பணி மறுபிரவேசம்: கரியர் பிரேக் எடுத்த பெண்களுக்கு நெகிழ்வான வேலை அமைத்துதரும் FlexiBees

11:38 AM Nov 25, 2024 | YS TEAM TAMIL

மகப்பேறு, நேரமின்மை, பணியிடம் அருகில் இல்லாமை போன்ற காரணிகளால் கரியர் பிரேக் எடுத்த பெண்களுக்கு ஏற்றாற்போன்று பணிகளை அமைத்து தரும் FlexiBees எனும் தளத்தை உருவாக்கி, பெண் சமூக முன்னேற்றுத்துக்கு உதவும் முப்பெண்கள்.

பெரும்பாலான பெண்களின் தொழிற்வாழ்க்கையை மகப்பேறுவிற்கு முன், மகப்பேறுவிற்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். ஏனெனில், மகப்பேறுவுக்குபின் குழந்தையை கவனித்து கொள்ள வேண்டிய பொறுப்பு கூடுதலாகும்போது, அதனை சமன்செய்யும் வகையிலான பணி நேரங்களும், பணிச்சூழலும், பணிகளும் இல்லாததால், முடிவு அவர்களை இல்லத்தரசிகளாக்கிவிடுகிறது.

அப்படி தான், ஷ்ரேயா பிரகாஷின் தோழியான தீபா சுவாமி, நெகிழ்வான பணி விருப்பங்கள் குறைவாக இருந்ததால், மகப்பேறுவுக்கு பிறகு அவர் பணிக்குத் திரும்பி செல்வது மிகவும் கடினமாக இருந்தது. திருமணம் மற்றும் மகப்பேறு காரணமாக பணியிடத்தை விட்டு வெளியேறும் இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான திறமையான பெண் தொழில் வல்லுநர்களின் கதையும் இது தான்.

இதனை நன்கு உணர்ந்த ஷ்ரேயா பிரகாஷ், அவரது தோழிகளான தீபா சுவாமி, ராஷ்மி ராம்மோகனுடன் இணைந்து மகப்பேறு, நேரமின்மை, பணியிடம் அருகில் இல்லாமை போன்ற காரணிகளால் கரியர் பிரேக் எடுத்த பெண்களுக்கு ஏற்றாற்போன்று பணிகளை அமைத்து தரும் FlexiBees எனும் தளத்தை உருவாக்கினர்.

பகுதி நேர, புராஜெக்ட் அடிப்படையில் மற்றும் வீட்டிலிருந்தே பணிபுரியும் பணிகளுக்கு பெண்களை இணைக்கிறது.

இதுவரை உலகெங்கிலும் உள்ள 700க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பெண்களை பணிக்கு சேர்த்துள்ளது. மேலும், அதன் தளத்தில் 60,000க்கும் மேற்பட்ட பெண் தொழில் வல்லுநர்களை கொண்டுள்ளது.

கரியர் பிரேக் எடுத்த பெண்களுக்கென ஓர் வேலைவாய்ப்பு தளம்!

பெங்களூர் ஐஐஎம்மில் எம்பிஏ பட்டம் பெற்ற ஷ்ரேயா, யூனிலீவரில் 8 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். இருப்பினும், தொழில்முனைவு அவரை என்றென்றும் ஈர்த்த ஒன்று. அவருக்குள் வணிக யோசனைகள் பல இருந்தாலும், அவரது தோழி தீபாவின் அனுபவத்தின் வாயிலாக, திருமணம் அல்லது மகப்பேறுவிற்கு பிறகு வேலை தொடர்பாக பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நுட்பமாக அறிந்தார்.

தொடர்ந்து இதுப்பற்றி ஆய்வின் முடிவில், 2017ம் ஆண்டில் ஷ்ரேயா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO), தீபா தலைமை திறமை அதிகாரி (CTO), மற்றும் ராஷ்மி தலைமை இயக்க அதிகாரி (COO) செயல்பட FlexiBees எனும் தளத்தை உருவாக்கினர்.

