சொந்த அனுபவ தாக்கம்; பெண்களின் தாய்ப்பால் புகட்டும் பயணத்தில் உதவும் 'நாரிகேர்`

04:42 PM Oct 16, 2024 |

தாய்ப்பால் கொடுப்பத்தில் தனக்கு நேர்ந்த சொந்த அனுபவங்களால் உந்தப்பட்ட, முன்னாள் சாப்ட்வேர் டெவலப்பரான காயத்ரி, அவரது ஸ்டார்ட்அப் நிறுவனமான 'நாரிகேர்' மூலம் தாய்மார்களுக்கான தாய்ப்பால் ஆதரவில் புரட்சியை ஏற்படுத்தும் பணியை செய்து வருகிறார்.

பிரசவ வலி அதற்கு பின்னான காலம் எளிதானது என்பது ஒரு கட்டுக்கதை. ஏனெனில், குழந்தை பிறப்பிற்கு பிறகு தாய்-சேயின் நலம் உட்பட பல்வேறு காரணிகளால் அக்கட்டமும் பலருக்கு கடினமானதாக இருக்கிறது. குறிப்பாக தாய்ப்பால் புகட்டும் காலம். குழந்தைக்கும் தாயுக்குமான மிக முக்கியமானதான தாய்பால் புகட்டுதல் அனைவருக்கும் ஒரே மாதிரியான அனுபவத்தை கொடுப்பதில்லை. அப்படி தான், காயத்ரி கனுமுரிக்கு அவரது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது சவாலானதாக மாறியது.

அவரது குழந்தை சரியாக வாயைப் பொருத்தி தாய்பாலை குடிப்பதற்கு சிரமப்பட்டது. சில நேரங்களில் காயத்ரிக்கு வலியும், இரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது. அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அனுபவங்கள் வழி தாய்பால் குறித்த அறிவையும், ஆலோசனையும் வழங்கும் 'Naricare' எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினார். இதுவரை, இந்தியா முழுவதும் சுமார் 400 பெண்களின் தாய்ப்பால் காலக்கட்டத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது.

தாய்ப்பால் புகட்டுவதிலுள்ள சிரமங்களும், சவால்களும்...

லாஸ் ஏஞ்சல்ஸில் சாப்ட்வேர் டெவலப்பராகப் பணிபுரிந்தவர் காயத்ரி கனுமுரி. 2021ம் ஆண்டு அவரது முதல் பிரசவத்திற்காக இந்தியாவுக்குத் திரும்பினார். பிரசவத்திற்கு பிறகான அவரது தாய்ப்பால் காலம் கடினமானது. 20 நிமிடம் முதல் 45 நிமிடங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து முடித்த நிலையில், 15 நிமிட இடைவெளியிலே அவரது குழந்தை மீண்டும் பால் கேட்டு அழுகத் தொடங்குவது வழக்கமாகியது.

அவர் மட்டுமில்லை புதிய தாய்மார்கள் பலரும் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர். அவருக்குக் கிடைத்த அனுபவம் மற்றும் கிடைத்த அறிவைக் கொண்டு அவரது வட்டத்தில் உள்ள மற்ற தாய்மார்களுக்கு வழிகாட்டினார். ஆனால், அவரது வட்டத்தில் உள்ள பெண்களைத் தாண்டி பலருக்கும் தாய்ப்பால் பற்றிய அறிவும், ஆலோசனையும் சேர வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணர்ந்த அவர், அவர்களுக்கு உதவ எண்ணினார். இந்த உணர்தல் புதிய தாய்மார்களின் பாலுாட்டும் காலத்தை குழப்பங்களற்ற இனிமையான காலமாக மாற்ற நாரிகேர் எனும் ஸ்டார் அப் நிறுவனத்தை தொடங்க அடித்தளத்தை அமைத்தது.

