+

ரெடி.. ஸ்டடி.. நடி! ஆன்லைனில் நடிப்பு பயிற்சி - 3 நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய ‘தி பள்ளிக்கூடம்’

ஆன்லைன் மூலம் சிறந்த நடிகர், நடிகையரை உருவாக்கி வரும் பள்ளிக்கூடம், வரும் 25ம் தேதி புதிய நடிப்பு பயிற்சியைத் தொடங்குகிறது. இதில், தேசிய விருது பெற்ற நடிகை லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி மாணவர்களுக்கு நடிப்பின் பல பரிமாணங்களைக் கற்றுத்தர இருக்கிறார்.

கற்றுக் கொள்வதற்கும், திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் வயது ஒரு தடையேயில்லை எனக் கூறப்பட்டாலும், நாம் வாழும் இடம் பெரும்பாலும் ஒரு தடையாகத்தான் உள்ளது.

அதனால்தான், நகரங்களில் இருந்தால் மட்டுமே அனுபவம் மிக்க கலைஞர்களிடம் நடிப்பு, பாட்டு, நடனம் போன்ற கலைகளைக் கற்றுக் கொள்ள முடியும் என்ற பிம்பம் சிறுநகரங்கள், கிராமங்கள் மற்றும் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் உள்ளது.  

ஆனால், இந்தத் தயக்கம் இனி தேவையேயில்லை என்கிறது ‘தி பள்ளிக்கூடம்’. ஆம் சென்னையில் இயங்கி வரும் இந்த 'Pallikoodam' என்ற ஆன்லைன் கற்றல் தளம், நீங்கள் இருக்கும் இடத்திற்கே ஆன்லைனில் நேரடியாக மற்றும் வீடியோ வாயிலாக கலைகளைக் கற்றுத் தருகிறது.

pallikoodam

கொரோனா ஊரடங்கில் உதயம்

கிரண் சம்பத், நர விஸ்வா மற்றும் ரஞ்சித் கோவிந்த் என மூன்று நண்பர்கள் இணைந்து நிர்வகித்து வரும் இந்த பள்ளிக்கூடத்தில், நடிப்பு, பாடல் மற்றும் பல கலை சார்ந்த பயிற்சிகள், ஆன்லைன் வாயிலாக அனுபவம் மிக்க கலைஞர்களைக் கொண்டு கற்றுத் தரப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனுக்கு மாற, அப்போது உதித்த யோசனையில் இந்த ஆன்லைன் கலைக் கற்றல் தளமான பள்ளிக்கூடத்தை உருவாக்கியுள்ளனர் அதன் நிறுவனர்கள்.

அனைத்து வயதினருக்கும் அவர்கள் விரும்பும் பிரிவில் திறமையை வளர்ப்பதிலும், அவர்களது படைப்பாற்றலை ஊக்குவிப்பதையுமே நோக்கமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த பள்ளிக்கூடத்தில், வரும் 25ம் தேதி (ஆகஸ்ட் 25) முதல் புதிய வகுப்புகள் தொடங்க இருக்கின்றன.

8 வார கால அளவில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில், தேசிய விருது பெற்ற நடிகை லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி, மாணவ, மாணவிகளுக்கு நடிப்பின் பரிமாணங்களைக் கற்றுத்தர இருக்கிறார். இந்த வகுப்பில் நடிப்பில் ஆர்வமுள்ளவர்கள், முன்பே நடிப்பில் அனுபவமுள்ளவர்கள், தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், இளம் திறமையாளர்கள் என 12 முதல் 60 வயதையுடையவர்கள் யார் வேண்டுமானாலும் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

pallikoodam

நேரலை வகுப்புகள்

நடிப்பின் நுட்பங்களைக் கற்றுத்தரும் ஏழு விலாவாரியான பாடத்திட்டங்களை வீடியோ வடிவில் கொண்டுள்ள இந்த வகுப்பில், நடிகை லட்சுமிப்ரியா சந்திரமௌலியுடன் நான்கு நேரலை வகுப்புகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட தினசரி பயிற்சிகளும் உண்டு.

ஆன்லைன் மூலம் கற்றுத்தரப்படுகிறது என்ற போதிலும், பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தினசரி வீட்டுப்பாடங்கள், தேர்வுகள் போன்றவையும் தரப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

pallikoodam
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்கள், நடிப்பில் தங்களது தயக்கங்களை உடைத்தெறியவும், பார்வையாளர்கள் முன்னிலையில் தயக்கமின்றி தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தவும், குரலில் ஏற்றஇறக்கங்களை கொண்டு வந்து டயலாக் பேசவும், கூட்டத்திற்கு மத்தியில் தங்களது ஆளுமைப் பண்பை வெளிப்படுத்தவும், தங்கள் உடலையே ஒரு கருவியாகக் கொண்டு நவரச நடிப்பை வெளிப்படுத்தவும், தாங்கள் ஏற்கும் பாத்திரமாகவே மாறி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் நடிப்பைக் கற்றுக் கொள்வார்கள் என உறுதிபடக் கூறுகிறார்கள் இதன் பயிற்சியாளர்கள்.

 இந்தியா மட்டுமின்றி மற்ற பல நாடுகளில் இருந்து பள்ளிக்கூடம் தளம் மூலம் பலர் கலைகளைக் கற்று வருகின்றனர். நம் கலைகளைக் கடல் கடந்து கொண்டு சென்று சேர்த்து வருகிறது இந்த ‘தி பள்ளிக்கூடம்’ தளம்.

மேலும் விவரங்களுக்கு பள்ளிக்கூடத்தின் இணையதளம் மற்றும் அதன் சமூகவலைதளப் பக்கங்களையும் தொடர்பு கொள்ளலாம்.

facebook twitter