பாரம்பரிய முறையைக் காட்டிலும் புதிய விவசாய முறையில் விவசாயிகள் லாபம் ஈட்டி வருகின்றனர். இருப்பினும் பாரம்பரிய விவசாய முறைகள் அனைத்துமே லாபகரமாக இருக்காது என்று சொல்லிவிட முடியாது. இதிலும் எத்தனையோ விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது.
எந்த வகையான பயிரைத் தேர்வு செய்கிறோம் என்பதைப் பொறுத்தே பலனும் இருக்கும். சந்தை தேவை இருக்கும் பயிரைத் தேர்வு செய்து, முறையாக சாகுபடி செய்தால் லாபம் பார்க்க முடியும். அந்த வகையில், எப்போதும் சந்தை தேவை இருக்கும் ஒரு காய்கறிதான் வெள்ளரிக்காய். பெரும்பாலும் வெள்ளரி, சாலட் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளரி சாகுபடி
வெள்ளரிக்கு ஆண்டு முழுவதும் சந்தை தேவை இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில், பல வகைகள் இருப்பதால் சரியான விதையைத் தேர்வு செய்து சாகுபடி செய்யவேண்டியது முக்கியம்.
விதைத் தேர்வு மட்டுமல்ல, சாகுபடி செய்யும் முறையும் சரியானதாக இருக்கவேண்டும். பாரம்பரிய முறையை மட்டுமே பின்பற்றினால் அதிக லாபம் ஈட்ட முடியாது. உற்பத்தி குறைவாகவே இருக்கும்.
பாலிஹவுஸ் முறையில் வெள்ளரி சாகுபடி செய்வதால் உற்பத்தி அதிகரிக்கும். அதேசமயம் வெள்ளரியின் தரமும் சிறப்பாக இருக்கும். பாலிஹவுஸ் முறையில் சாகுபடி செய்யும்போது வெப்பநிலையை நாம் கட்டுப்படுத்த முடியும் என்பதே இதன் சிறப்பம்சம்.
பயிரிட்ட இரண்டு மாதங்களில் அறுவடை தயாராகிவிடும். அதன் பிறகு மாதக் கணக்கில் சாகுபடி செய்துகொண்டே இருக்கலாம். ஒரு ஹெக்டேரில் வெள்ளரி பயிரிட்டால் 500 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். கலப்பு பயிராக இருக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு 700 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும்.
வெளிநாட்டு வெள்ளரி வகைகள் சிலவற்றிற்கு ஹோட்டல்களிலும் ரெஸ்டாரன்ட்களிலும் தேவை அதிகம் இருக்கும். இந்த ஹோட்டல்களுடன் கலந்து பேசி தேவைகளைப் புரிந்துகொண்டு வெள்ளரி சாகுபடியைத் தொடங்கலாம்.
செலவும் வருமானமும்
பாலிஹவுஸ் முறையில் சாகுபடியைப் புதிதாகத் தொடங்கும்போது செலவு சற்று கூடுதலாக இருக்கும். பாலிஹவுஸ் அமைப்பிற்காக முதலீடு செய்யவேண்டியிருக்கும். அதைத் தவிர்த்து ஒரு ஹெக்டேரில் வெள்ளரி சாகுபடி செய்ய சுமார் 2.5 முதல் 3 லட்ச ரூபாய் வரை செலவாகும்.
ஒரு ஹெக்டேரில் சராசரியாக 600 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். பொதுவாக, ஒரு கிலோ வெள்ளரி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதன் மூலம் 12 லட்ச ரூபாய் ஈட்டலாம். அதாவது, முதலீட்டுத் தொகையிலிருந்து நான்கு மடங்கு லாபம் கிடைக்கும்.
பாலிஹவுஸ் அமைப்பிற்காக அதிகம் செலவிடவேண்டும் என்பதால் அரசாங்கத்திடம் மானியம் பெற முயற்சி செய்யலாம். அந்த வகையில் செலவு குறையும், லாபமும் அதிகரிக்கும்.