2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் ஆனது, சான்றளிக்கப்பட்ட பாலூட்டுதல் ஆலோசகர்களால், தாய்ப்பாலூட்டுதல் பற்றிய அறிவு மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது. நாரிகேர் ஸ்டார்ட் அப் ஆனது, பெங்களூருவில் உள்ள நடத்தூர் எஸ் ராகவன் தொழில் முனைவோர் கற்றல் மையத்தின் பெண்கள் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் இன்குபேட் செய்யப்பட்டது.

"பால் போதுமான அளவு சுரக்கிறதா? குழந்தைக்கு முழுமையாக பசியாற்றுகிறோமா? என தாய்பால் ஊட்டல் தொடர்பான கேள்விகள் எழுந்து, ஸ்ட்ரெஸ் ஆக்கின. என் குழந்தை பட்டினியால் வாடுவது போல் உணர்ந்தேன். பல புதிய தாய்மார்களும் இந்த சமயத்தில் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். குழந்தைக்கு போதுமான பால் இல்லை என்று நினைத்து, உங்களை நீங்களே சந்தேகிக்கத் தொடங்குகிறீர்கள். எனக்கு நேர்ந்த அனுபவங்கள் பல புதிய தாய்மார்களுடனும் எதிரொலித்தது. இந்தியாவில் பாலூட்டும் தாய்மார்களுக்கு சரியான ஆதரவு அமைப்பு இல்லாததை உணர்ந்தேன்," என்று ஹெர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார் காயத்ரி.

உலக சுகாதார அமைப்பின்படி, தாய்மார்கள் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பிறகு, குழந்தைக்கு குறைந்தபட்சம் இரண்டு வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது வரை, கூடுதல் உணவுகளுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். பெரும்பாலான தாய்மார்கள் தாய்ப்பாலூட்டுவது இயற்கையாகவே நடக்கும் என்று நம்புகிறார்கள். இருப்பினும், பல தாய்மார்கள் குறைந்தளவில் தாய்ப்பால் சுரப்பு அல்லது லாச்சிங் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட பாலூட்டுதல் நிபுணர்கள், தாய்மார்களின் பிரச்சனைகளை தீர்க்க தேவையான உதவிகளை வழங்குகிறார்கள். இருப்பினும், நாட்டில் தேவைக்கேற்ற பல தகுதி வாய்ந்த பாலூட்டுதல் ஆலோசகர்கள் இல்லை, என்பதை காயத்ரி எடுத்துரைக்கிறார்.

ஃபார்முலா பால் பவுடர் மாற்றுத்தீர்வே தவிர...

சர்வதேச வாரியத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் சான்றளிக்கப்பட்ட பாலூட்டுதல் ஆலோசகர்கள் 204 பேர் மட்டுமே உள்ளனர். தாய்ப்பால் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நிபுணர்கள் இருக்கிறார்கள் என்பதே பல பெண்களுக்கு தெரியாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆரம்பத்தில் தாய்ப்பாலூட்டுவதில் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தொடங்கியபோது, ​​அவர் ஒரு குழந்தை மருத்துவரைச் சந்தித்தார். தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருப்பதால் அதற்கு மாற்றாக ஃபார்முலா பால் பவுடரை பரிந்துரைத்தார்.

ஊட்டச்சத்தின் அடிப்படையில் ஃபார்முலா பால் பவுடர் தாய்பாலுக்கு அடுத்த நெருக்கமான மாற்றுத்தீர்வாக நம்பும் அதே வேளையில், தாய்ப்பாலில் ஃபார்முலா இல்லாத பல்வேறு உயிர்வேதியியல் கலவைகள் இருப்பதாக காயத்ரி பகிர்ந்து கொள்கிறார். அவரது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவே விரும்பியுள்ளார். பாலுாட்டுதல் ஆலோசகரை அணுகியுள்ளார்.

"பால் சப்ளையை எவ்வாறு கண்காணிப்பது, பால் கொடுக்கும்போது குழந்தையை சரியாகப் பிடிப்பது மற்றும் எந்த உணவுகளை எடுத்து கொள்வது என முழுமையாக வழிநடத்தினார். குறைந்த தாய்ப்பால் சுரப்பு பற்றிய எனது கவலைகளையும் அவர் நிவர்த்தி செய்தார். என்னைபோன்றே எனது தோழிகள் பலரும் சரியான தகவல் இல்லாததால் இதே போன்ற சவால்களை எதிர்கொண்டனர்.

