Hebbevu Genetics நிறுவனமானது, மரபணு பண்புகளை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மாடுகளுக்கு நவீன ஐவிஎஃப் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
கடந்த சிலஆண்டுகளில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி பல பரிமாணங்களை எட்டியுள்ளது. விண்வெளி முதல் ஏஐ தொழில்நுட்பம் வரை அறிவியல் கண்டுள்ள வளர்ச்சி வியக்கதக்கது. அதிலொன்றாய், கால்நடைகளின் பிறப்பிலும் அறிவியல் தொழில்நுட்பம் நுழைந்துள்ளது.
அதாவது, இதுவரை மனிதர்களுக்கு மட்டும் ஐவிஎஃப் தொழில்நுட்பத்தின் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் வளர்ச்சி இருந்த நிலையில், இப்போது, கால்நடைகளிலும் ஐவிஎஃப் முறையினை கையாள துவங்கியுள்ளனர்.
ஆம், அழிந்து வரும் சில முக்கிய மாடு இனங்களை பாதுகாக்கவும், அவற்றின் பால் உற்பத்தியை மாட்டின் பால் சுரப்பை மரபணு முறையில் அதிகரிக்கவும் ஐவிஎஃப் தொழில்நுட்பம் நாட்டின் பல பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஹெப்பேவு மேனேஜ்டு பார்ம்லேண்டின் நிறுவனரும், சகோதரர்களுமான அமித் கிஷன் மற்றும் அஷ்ரித் கிஷன் ஆகியோர், அவர்களது துணை நிறுவனமாக ஹெப்பேவு ஜெனிடிக்ஸ் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனமானது கால்நடை வளர்ப்பு நடைமுறைகளைச் செம்மைப்படுத்தவும், மரபணு மதிப்பை மேம்படுத்தவும் மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் மாடுகளுக்கு ஐவிஎஃப் முறையினை கையாண்டு வருகிறது.
மனிதர்களுக்கான ஐவிஎஃப் தொழில்நுட்பம் நன்கு நிறுவப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் விலங்குகளுக்கான ஐவிஎஃப் அரிதாக நடக்கிறது. இந்நிலையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது ஹெப்பேவு ஜெனிடீக்ஸ்.
பொதுவாக, முற்போக்கான பால் உற்பத்தியாளர்கள், மந்தைகளுக்குள் மரபணு முன்னேற்றத்தை துரிதப்படுத்த செயற்கை கருவூட்டல் மற்றும் வழக்கமான கரு பரிமாற்றத்தைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இப்போது பலர் ஐவிஎஃப்- முறைக்கு மாறி வருகின்றனர். இதன் மூலம் உயரடுக்கு நன்கொடையாளர் பசுக்களிடமிருந்து கருக்களை உருவாக்கி, குறைந்த மரபணு தகுதி கொண்ட பசுக்களுக்கு மாற்றப்படுகிறது.
சமீபத்தில், கிஷன் சகோதரர்கள் ஒரே நாளில் 80 கரு பரிமாற்றங்களை வெற்றிகரமாக முடித்து, பெரும் சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்தனர். இந்தியாவில் உள்ள சில கால்நடை மருத்துவர்கள் மட்டுமே ஒரே நாளில் ஒன்று அல்லது இரண்டு நடைமுறைகளைச் செய்ய இயலும் என்பதால் இந்த சாதனை கால்நடை துறையில் பெரிதாக பார்க்கப்பட்டது.
ஹெப்பேவு ஜெனிடீக்ஸ் ஏற்கனவே இந்திய விவசாயம் மற்றும் கால்நடை மரபியலில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது.
அதிக ஊதியம் அளிக்கும் வங்கித் தொழிலில் இருந்து சமூகத்தாக்கத்தை ஏற்படுத்தும் விவசாய வணிகத்திற்கு மாறிய கிஷன் சகோதரர்கள், இப்போது விவசாய நிலங்களை விற்பதிலும் நிர்வகிப்பதிலும் சிறந்து விளங்குகின்றனர்.
அவர்களின் துணை பிராண்டுகளான Hebbevu Farm Fresh Milk மற்றும் Hebbevu Fresh ஆகியவை நிறுவனத்தை அடுத்தக்கட்ட உயரத்திற்கு கொண்டு சேர்த்தன. இந்த சாதனையானது நிதியை மட்டும் உள்ளடக்கியது அல்ல. ஏனெனில், அவர்களது நிறுவனம் கிராமப்புற சமூகங்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. ஹெப்பேவு உள்ளூர் பொருளாதாரத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலைகளை வழங்குவதன் மூலம் கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துகிறது.
தொகுப்பு: ஜெயஸ்ரீ
ஐஐடியில் படித்துவிட்டு மாடு விற்கும் தோழிகள் - 2 ஆண்டுகளில் ரூ.2,500 கோடி விற்பனை மதிப்பு எட்டியது எப்படி?