இந்தியாவின் குப்பை பிரச்சனையை தீர்க்கும் நண்பர்கள் - கழிவு நிர்வாக சிக்கலுக்கு வழிகாட்டும் 'Recircle'

12:58 PM Nov 29, 2024 |

2016ல் மும்பையில் உள்ள மிகப்பெரிய குப்பை மேட்டில் உண்டான தீயை படம் பிடித்து வெளியிட்டது. இந்தியாவின் அதிகரித்து வரும் கழிவு நிர்வாக பிரச்சனையை உணர்த்திய இந்த படம் பொதுமக்கள் மத்தியில் கவலையையும் உண்டாக்கியது.

தானே கால்வாய் அருகே அமைந்துள்ள, இந்த குப்பை போடும் இடம் 326 ஏக்கர் பரப்பளவில் இருந்தது, தினமும் 3,700 மெட்ரிக் டன் குப்பை இங்கு சேகரிக்கப்படுகிறது. நகர குப்பைகளில் மூன்றில் ஒரு பங்கு இது.

இதனிடையே, தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்களான ராகுல் நைனியானி மற்றும் குராசிஷ் சிங் ஷானி, குப்பைகள் பிரச்சனையை சமாளிக்க 'ரீசர்கிள்' (ReCircle) நிறுவனத்தை அதே ஆண்டு துவக்கினர்.

இன்று, தரவுகள் மற்றும் சப்ளை செயின் நிர்வாக நிறுவனமான ரீசர்கிள், இந்தியாவின் குப்பைகள் சப்ளை செயினை டிஜிட்டல்மயமாக்கி, அதன் வாயிலான தரவுகளை பணமாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

துவக்கம்

2015ல் நைனானி மற்றும் ஷானி, கூகுள் ஸ்டார்ட் அப் வார சந்திப்பில் அறிமுகம் ஆயினர். அப்போது, டியோனர் பகுதியில் உள்ள வீடுகளின் குப்பைகளை சேகரிப்பதற்கான என்.ஜி.ஓ நிறுவனத்தை துவக்கினர். எனினும், அடுத்த ஆண்டு இங்கு ஏற்பட்ட தீ காரணமாக, நிறுவனர்கள் தங்கள் திட்டத்தை, குப்பைகளை குப்பை மேடு மற்றும் கடல்களில் இருந்து விலக்கும் திட்டத்தில் கவனம் செய்ய வைத்தது.

“டியோனார் போன்ற குப்பை கொட்டும் இடம் அருகே வசிப்பவர்களின் ஆயுள் காலம், 38 வயது என தெரிந்து கொண்டோம். இவர்கள் குப்பை கொட்டும் இடத்தில் பணி செய்யவில்லை என்றாலும், அதன் விளிம்பு பகுதிகளில் வசிப்பவர்கள். இது ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்தது. மும்பையின் இதய பகுதியில் இது நிகழ்ந்தது,” என்று யுவர்ஸ்டோரியிடம் ரீசர்கிள் சி.இ.ஓ நைனானி கூறினார்.

“குப்பைமேடு அருகே வசிப்பவர்களை பாதிக்கிறது என்றால், எத்தனை வேகமாக மற்றவர்களையும் பாதிக்கும், எனும் கேள்வியும் எழுந்தது.

ரீசர்கிள் முதலில் பி2சி மாதிரியில் இயங்கியது. எனினும், 2019ல் சூழலில் தாக்கம் செலுத்த பெரிய அளவில் குப்பைகளை சேகரிக்க வேண்டும், என தீர்மானித்து பி2பி மாதிரிக்கு மாறியது.

“இங்கிருந்து தான் எங்கள் பெரும்பாலான வளர்ச்சி வருவதை கண்டோம் என்கிறார். நிறுவனம் துவங்கிய போது கழிவு நிர்வாகப் பிரிவு ஒரு துறையாக இருக்கவில்லை, என்கிறார். துவக்கத்தில் மக்களை மறுசுழற்சியின் தேவைக்கு ஒப்புக்கொள்ள வைப்பது கடினமாக இருந்தது.

