மன அழுத்தத்தை குறைக்கும் சாதனம்; மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவன்!

04:25 PM Aug 19, 2024 |

நவீன உலகில் எங்கும் எவரிடமும் கேட்கும் ஒரு வார்த்தை ஸ்ட்ரெஸ். கிட்டத்தட்ட ஸ்ட்ரெஸ் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு நோயாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதை எளிதாக கடந்துமுடியாத அளவிற்கு ஆரோக்கியம், மற்றும் மகிழ்ச்சியை கெடுக்கிறது.

அப்படியாக, மனஅழுத்தத்துடன் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டிருந்த 24 வயதான சங்கர் ஸ்ரீனிவாசன், அவரது மன அழுத்தத்தைத் தணிக்க முயன்ற பல முயற்சிகளும் தோல்வியில் முடிய, இதற்கான தீர்வின் தேவையை உணர்ந்து சிந்திக்கத் தொடங்கினார். தொடர் முயற்சியின் பலனாய் 'ஸ்புட்னிக் ப்ரைன்' (Sputnik Brain) எனும், மூளை பண்பேற்றம் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கும் அணியக்கூடிய சாதனத்தை (wearable device) உருவாக்கி ஹெல்த்டெக்கீகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அவருடைய கண்டுபிடிப்பானது, நடந்துமுடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் சாம்சங் நிறுவனத்தால் நடத்தப்பட்ட "டுகெதர் ஃபார் டுமாரோ-எனேபிளிங் பீப்பிள்"- எனும் கண்டுபிடிப்பு நிகழ்வில் காட்சிப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஸ்புட்னிக் ப்ரைனானது தற்காலிக நிவாரணம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான நீண்டகால யோசனையையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த புதுமையான யோசனை மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான ஒரு முறையை வழங்குவதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சங்கரின் பயணம் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, மற்றவர்களுக்கான ஊக்கம்.

பெங்களூரு க்ரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி படித்து வரும் சங்கர் ஸ்ரீனிவாசன், இளம்வயதிலே தொழில்முனைவரானவர். இன்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஏஐ டெக்னாலஜி, பரவலாக கூட அறியப்படாத காலத்திலே சங்கர் கல்வி தொடர்பான வீடியோக்களை உருவாக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கினார். அதற்காக ஒரு ஸ்டார்ட் அப்பையும் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது வெறும் 19. இருப்பினும், அது வெற்றியடைய தவறியது. அது சங்கரை மனச்சோர்வடையச் செய்தது. ஏமாற்றத்தை அளித்தது. பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது.

"ஒருபுறம், வணிகத்தில் ஈடுபடும் யோசனையை பெற்றோர்கள் எதிர்த்தனர். மறுபுறம், ஸ்டார்ட்அப்பை மூடுவது ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது. பயங்கர மனஅழுத்ததில் மனநல மருத்துவரின் உதவியை நாடினேன். ஆனால், பக்க விளைவுகளால் முழு மருந்து முறையும் வேலை செய்யவில்லை," என்று சோஷியல் ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.

சங்கரருக்கு எப்போதும் ​​நரம்பியல் அறிவியலில்மீது ஆர்வம் அதிகம். மனஅழுத்தம் அதிகமாகி கொண்டேயிருந்தாலும், எடுத்த முயற்சியை கைவிடுவது தீர்வாகாது என்பதை உணர்ந்தார். மனஅழுத்தத்தைக் குறைப்பதற்கான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் அவருடைய ஆர்வம் இரட்டிப்பாகியது.

மனநலம் மற்றும் நரம்பியல் கல்விக்கான நாட்டின் உச்ச மையமாக விளங்கும் நிம்ஹான்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தின் நியூரோசைன்டிஸ்ட் ஆன டாக்டர் அருண் சசிதரனை தொடர்பு கொண்டு, உடல் அழுத்தமாக இருக்கும்போது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கேட்டறிந்தார்.

"நமது மூளையில் மன அழுத்தத்திற்கான ஒரு கட்டளை மையம் உள்ளது. ட்ராபிக் சிக்னல், ப்ரேக் அப் அல்லது தனிப்பட்ட ஏதெவொரு விஷயத்தினால் ஒரு மனிதன் மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறாரா என்பதைப் பொருட்படுத்தாமல், உடலில் ஹைபோதாலமிக் பிட்யூட்டரி அட்ரீனல் அச்சு எனப்படும் உடலியல் சுவிட்ச் தூண்டப்படுகிறது."

மனித மன அழுத்தத்திற்கு ஏற்கனவே ஒரு 'சுவிட்ச்' இருந்தால், மனித மன அழுத்தத்தைக் குறைக்க அல்லது மகிழ்ச்சிக்காக ஒன்று இருக்காதா என்று தோன்றியது?"

-எனும் சங்கர் இது குறித்த தகவல்களை வல்லுநர்களிடமிருந்து சேகரிக்கத் தொடங்கினார்.

