'வக்கீல் டூ தொழில்முனைவர்' - பிசி வாழ்க்கையில் விளையாட்டின் முக்கியத்தை உணர்த்தும் சோனம்!

05:00 PM Nov 22, 2024 |

ஒரு வழக்கறிஞராகயிருந்த சோனம் தனேஜா விளையாட்டு தொழில்நுட்ப தளத்தின் ஹடிலின் இணைநிறுவனராகி எப்படி தொழில்முனைவுக்குள் அறிமுகமாகினார்?

பள்ளிப்பருவத்தில் விளையாட்டில் மாஸ் காட்டிய சோனம் தனேஜா, பாட்மிண்டன், படேல் டென்னிஸ், ஃபுட்பால், வாலிபால் ப்ளேயர். ஆனால், அவரது கேரியரை அமைத்து கொள்ளும்போது அவர் விளையாட்டையோ, தொழில்முனைவையோ தேர்ந்தெடுக்கவில்லை. முற்றிலும் மாறாக, சட்டம் படித்து வேறு திசையில் பயணித்தார்.

இருப்பினும், 2014ம் ஆண்டு நீண்ட துார ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டது, விளையாட்டின் மீதான அவரது ஆர்வத்தை மீண்டும் துாண்டியது. இறுதியில், இந்த ஆர்வம் ஒரு வழக்கறிஞராகயிருந்த சோனமை தொழில்முனைவராக மாற்றியது. ஆம், விளையாட்டு தொழில்நுட்ப தளமான Hudle- இல் இணை நிறுவனர் மற்றும் வணிக மேம்பாட்டுத் தலைவர் சோனம் தனேஜா. ஹடில் ஆனது, விளையாட்டு மைதானங்களுடன் வீரர்களை இணைக்கிறது மற்றும் வசதி மேலாண்மையை மேம்படுத்த உதவுகிறது.

உள் விளையாட்டு அரங்குகளை பதிவு செய்வதற்கு மக்கள், நேரடியாக சென்று பார்வையிட வேண்டிருந்தது. இதில், பெரும்பாலும் இரட்டை முன்பதிவுகள் மற்றும் கடைசி நிமிட ரத்து ஆகிய சிக்கல்கள் நீடித்தன.

இந்நிலையை நெறிப்படுத்தியுள்ள ஹடில் ஆப், நாட்டின் 60 நகரங்களில், 1,300க்கும் மேலான அரங்குகளுடன் மாதம் ஒரு லட்சம் கேமர்களை ஊக்குவிப்பதாக கூறுகிறது. மேலும், 5,00,000க்கும் அதிகமான வீரர்களை உள்ளடக்கிய சமூகத்தைக் கொண்டுள்ளது. ஸ்போர்ட்ஸ்டெக் தளமான ஹடில், இன்ஃப்ளெக்ஷன் பாயின்ட் வென்ச்சர்ஸ் மற்றும் ஸ்கை இம்பாக்ட் கேபிட்டல் மூலம் இயக்கப்படும் அதன் ப்ரீ-சீரிஸ் ஏ சுற்றில் ரூ.7 கோடி நிதி திரட்டியுள்ளது.

விளையாட்டு + தொழில் முனைவு

2016ம் ஆண்டு சோனமின் கணவர் சுஹைல் நரேனால் தொடங்கப்பட்ட 'ஹடில்' விளையாட்டு நிகழ்வுகளின் தளமாகத் தொடங்கி, பின்னர் சமூகத் தளமாக பரிணமித்தது. சோனம் முற்றிலும் வேறு கேரியரிலிருந்து ஹட்லுக்குள் வந்தாலும், அவருக்குள் என்றுமிருந்த விளையாட்டு ஆர்வத்தால், முதலில் விஷயங்களை கற்கத் தொடங்கினார். அதற்காகவே சோனம் தொடக்கத்தில் இணை நிறுவனராக நிறுவனத்தில் இணையவில்லை. அவர் வணிகத்தின் வளர்ச்சி மற்றும் உத்தியை வழிநடத்தினார். பின்னர் 2023 இல் இணை நிறுவனராக மாறினார்.

"மக்கள் ஒரு அவுட்டிங் பிளானாக வெளியே மைதானங்களில் பணம் கட்டி, விளையாடத் தொடங்கினர். விரைவில், இந்த ட்ரெண்ட் பிரபலமாகியது. அத்துடன் எனக்குள்ளிருந்த விளையாட்டு ஆர்வமும் ஒன்று சேர்ந்ததில், கேரியரை மாற்றினேன். கோவிட்டுக்கு சற்று முன்பு தான் ஹட்லில் பயணத்தை தொடங்கினேன்.

ஆனால், தொழில் எவ்வாறு செயல்படுகிறது என தொடக்கத்திலிருந்து கற்றுக் கொள்ள விரும்பினேன். தொழில்துறையை ஆராய்ந்து ஆழமான மற்றும் சிறந்த புரிதலைப் பெற விரும்பியதால், வணிகத்தின் நிறுவனராக அல்லாமல், அனைத்து பணிகளையும் செய்யத் தொடங்கினேன்" என்று ஹெர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.