இணை நிறுவனர்களுக்கு கழிவு நிர்வாகத் துறையில் அனுபவம் இல்லாததால் சரியான குழுவை அமைப்பதும் சவாலாக இருந்தது.

“இது கவர்ச்சியாக தோன்றாத வர்த்தகம். இது வளரும் வாய்ப்பு கொண்ட தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் அல்ல. எனவே, சரியான குழுவை, சரியான ஊழியர்களை கண்டறிவது, முதலீட்டாளர்கள் பார்வையில் வாய்ப்புகளை உருவாக்குவது சவாலாக இருந்தது, என்கிறார்.

வர்த்தக முறை

ரீசர்கிளின் பிரத்யேக மென்பொருள் `கிளைமாஒன்` (ClimaOne) குப்பை சேகரிப்பாளர்களை, மறுசுழற்சி நபர்களோடு இணைக்கும் தலைகீழ் சப்ளை செயின் தீர்வுகளை வழங்குகிறது.

இந்த சப்ளை செயினில் பொருட்கள் செல்வதை பின் தொடர்ந்து கண்காணிக்க வழி செய்து, சேகரிக்கப்படும் கழிவுகள் அளவு, அதன் மதிப்பு உள்ளிட்ட தரவுகளை பெற இந்த மேடை நிறுவனத்திற்கு உதவுகிறது.

ரீசர்கிள் இந்த தரவுகளை யூனிலீவர், கோகோ கோலா, நெஸ்லே உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து, அவை அரசு நிர்ணயித்துள்ள சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக இலக்குகளை அடைய இந்த கிரெடிட்களை பயன்படுத்திக்கொள்ள வழி செய்கிறது.

இந்நிறுவனம், இந்தியாவில் 250க்கும் மேலான இடங்களில் 400 சேகரிப்பு பாட்னர்களுடன் இணைந்து செயல்படுகிறது. 2024 மார்ச்சில், நிறுவனம் தனது சப்ளை செயின் வாயிலாக 1,69,000 டம் குப்பைகளை பெற்றுள்ளது. இந்த குப்பைகளின் அளவு 2,80,000 மனிதர்களுக்கு சமம், என்கிறார் இணை நிறுவனர்.

மேலும், குப்பை சேகரிப்பவர்களுடனும் நிறுவனம் இணைந்து செயல்படுகிறது. கார் திரட்டி சேவை போலவே இது செயல்படுகிறது. டீலர்களுக்கு சேகரிக்கும் குப்பையில் ஒரு பகுதி அளிக்கப்படுகிறது.

“சுயேட்சையாக வர்த்தகம் கொண்ட சேகரிப்பு பார்ட்னர்களை பெற்றுள்ளோம். அவர்களுக்கு இந்த மேடையை அளித்து, எங்கள் சப்ளை செயினில் அங்கமாக்கி கூடுதல் வருவாய் வழி செய்கிறோம். அவர்களிடம் இருந்து சேகரிக்க வேண்டிய கொள்ளளவுக்கு ஏற்ற வகையில் அவர்களுடன் பரிவர்த்தனை செய்கிறோம்,” என நைனானி விளக்குகிறார்.

பிளாஸ்டிக் நியூட்ரல் ப்ரோகிராம் எனும் மற்றொரு சேவையையும் நிறுவனம் வழங்குகிறது. இந்தத் திட்டம் இ.பி.ஆர் கட்டுப்பாடுகள் தொடர்பாக சிறு மற்றும் குறு தொழில்களுக்கான சேவை அளிக்கிறது.

ஏப்ரல் மாதம் ரீசர்கிள், சர்குலர் அபேரல் இன்னவேஷன் பேக்டரி உடன் இணைந்து பிராஜெக்ட் எக்ஸ்டார் லைப் எனும் புதிய திட்டத்தை துவங்கியது. ஜவுளி கழிவுகளை மையமாகக் கொண்டு இது செயல்படுகிறது. வீடுகள், அலுவலகங்கள், பேஷன் நிறுவனங்களில் இருந்து துணிகளை சேகரிக்கும் வகையில் இது செயல்படுகிறது.