டென்மார்க்கைச் சேர்ந்த டாக்டரான நிதி கல்யாணி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டாக்டர் மற்றும் நரம்பியல் விஞ்ஞானி ஜோஷ் கெய்ன் ஆகியோருடன் மனஅழுத்தம் குறித்த விவாதங்களை மேற்கொண்டார். இந்த பயணத்தில் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு சாதனத்தின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆராய்வது சில சவால்களை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

இந்த விவாதங்களைத் தொடர்ந்து, மனஅழுத்தத்தைக் குறைக்கும் சாதனத்தை உருவாக்க ஒரு அடிப்படை தொழில்நுட்ப கட்டமைப்பில் வேலை செய்யத் தொடங்கினர். இந்த யோசனைக்கு முழுவடிவத்தை உருவாக்க ஸ்புட்னிக் ப்ரைன் புராஜெக்ட்டானது இன்குபேஷனாக ஹெல்த்கேர் டெக்னாலஜி இன்னோவேஷன் சென்டரில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஸ்புட்னிக் ப்ரைன் சாதனம் என்ன செய்கிறது?

"ஒருவர் சாதனத்தை அணிந்தவுடன் போலியான தகவல் பரிமாற்றத்தை மூளைக்குள் இயக்க, இரண்டு விரல்களை நெற்றி பொட்டில் வைக்க வேண்டும். வடிவியல் ரீதியாக அமைக்கப்பட்ட வரிசை உமிழ்பான்கள் அலைகளை கடத்துகின்றன. பாதுகாப்பாக மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 10 நிமிடங்களுக்குள் மனஅழுத்தம் குறைக்கப்பட்டு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது," என்றார் விரிவாக.

தற்போது ஸ்புட்னிக் ப்ரைன் சாதனமானது நிம்ஹான்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது, அடுத்த ஆறு மாதங்களில் இந்த தயாரிப்பை வணிக ரீதியாக வெளியிட சங்கர் திட்டமிட்டுள்ளார். ஸ்புட்னிக்கின் உருவாக்கத்தில் பல நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களும் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு அப்பால், சங்கர் ஒரு எமர்ஜென்ட் வென்ச்சர்ஸ் ஃபெலோ ஆவார் (எமர்ஜென்ட் வென்ச்சர்ஸ் என்பது மெர்கடஸ் மையத்தின் பெல்லோஷிப் மற்றும் மானியத் திட்டமாகும். இது சமூகத்தை அர்த்தமுள்ள வகையில் மேம்படுத்துவதற்கான அதிசிறந்த யோசனைகளைக் கொண்ட தொழில்முனைவோர்களை ஆதரித்து, மானியம் வழங்குகிறது) ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் YCL மற்றும் சிக்மா ஸ்கொயர் - இருந்து மானியம் பெறும் நபர் ஆவார்.

மேலும், 2022ம் ஆண்டில், நிஜ வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், புதுமையான யோசனைகளால் மக்களின் வாழ்க்கையை மாற்ற விரும்பும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை ஆதரிக்கும் நோக்கத்தில் செயல்படும் சாம்சங்கின் CSR முயற்சியான, Solve for Tomorrow -வினால் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று வெற்றியாளர்களில் ஒருவர் சங்கர். மானியத்தை தவிர, தனது முன்மாதிரியை வலுப்படுத்தவும், தயாரிப்புக்கான நிஜ-உலக நுகர்வோர் சரிபார்ப்பைப் பெறவும், ஐஐடி டெல்லியில் உள்ள புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான அறக்கட்டளையில் ஆறு மாத கால இன்குபேஷனைப் பெற்றார்.

"Samsung's Solve for Tomorrow என்பது வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது. வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் சிறந்த வழிகாட்டிகளுக்கான அணுகலை வழங்கும் அற்புதமான தளத்தை வழங்கியது. புரிந்துகொள்ள முடியாதவற்றை சரிசெய்து, எங்கள் மாதிரியை செம்மைப்படுத்த உதவியது. FDA அனுமதி பெற திட்டமிட்டுள்ளோம். அமெரிக்காவில் நிறுவனத்தை இணைத்து, அமெரிக்க சந்தைக்கு பெரிய திட்டங்களை வைத்திருக்கிறோம்," என்று கூறி முடித்தார்.

வருங்காலத்தில், பயன்பாட்டிற்கு பணம் செலுத்தும் மாதிரியில் மனநிலை நிவாரணத்திற்கான ஆரோக்கிய சாதனமாக ஸ்புட்னிக் ப்ரைன்-ஐ கிளினிக்குகள் மற்றும் சுகாதார நிபுணர்களுடன் கூட்டாளராக நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது கிளினிக்குகளுடன் வருவாய் பகிர்வு மாதிரியிலும் செயல்படும் என்று தெரிவித்தார்.