இயற்கைக்கும், மனிதர்களுக்கும் என ஒரே நேரத்தில் இரண்டு விதமான நல்ல செயல்களைச் செய்யும் வகையில், இளம் தொழில்முனைவோராக வலம் வருகிறார் சென்னையைச் சேர்ந்த க்ரிஷா தோஸ்னிவால் என்ற 15 வயது சிறுமி.
இவர் விற்பனை செய்து வரும் விதை விநாயகர் சிலைகள், இயற்கை சாயங்கள் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்தத் தொழிலில் கிடைக்கும் லாபத்தை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கி வருகிறார் க்ரிஷா.
விநாயகர் சிலை தயாரிப்பு
வரும் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினத்தில் அனைத்து வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, பின்னர் அவற்றை கடல், ஆறு, குளம் என ஏதாவது ஒரு நீர்நிலையில் கரைப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால், இப்படி கரைக்கும் விநாயகர் சிலைகளால் சுற்றுச்சூழலுக்கும், நீர்நிலைகளுக்கு கேடு ஏற்படுகிறது என இயற்கை ஆர்வலகர்கள் எச்சரிக்கின்றனர். அதனாலேயே, இதற்கு மாற்றாக பலர் சாணத்தில், பனையில், களிமண்ணில் விதை நிரப்பி என சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகின்றனர். மக்கள் மத்தியில் சமீபகாலமாக இந்த சிலைகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
11 வயதில் மனதில் விழுந்த விதை
இப்படியான விநாயகர் சிலை தயாரித்து, விற்கும் தொழிலில் ஈடுபட்டு, 15 வயதிலேயே இளம் தொழில்முனைவோராக வலம் வருகிறார் சென்னையைச் சேர்ந்த க்ரிஷா என்ற சிறுமி. கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் விதை நிரப்பப்பட்ட மண்ணால் விநாயகர் சிலைகளை, சமூகவலைதளப்பக்கங்கள் மூலமாக அதனை விற்பனை செய்து வருகிறார்.
க்ரிஷாவின் பெற்றோர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மெக்கானிக்கல் இன்ஜினியரான அவரது தந்தை சென்னையில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதால், குடும்பத்துடன் இங்கே வசித்து வருகின்றனர். தந்தை ஒரு தொழில்முனைவர் என்பதால், க்ரிஷாவுக்கும் சிறுவயதில் இருந்தே தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.
“படிப்பதைவிட தொழில் செய்வது எளிது என நான் ஆரம்பத்தில் நினைத்தேன். எனவே, என் தந்தை என்னிடம் ஒரு சவால் விடுத்தார். அதாவது, வருடத்தில் ஒரு இருபது நாட்கள் ஏதாவது ஒரு தொழிலை எடுத்து அதை ஈடுபாட்டுடன் செய்து பார்க்க முடியுமா? என்பதுதான். அப்படித்தான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பித்தேன்,“ என்கிறார்.
வடமாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். ஆனால், அங்கும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவதால் ஏற்படும் மாசு எனக்கு கவலை ஏற்படுத்துவதாக இருந்தது. எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவண்ணம் விநாயகர் சிலைகளை விற்க வேண்டும் என முடிவு செய்தேன். அப்படி ஆரம்பித்ததுதான் இந்த விதை விநாயகர் சிலை விற்பனை,” என்கிறார் கிரிஷா.
3 வகையில் விநாயகர் சிலைகள்
8 இன்ச், 10 இன்ச் மற்றும் 12 இன்ச் என மூன்று வெவ்வேறு அளவுகளில் விநாயகர் சிலைகளை விற்பனை செய்கிறார் க்ரிஷா. மக்கும் பொருட்களால் வடிவமைக்கப்பட்ட அவரது சிலைகள், விநாயக சதுர்த்தியின் போது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, வழக்கமான சிலைகளுக்கு மாற்றாக இருக்கின்றன.
சிறுவியாபாரிகளிடம் இருந்து சிலைகளைப் பெற்று, அவற்றை சமூகவலைதளப் பக்கங்கள் மூலமாக விற்பனை செய்து வருகிறார். இதற்கென இன்ஸ்டாகிராமில் @ruchika5055 என தனிப்பக்கமும் அவர் வைத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதம் முன்னதாக இந்த விற்பனையை ஆரம்பித்து விடுகிறார் க்ரிஷா. அவரின் ஒரு விநாயகர் சிலையின் விலை ரூ.300 லிருந்து ரூ,600 வரை விற்கப்படுகிறது. இந்த சிலையை விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன், பூந்தொட்டி ஒன்றில் வைத்து நீர் ஊற்றி கரைத்தால் போதும். அப்போது அதன் உள்ளே இருக்கும் விதை வெளியில் வந்து, சில தினங்களில் முளைவிட ஆரம்பித்து விடும்.
“இப்படி விநாயகர் சிலை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் லாபத்தை மோகன் பவுண்டேஷன் என்ற உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளித்து வருகிறேன். இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் உதவும் மனநிறைவு கிடைக்கிறது,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் கிரிஷா.
தொழிலுடன் மனநிறைவு
விநாயகர் சதுர்த்தி காலத்தில் பள்ளி இருக்கும் என்பதால், க்ரிஷாவின் இந்த வேலைகளுக்கு அவரது பெற்றோர் உறுதுணையாக உள்ளனர். அவரது தந்தை, விநாயகர் சிலை தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கித் தரும் வேலைகளைக் கவனித்துக் கொள்ள, கிராபிக்ஸ் டிசைனரான அவரது அம்மா சமூகவலைதளப் பக்கங்களில் மார்க்கெட்டிங் வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார்.
“ஆரம்பத்தில் பள்ளிக்கும் சென்று கொண்டு, எனது பாடங்களைப் படித்துக் கொண்டு, மற்ற வகுப்புகளையும் நிர்வகித்து, இந்த விநாயகர் சிலைகளை உருவாக்குவது கடினமாகத்தான் இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நேர நிர்வாகத்தைக் கற்றுக் கொண்டேன். என்னிடம் சிலை வாங்கியவர்கள், கொண்டாட்டத்திற்குப் பிறகு அந்த சிலையை பூந்தொட்டியில் செடியாக வளர்த்த புகைப்படங்களை அனுப்புவார்கள். அதனைப் பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்,” என பூரிப்புடன் கூறுகிறார் கிரிஷா.
க்ரிஷாவுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி, டெல்லி, மும்பை என வடமாநிலங்களிலும், துபாய் போன்ற வெளிநாடுகளிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆன்லைன் மூலமாக அவர்கள் இந்த விநாயகர் சிலையை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
க்ரிஷாவின் இந்த மாற்று முயற்சி, சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, சமூகப் பொறுப்பும் கொண்டதாக உள்ளது. அவர் இந்த சிலைகளை உருவாக்க உள்ளூர் கைவினைஞர்களுக்கும் வியாபாரத்தை ஏற்படுத்தித் தருவதால், அவர்களின் வாழ்வாதாரமும் அதிகரிக்கிறது. அதோடு பாரம்பரிய கைவினைத்திறனும் ஊக்குவிக்கப்படுகிறது. கிரிஷாவின் இந்த முயற்சி பல கைவினைஞர்களுக்கு வருமான ஆதாரமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல், இந்த சிறுவயதிலேயே சுற்றுச்சூழல் மீது அக்கறைக் கொண்டு, அது சார்ந்த தொழிலாக ஆரம்பித்து, அதில் கிடைக்கும் லாபத்தையும் நன்கொடையாக அளித்து வரும் கிரிஷா நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்தான்.
ஆர்டர் செய்ய: Phone: 9840082844