பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 19 வயதான நித்யஸ்ரீ சிவனுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பாராலிம்பிக் போட்டிகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து இந்த பாராலிம்பிக்ஸில், உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு, பாட்மிண்டனில் சோலைமலை சிவராஜ், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன், மனிஷா ராம்தாஸ், பவர் லிப்ட்டிங்கில் கஸ்தூரி ராஜாமணி என 6 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யஸ்ரீ சிவன், பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்தோனேசியா வீராங்கனை ரினா மர்லினாவை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் சமூகவலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த நித்யஸ்ரீ சிவன் ?
நித்யஸ்ரீ சிவன் ஓசூரில் பிறந்தவர். இவரது தந்தை மற்றும் சகோதரர் என இருவருமே கிரிக்கெட் வீரர்கள் என்பதால், சிறுவயதில் இருந்தே நித்யஸ்ரீக்கும் கிரிக்கெட் மீதே ஆர்வம் இருந்துள்ளது. ஆனால், கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியினை தொலைக்காட்சியில் கண்டுகளித்த போது, தனக்கு கிரிக்கெட்டைவிட பேட்மிண்டனில் அதிக ஆர்வம் இருப்பதைக் கண்டுபிடித்தார் அவர்.
மேலும் அப்போட்டியில் விளையாடிய பேட்மிண்டன் வீராங்கனையான லின் டானின் தீவிர ரசிகையாகவும் மாறினார். தொடர்ந்து அவரைப் பற்றிய பல தகவல்களைத் தேடித்தேடிப் படித்தார். அப்போதிருந்து தானும் அவரைப் போல் பேட்மிண்டன் வீராங்கனையாக வேண்டும் என கனவும் காண ஆரம்பித்தார் நித்யஸ்ரீ.
கனவை நினைவாக்கிய பயிற்சி
கனவுகளை நினைவுகளோடு நிறுத்திக் கொள்ளாமல், உடனடியாக செயலிலும் இறங்கினார். உள்ளூரில் இருந்த அகாடமி ஒன்றில் பேட்மிண்டன் பயிற்சி வகுப்பில் சேர்ந்து விளையாடத் தொடங்கினார். குடும்பப்பொருளாதார நிலையால், அவரால் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள முடிந்தது.
ஆனால், அந்த இரண்டு நாட்களிலும் நித்யஸ்ரீக்கு பேட்மிண்டன் மீது இருந்த ஆர்வமும், திறமையும் அவரது பயிற்சியாளருக்கு நன்றாகத் தெரிந்தது. எனவே, மேற்கொண்டு அவரை நன்கு பயிற்சி பெற வைத்தால், அவர் எதிர்காலத்தில் பேட்மிண்டன் துறையில் பதக்கங்களை வென்று ஜொலிப்பார் என நித்யஸ்ரீயின் பெற்றோரிடம் அவர் கூறியுள்ளார். கூடவே தொழில்முறை பயிற்சிக்கும் பரிந்துரைத்துள்ளார்.
பாரா பேட்மிண்டன் அறிமுகம்
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் தலைமை பயிற்சியாளரும் துரோணாச்சார்யா விருது பெற்றவருமான ஸ்ரீ கௌரவ் கன்னாவில் கீழ் தொழில்முறை பயிற்சிக்காக லக்னோ சென்றார் நித்யஸ்ரீ. அதன் தொடர்ச்சியாக, பேட்மிண்டனில் அவருக்கிருந்த ஆர்வம் மற்றும் பயிற்சி, அவரைப் பல போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்களை வெல்ல வைத்தது.
உடல்வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியாக இருந்தபோதும், ஆரம்பத்தில் அனைவருக்குமான பொதுப் போட்டிகளிலேயே கலந்து கொண்டு பல பதக்கங்களைக் குவித்துள்ளார். இந்த சூழ்நிலையில்தான், 2020ல் லாக்டவுன் காலத்தில்தான், தனது தந்தையின் நண்பரான பாரா பேட்மிண்டன் வீரரின் அறிமுகம் நித்யஸ்ரீக்குக் கிடைத்தது.
மாநில அளவிலான பாரா - பேட்மிண்டன் வீரரான அவர் மூலம், பாரா-பேட்மிண்டன் போட்டிகள் பற்றி அவருக்குத் தெரிய வந்தது. பயிற்சியாளரின் ஊக்கத்துடன், நித்யாவின் தந்தை அவரை தமிழ்நாடு பாரா-பேட்மிண்டன் மாநில சாம்பியன்ஷிப்பில் பங்கெடுக்க வைத்தார். அங்கு அவர் தனது திறமைகளை வெளிப்படுத்தத் தொடங்கி, தற்போது பாராலிம்பிக் வரை சென்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
நித்யஸ்ரீயின் பதக்கப்பட்டியல்
பஹ்ரைனில் நடந்த ஆசிய யூத் பாரா கேம்ஸ் 2021ல் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம், டோக்கியோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் 2022ல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கங்கள் உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பல தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் இவர் வென்றுள்ளார்.
தற்போது, இந்த வரிசையில் பாரீஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் சேர்ந்துள்ளது.
நித்யஸ்ரீக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.