இருப்பினும், அந்த நேரத்தில் பெரும்பாலான பெண்கள் அவர்களது தாய்மார்கள், அத்தைகள் மற்றும் பிற உறவினர்களிடமிருந்து நிறைய ஆலோசனைகளைப் பெறுவார்கள். அவை ஆதாரங்களின் அடிப்படையில் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், என பகிர்ந்தார் அவர்.

NariCare சேவைகளைப் பயன்படுத்திய சில தாய்மார்கள்.

நாரிகேர் அதன் சான்றளிக்கப்பட்ட பாலூட்டுதல் ஆலோசகர்களால் தாய்மார்களுக்கு, பாலூட்டுதல் ஆலோசனைகள், 2 மணி நேர பாலுாட்டுதல் கற்றல் படிப்பு மற்றும் ஒரு மாதத்திற்கு வாட்ஸப்பில் நிபுணர்களுடன் உரை நிகழ்த்துதல் ஆகிய சேவைகள் அடங்கிய திட்டத்தை கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் ஒன்று, மூன்று மற்றும் ஆறு மாத தொகுப்புகளில் ரூ.4,500 மற்றும் ரூ.10,000 விலையில் கிடைக்கின்றன.

கூடுதலாக, பிரசவத்திற்குப் பின்னான ஊட்டச்சத்து ஆலோசனைகள், குழந்தைக்கு திடப்பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கான வொர்க்ஷாப்கள், பிரசவத்திற்கு முந்தைய யோகா, முக்கிய மறுவாழ்வு, பிரசவத்திற்குப் பின் மனநலம் மற்றும் பச்சிளம் குழந்தையின் தூக்க வழிகாட்டுதல் ஆகிய சேவைகளை வழங்குகிறது. இந்த திட்டங்களுக்கான கட்டணம் ரூ.7500 முதல் ரூ.39,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவரது ஸ்டார்ட்அப் மாடலின் மற்றொரு முக்கிய அம்சம், ஆலோசனை சேவைகளைப் பெற்ற தாய்மார்களுக்காக வாட்ஸ்அப்பில் பிரத்யேக தாய்ப்பால் ஆதரவு குழுவை உருவாக்குவது. இந்தக் குழுவிற்குள், தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலூட்டும் பயணங்கள் தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகளை தாராளமாக பதிவு செய்யலாம் மற்றும் சான்றளிக்கப்பட்ட பாலூட்டுதல் நிபுணர்களிடமிருந்து சரியான நேரத்தில் பதில்களைப் பெற முடியும்.

ஸ்டார்ட்அப் ஆனது ஸ்பெக்ட்ரா, மெடேலா, டாக்டர். பிரவுன்ஸ் மற்றும் கொமோட்டோமோ போன்ற பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்து, அதன் வாடிக்கையாளர்களுக்கு பம்ப்கள் மற்றும் ஸ்டெர்லைசர்கள் போன்ற தாய்ப்பால் தயாரிப்புகளை வழங்குகிறது. கூடுதலாக, அவர்களின் சமூக ஊடக தளங்கள் மூலம் தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

"தாய்ப்பால் கொடுக்கும்போது, ​​முதல் சில வாரங்கள் கடினமானவை. ஆனால் காலப்போக்கில், தாய்மார்கள் அதைக் கட்டுப்படுத்துகிறார்கள். எனவே, ஒரு நிறுவனமாக, எதிர்காலத்தில் தாய்ப்பாலைத் தவிர மற்ற அம்சங்களுக்கான சேவைகளை வழங்க திட்டமிடுவோம். தற்போது, ​​தாய்ப்பாலூட்டுதல் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்கு உதவுவதே எங்கள் நோக்கம்," என்கிறார் காயத்ரி கனுமுரி.

தமிழில்: ஜெயஸ்ரீ