செய்ய தீவிரமான கவனிப்பு தேவை. எல்லாம் சரியாக நடந்தால் 20 ஆண்டுகளுக்கு டிராகன் பழங்களை அறுவடை செய்யலாம்,” என்கிறார்.
முதல் முறையே நல்ல வருவாய் கிடைத்ததால், தற்போது கூடுதலாக அரை ஏக்கர் நிலத்தில் டிராகன் பழ சாகுபடியை விரிவுபடுத்தியுள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில் தனது இரண்டாவது அறுவடையை செய்ய காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி
20 வயதில் விதவை; விடாமல் விரட்டிய வறுமை: இயற்கை விவசாயத்தில் உஷாராணி வென்றது எப்படி?