எதிர்கால திட்டம்

அறம் சார்ந்த சுழற்சி தன்மையை நோக்கமாக கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பாட்னர்களுடன் இணைந்து இதற்கான தானே கழிவுகளை மறுசுழற்சி செய்கிறது.

செப்டம்பர் மாதம், நிறுவனம் வென்சர் கேடலிஸ்ட்ஸ், மும்பை ஏஞ்சல்ஸ் மற்றும் அதிக நிகர மதிப்பு கொண்டவர்கள் பங்கேற்ற இணை நிதி சுற்றில் நிதி திரட்டியது. தற்போது ஏ சுற்று நிதிக்கு பேச்சு நடத்தி வருகிறது.

“அறம் சார்ந்த சுழற்சி முறையில் கவனம் மற்றும் பிளாஸ்டிக் கழிவு சப்ளை செயினில் இணைக்கும் திட்டம் ஆகியவற்றின் மூலம், பிளாஸ்டிக் கழிவுகளை கையாளும் நிறுவனங்களுக்கு உயர் தரத்திலான, பின் தொடரக்கூடிய மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருட்களை அளிப்பதோடு, புதிய வருவாய் வழியையும் அளிக்கிறது,” என 3i பாட்னர்ஸ் ஷாலினி சப்பாரியா கூறுகிறார்.

3i பார்ட்னர்ஸ் நிறுவனம் ரீசர்கிள் நிறுவனத்தில், 2023ல் ஏ சுற்றுக்கு முந்தைய சுற்றில் முதலீடு செய்துள்ளது. ஃபிளிப்கார்ட் வென்சர்ஸ் மற்றும் ஆக்குமன் பண்ட் ஐஎன்சி உள்ளிட்டவையும் முதலீடு செய்துள்ளன.

ஏற்கனவே கோகோ கோலா பாட்டில்களை சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்புகிறோம். இந்த நிதி மூலம் எங்களது சொந்த மறுசுழற்சி ஆலை அமைக்க உள்ளோம். இங்கு மறுசுழற்சி பாட்டில்களை புதிய பாட்டில்கள் செய்வதற்கான கிரான்யூல்களாக மாற்றுகிறோம். பிளாஸ்டிக் சப்ளை செயினில் இத்தகைய எதிர்கால ஒருங்கிணைப்பு, சொந்த மறுசுழற்சி ஆலை அமைப்பதற்காக முதலீட்டை பயன்படுத்திக்கொள்ளும் வழிகளில் ஒன்றாக அமைகிறது,” என்கிறார் நைனானி.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் மறுசுழற்சி ஆலை செயல்பாட்டை எதிர்நோக்கும் நிறுவனம், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிளாஸ்டிக் கிரான்யூல்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பையும் ஆராய்கிறது.

2024ல் இந்தியாவின் கழிவு நிர்வாக சந்தை 12.90 பில்லியன் டாலராகும். 2029ல் இது 13.30 பில்லியன் டாலாராக அதிகரிக்கும் என மோர்டார் இண்டெலிஜென்ஸ் தெரிவிக்கிறது. ஆண்டு அடிப்படையில் 6.10 சதவீதம் வளர்ச்சி காண உள்ளது.

தற்போது இணைந்து செயல்பட்டு வரும் பிராண்ட்களுடன் மறுசுழற்சி பொருட்களை விற்பதன் மூலம் எதிர்கால வருவாய் வாய்ப்பையும் அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2023 நிதியாண்டு மூலம் நேர்நிறை ரொக்க வரத்து பெற்றுள்ள நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 23 மில்லியன் டாலரை இலக்காகk கொண்டுள்ளது.

பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்தக்கூடிய இந்தியாவின் பிரகாசமான ஸ்டார்ட் அப்களை உள்ளடக்கிய யுவர்ஸ்டோரியின் டெக் 30 பட்டியலில் இடம்பெற்ற நிறுவனமான ரீசர்கிள் அமைகிறது.

ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan