37 ஆண்டுகளுக்கும் மேலாக செவிலியர் பணியாற்றி, சுகாதாரத் துறையின் முன்னேற்றங்களுக்காகவும், செவிலியர்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து பல மாற்றங்களுக்கு வித்திட்ட கோவாவை சேர்ந்த நீலிமா, ரூ.2 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய உயரிய "ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது"-க்கான 10 இறுதி போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜிசிசி நாடுகளில் இயங்கி வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதத்தில், "ஆஸ்டர் கார்டியன்ஸ் குளோபல் நர்சிங் விருது"- ஐ வழங்கி வருகிறது. விருதுடன் ரூ.2 கோடியை பரிசுத் தொகையையும் வழங்கி ஊக்கப்படுத்துகிறது.
2022ம் ஆண்டு முதல் விருதை வழங்கி வரும் நிலையில், இந்தாண்டுக்கான முதல் 10 இறுதிப் போட்டியாளர்களை வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான விருதிற்கு 202 நாடுகளைச் சேர்ந்த 78,000க்கும் அதிகமான செவிலியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதிலிருந்து 10 இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தான், நீலிமா பிரதீப்குமார் ரானே.
கோவாவின் கனாகோனாவில் வளர்ந்த நீலிமா, ஒரு சுகாதார முகாமில் தன்னார்வத் தொண்டு செய்தபோது தான் செவிலியர் ஆகுவதற்கான உத்வேகம் பெற்றார். அங்கு நோயாளிகளுக்கு உதவுவதற்காக மருத்துவர்களுடன் செவிலியர்கள் எவ்வாறு பணியாற்றுகிறார்கள் என்பதை கண்டார்.
பின்னர், அவர் பஞ்சிமில் உள்ள அரசு நர்சிங் பள்ளியில் பொது செவிலியர் படிப்பைத் படித்தார். அதைத் தொடர்ந்து IGNOU இல் நர்சிங்கில் BSc பட்டம் பெற்றார். பட்டம் முடித்த பின், கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாளர் செவிலியராக அவரது வாழ்க்கையைத் தொடங்கி, இறுதியில் உதவி மேட்ரனாக ஓய்வு பெற்றார். கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரத் துறையில் பணியாற்றியுள்ளார். தற்போது நர்சிங் அசோசியேஷன் கோவா மாநிலக் கிளையின் தலைவராகவும், இந்திய நர்சிங் கவுன்சில் உறுப்பினராகவும் உள்ளார்.
"செவிலியராக வாழ்க்கையை துவக்கிய ஆரம்ப கால நாட்கள் சவாலானதாக இருந்தன. கோவா மருத்துவக் கல்லூரியில் பணியாளர் செவிலியராக பணிபுரிந்து, செவிலியர் விடுதியில் வசித்தபோது சில சமயங்களில் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைப்பது கடினமாக இருந்தது. அப்போது, பிடித்தம் எல்லாம் போக சம்பளம் 717 ரூபாய் கிடைக்கும். சவால்கள் இருந்தபோதிலும், ஒரு ஆழமான நோக்கத்தை உணர்ந்தேன்," என்று நிலீமா ஹெர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.
37 ஆண்டுகால வாழ்க்கையில், ரானே குறிப்பிடத்தக்க உயர்வையும் சவால்களையும் கடந்து வந்துள்ளார். மக்களுக்கு சேவை செய்யும் செவிலியர் பணியின் நோக்கத்தை நன்கு உணர்ந்த அவர், அதன் அடுத்தக்கட்டமாக செவிலியர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி பல மாற்றங்களுக்கு வித்திட்டார்.
2014ம் ஆண்டில் கோவா நர்சிங் கவுன்சிலை நிறுவ உதவினார். அவரது முயற்சிகளின் மூலம், புதிய அங்கீகாரம் பெற்ற நர்சிங் பள்ளிகள் உருவாகின. இதன்மூலம், ஆண்டுதோறும் கோவாவில் ஆர்வமுள்ள செவிலியர்களுக்கான கல்வி வாய்ப்புகளை மேம்பட்டு, தகுதிவாய்ந்த நர்சிங் நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.