FlexiBees -ன் வேலை வாய்ப்பினை பெற விரும்பும் பெண்கள், முதலில் ப்ளக்ஸிபீ செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும். பின்னர், ஆப்பில் கேட்கப்படும் சில கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் அவர்களின் திறன்களையும், ரெசியூமையும் அப்லோடு செய்ய வேண்டும். அவர்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்தின் வாயிலாக, அவர்களுடைய திறன்கள் மற்றும் தேவைகளுடன் பொருந்தும் பணியுடன் அவர்கள் இணைக்கப்படுகிறார்கள்.

"இந்தியாவில் அதிகமான பெண்கள் கல்வி கற்று, பணியிடங்களுக்குள் நுழைவதால், அவர்களின் தொழில் திறன்கள், அவர்களின் அடையாளத்தின் முக்கியமான பகுதிகளாகும். இந்தத் திறன்களைப் பயன்படுத்துவதற்கான வழிகள் எதுவும் கிடைக்காதபோது, ​​அது குழப்பமடையத் தொடங்குகிறது," என்றார் ஷ்ரேயா.

இந்தியா போன்ற சமூகங்களில், பெண்கள் தங்கள் தொழில்சார் வேலைகளை விட குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்கும் போது, ​​பெரும்பாலும் சமூக மற்றும் அமைப்பு ரீதியான காரணிகளால் பெரும்பாலும் அவர்கள் ஏதோ ஒரு முழுமையற்ற தன்மையை உணர்கிறார்கள். அவர்களுக்காக உருவாக்கப்பட்ட தளம் தொடங்கப்பட்டவுடன் வெற்றியடையாது என்பதை நன்கு உணர்ந்த நிறுவனர்கள், பெண்களுக்கு பொருத்தமான பணிகளை வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்வதில் கவனம் செலுத்தினர்.

FlexiBees நிறுவனங்களின் நெகிழ்வான தேவைகளுக்கேற்ற, திறமையான மற்றும் தகுதிவாய்ந்த பெண் நிபுணர்களை பொருத்துகிறது. நிறுவனங்களும், FlexiBees தளத்தில் அனுபவம் வாய்ந்த திறமையாளர்களை அவர்களது தேவைக்கேற்ப பணியமர்த்த முடியும் என்பதால், அவர்களது ஊதிய செலவுகளையும் குறைத்து கொள்ள முடிகிறது.

அதே போல, FlexiBees இல் உள்ள பெண்கள் சராசரியாக 5-7 வருட அனுபவத்தைக் கொண்டுள்ளனர். இதனால், இவர்களை பணியமர்த்துவதன் வாயிலாக நிறுவனங்கள் விரைவாக வளர்ச்சி அடைகின்றன.

நேரம், சப்போர்டிங் சிஸ்டம், அர்ப்பணிப்பு, பணி நெறிமுறைகள், திறன்கள் மற்றும் நெகிழ்வுத்தன்மை என பல காரணிகளுடன் பொருந்தக்கூடிய பணிகளை கண்டறிய தனியுரிம சோதனை தொழில்நுட்பத்தை உருவாக்கினோம். இத்தொழில்நுட்பம் பெண்களுக்கு அவர்களின் திறன்கள் மற்றும் வாழ்க்கை நிலைத் தேவைகளுக்கு ஏற்ப வேலை கிடைப்பதை உறுதி செய்கிறது. மேலும், நிறுவனங்கள் அவர்களது வேலைகளுக்கு நியாயம் செய்யக்கூடிய பணியாளர்களை பணியமர்த்துகின்றன.

"இந்தியா, சிங்கப்பூர், யுகே, யுஎஸ் மற்றும் யுஏஇ போன்ற நாடுகளில் உள்ள பெரும்பாலான ஸ்டார்ட்அப்கள் மற்றும் எஸ்எம்பிகளுக்கு விற்பனை, டிஜிட்டல் மார்க்கெட்டிங், உள்ளடக்க எழுத்தாளர்கள், விர்ச்சுவர் அஸிஸ்டன்ஸ் மற்றும் ஹெச்ஆர் உள்ளிட்ட பணிகளுக்கு, ப்ளக்ஸிபீ திறமையானவர்களை பணியில் அமர்த்தியுள்ளது," என்று கூறினார் அவர்.

பணி மறுபிரவேசம், வீட்டில் மரியாதை...

பணி பிரேக் எடுத்த பெண்கள் என்றாலே நிறுவனங்களில் அவர்களின் தரம் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. அதே போன்று, வீட்டிலும் அவர்களுக்கான மரியாதையும், முடிவெடுப்பதில் இருக்கும் அவர்களின் பங்கும் குறைகிறது.

இந்நிலையை உயர்த்தியுள்ள ப்ளக்ஸிபீ, பெண்கள் இழந்ததை மீட்டெடுக்கிறது. பெண்களை மீண்டும் பணியிடத்தில் ஒருங்கிணைக்க உதவுவது மட்டுமல்லாமல், வேலை சந்தையில் நெகிழ்வுத்தன்மைக்கான வளர்ந்து வரும் தேவையையும் நிவர்த்தி செய்துள்ளது.

"சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட மூன்றாம் தரப்பு கணக்கெடுப்பின்படி, வொர்க் ஃப்ரம் ஹோம் மற்றும் பார்ட் டைம் வேலைகளுக்கு எங்களது தளத்தின் மூலம் நியமிக்கப்பட்ட பெண்கள், அவர்களது குடும்ப வருமானத்தில் சராசரியாக 22% அதிகரித்துள்ளனர். குடும்ப வருவாயில் பங்களிக்கும் உணர்வும், அவர்களின் வருமானமும், அவர்கள் இழந்த நம்பிக்கை, முடிவெடுக்கும் சக்தி மற்றும் குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் அவர்களது மரியாதை ஆகியவற்றை மேம்படுத்துகிறது," என்றார் ஷ்ரேயா.

சமீபத்தில் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மற்றும் உலகளாவிய ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர்களால் கூடுதலாக வழங்கப்பட்ட இன்ஃப்ளெக்ஷன் பாயிண்ட் வென்ச்சர்ஸிலிருந்து வெளியிடப்படாத ப்ரீ-சீரிஸ் A நிதிச் சுற்றில் நிதி திரட்டி உள்ளது. இருப்பினும், ஒரு பெண் தொழிலதிபராக எங்கு இருந்தாலும் கடினமே என்கிறார் ஷ்ரேயா

"முதலீட்டாளர்கள் பெண் தொழில்முனைவோரை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். வளர்ச்சி மற்றும் வாய்ப்பை மையமாகக் கொண்ட "உயர்வு" கேள்விகளுக்குப் பதிலாக அதிக "தடுப்பு" கேள்விகள், அதாவது, அபாயங்கள் அல்லது என்ன தவறு நடக்கக்கூடும் என்பதைக் குறித்த கேள்விகளையே கேட்கிறார்கள்.

உங்கள் நெட்வொர்க்கை உருவாக்குங்கள். அங்குதான் உங்கள் முதல் 10, 20 அல்லது 50 வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். ஸ்டார்ட்அப்களாக, எங்களிடம் மார்க்கெட்டிங் பட்ஜெட்களோ அல்லது பிராண்ட் மதிப்புகளோ இல்லை. நமது குரல்களின் மூலம் நமது பிராண்ட்களை உருவாக்க வேண்டும்.

எனவே, நீங்கள் என்ன செய்கிறீர்கள் மற்றும் உங்கள் சாதனைகளைப் பற்றி பேச ஒருபோதும் தயங்காதீர்கள், ஏனெனில் நீங்களே அவ்வாறு செய்யாவிட்டால், யார் தான் பேசுவார்கள்?" என்று பகிர்ந்தார்.

தமிழில்: ஜெயஸ்ரீ