ஆரம்ப ஆண்டுகளில், அவர் வெவ்வேறு நகரங்களுக்கு பயணித்து அங்கு விளையாட்டு சமூகங்களை உருவாக்கினார். உதாரணமாக, அவர் டெல்லி-என்சிஆர் முழுவதும் பெண்கள் கால்பந்து சமூகத்தை வழிநடத்தினார். சோனம் இன்றுவரை அவர் கட்டியெழுப்பிய சமூகத்துடன் தொடர்ந்து ஆழ்ந்த ஈடுபாடுடன் இருக்கிறார்.

"வணிகக் கூட்டம் தொடர்பாக வேறு ஊருக்கு சென்றால், அங்குள்ள பெண்கள் சமூகத்துடன் சேர்ந்து பிக்கிள்பால் விளையாடுவேன். ஹடில் ஆப்பை பெண்களிடம் அறிமுகப்படுத்த, இது சிறந்த வழியாகும். ஆரம்பத்தில், பெண்களை விளையாடுவதற்கு ஒன்றிணைப்பதே எனது பங்கு என்று நினைத்தேன். ஆனால் ஹடிலின் யோசனையை விரிவுப்படுத்தி அதற்குள் பல விளையாட்டு மைதானங்களை கொண்டுவரும் போது பெரும் மகிழ்ச்சி கிடைத்தது."

அப்போதுதான் என் கவனத்தை மாற்றி, பெரிய அளவில் பங்களிக்க முடிவு செய்தேன். விளையாட்டு வீராங்கனைகளுக்கு விளையாட்டு உள்கட்டமைப்பு மிகவும் முக்கியமானது.

உண்மையான பிரச்சனை ஆட்களை விளையாட வைப்பது மட்டுமல்ல - போதுமான நல்ல வசதிகளை அமைத்து தருவதுதான். எங்களுக்கு தரமான உள்கட்டமைப்பை வழங்கும் மைதானங்கள் தேவை, அங்கு தான் பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். சரியான பார்க்கிங், சுத்தமான கழிவறைகள் மற்றும் எல்லாவற்றையும் அணுகக்கூடியதாக அமைக்க விரும்புகிறோம். ஆண் வீரர்களுக்கு இது விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் நிறைய பெண்கள் இந்த விஷயங்களில் அக்கறை காட்டுகிறார்கள். எங்களது பல விளையாட்டு கூட்டாளிகளிடமும் மைதானத்தில் இந்த அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் எனும் கருத்தை முன் வைக்கிறோம்.

" விளையாட்டை அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்களது நோக்கம். அதனால் மக்கள் விளையாட்டை வாழ்க்கை முறையாக மாற்ற முடியும். அவர்கள் விரும்பினால் ஒவ்வொரு நாளும் விளையாட முடியும்," என்று கூறினார்.

9-5 வேலையிலிருந்து தொழில்முனைவோருக்கு மாறியது சோனமிற்கு ஒரு பெரிய மாற்றமாகும். ஒரு ஸ்டார்ட்அப்பின் பணிப்பாய்வு மற்றும் கலாச்சாரத்துடன் ஒப்பிடும்போது மிகவும் வித்தியாசமான தொழில்முறை அமைப்பில் இருந்து வந்ததால் அவர் நிறைய கற்க வேண்டியிருந்தது. அவரது பயணத்தை திரும்பிப் பார்க்கையில், அவர் உணர்ந்த முக்கியமான விஷயங்களில் ஒன்று, எந்த வயதிலும் ஒருவர் கற்றுக்கொள்ளலாம் என்பதே, என்கிறார்.

"நீங்கள் ஒரு வேலையைச் செய்யும்போது, ​​சிறிது நேரத்திற்குப் பிறகு பணிசார்ந்த சிந்தனைகளை நிறுத்திவிடலாம். ஆனால் இங்கே சிந்தனைக்கு முடிவே இல்லை. நீங்கள் எப்பொழுதும் வேலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள், அது எனக்கு ஆரம்பத்தில் பெரும் சவாலாக இருந்தது. இப்போது ஒரு புதிய இயல்பானதாக மாறிவிட்டது.

"பெரும்பாலும், நாம் ஒரு வேலையில் இருக்கும்போது, ​​நம்முடைய குறிப்பிட்ட பணிபாத்திரங்களுக்கள் நாம் கட்டுப்படுத்தப்படலாம். ஆனால் நீங்கள் திறந்த மனதுடன் இருந்தால் கற்றல் நின்றுவிடாது என்பதை ஸ்டார்ட்அப்கள் காட்டுவதாக உணர்கிறேன். நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் முக்கியமான விஷயம் இது தான். எந்த வயதிலும் ஒருவர் கற்றுக்கொள்ளலாம்," என்றார்.

தமிழில்: ஜெயஸ்ரீ