பகுதி நேர பட்டதாரி மற்றும் முதுகலை நர்சிங் பட்டப்படிப்பு படிக்கும் செவிலியர்களுக்கு படிப்பு விடுப்பு வழங்க வேண்டும் என்று அவர் பொது சுகாதாரத் துறையிடம் வாதிட்டார்.
வண்ண-குறியிடப்பட்ட தொட்டிகளை செயல்படுத்துதல், உணவு கழிவுகளைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதை உறுதி செய்தல் மூலம் உயிரியல் மருத்துவக் கழிவுகளை பிரிப்பதை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளுக்கும் அவர் தலைமை தாங்கினார்.
அவர்களுடைய முயற்சிகளுக்கு பலன் கிடைத்ததுடன் அவருக்கான அங்கீகாரங்களையும் பெறத் தொடங்கினார். ஆம், 2008 ஆம் ஆண்டு "ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருதை" பெற்ற முதல் கோவா செவிலியர் என்ற பெருமையை பெற்றார்.
"சிறந்த சம்பள கட்டமைப்புகள் மற்றும் பணி நிலைமைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக 3,000 செவிலியர்களிடமிருந்து கையெழுத்துக்களை சேகரித்து, கோவா முதலமைச்சரிடம் அளித்தோம். இது உறுதியான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது. செவிலியர்களின் உரிமைகளுக்காக வாதிடும் நீண்ட கடினமான செயல்முறை எனது பொறுமையை சோதித்தாலும், எனது உறுதியை பலப்படுத்தியது," என்றார்.
தாய்ப்பாலை ஊக்குவிப்பதற்காக UNICEF மற்றும் WHO ஆல் தொடங்கப்பட்ட குழந்தை-நட்பு மருத்துவமனை முன்முயற்சியில் கோவா அரசுடன் இணைந்து அவர் பணியாற்றினார். மேலும், தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகள், அதன் நன்மைகள், தாய்பால் புகட்டும் உத்திகள் பற்றியும், தாய்ப்பால் சுற்றி சமூகத்திலுள்ள தவறான புரிதல்களை கலைய செய்வதற்காகவும் நர்சிங் மாணவ,மாணவிகளுக்கு வொர்க்ஷாப்களை நடத்தினார்.
இஸ்கிமிக் இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் மற்றும் தடுப்பு பற்றி சமூகங்களுக்குக் கற்பிக்க டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூட்டு சேர்ந்தார்.
"செவிலியர்கள் அயராது உழைத்தாலும், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகள் எப்போதுமே அவர்களது அயராத அர்ப்பணிப்புக்கு ஈடாக இருப்பதில்லை. இதனால், சில செவிலியர்கள் வெளிநாட்டில் வாய்ப்புகளைத் தேடுகின்றனர். அங்கு அவர்களுக்கு ஊதியம், தொழில் வளர்ச்சி மற்றும் மிகவும் சீரான பணி-வாழ்க்கைச் சூழல் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்தியாவில் செவிலியர் கல்வியை அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும்," என்கிறார்.
செவிலியர் பள்ளிகளின் அதிகரிப்பு மற்றும் கோவாவில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை கிடைக்க செய்வது நர்சிங் துறை மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய படியாகும். சுகாதாரப் பணியாளர்களின் மதிப்பைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்து, வேலை நிலைமைகள் மற்றும் ஊதியத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தொழில் மற்றும் அங்கீகாரத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், இந்தியாவில் நர்சிங் செழித்து வளர வாய்ப்பு உள்ளது. சம்பளத்தை அதிகரிப்பது மற்றும் பணி நிலைமைகளை மேம்படுத்துவது ஆகியவை தொழிலை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றும்," என்று கூறிமுடித்தார்.
பத்மஸ்ரீ சாந்தி தெரசா - அந்தமான் தீவு பழங்குடியின மக்களுக்கு உதவிடும் தன்னலமற்ற செவிலியர்!