இந்தியாவில் மருந்து, சுகாதாரத் துறையில் 4 சாதிக்கும் சக்திவாய்ந்த பெண்கள்!

06:10 PM Nov 27, 2024 |

இந்தியாவில் மருந்து, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் சக்திவாய்ந்த பெண்களாக வலம் வரும் கிரண் மஜும்தார் ஷா, டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, டாக்டர் ஸ்வாதி மற்றும் வினிதா குப்தா ஆகியோரின் வெற்றிப் பயணம் இது.

கிரண் மஜும்தார் ஷா, பயோகான் லிமிடெட் தலைவர்,

இந்தியாவின் முன்னணி பயோடெக்னாலஜி நிறுவனமான Biocon-ஐ வழிநடத்துபவர் கிரண் மஜும்தார் ஷா. கார்ப்பரேட் உலகில் மிகவும் மதிக்கப்படும் நபர் மட்டுமல்ல, டைம்ஸ் இதழின் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலில் இடம்பெற்றவரும்கூட.

பயோ டெக்னாலஜியில் இவரின் முயற்சிகள் பயோகானுக்கு மட்டுமல்ல, இந்திய தொழில் துறைக்கும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. அரசாங்கத்தின் பயோ டெக்னாலஜி துறையின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றும் கிரண், இந்தியாவில் பயோ டெக்னாலஜிக்கான வளர்ச்சிப் பாதையை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறார்.

இந்திய அரசின் பல துறைகளில் உறுப்பினராக நாட்டின் முன்னேற்றத்தில் உழைப்பை செலுத்தி வருகிறார். பயோ டெக்னாலஜியில் இவரின் சாதனையை பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ (1989) மற்றும் பத்ம பூஷன் (2005) ஆகிய விருதுகளை அறிவித்துள்ளது.

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் (1973) விலங்கியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற கிரண், பயோ டெக்னாலஜியில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து, 2004-ஆம் ஆண்டில், பல்லாரட் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

அபெர்டே பல்கலைக்கழகம், கிளாஸ்கோ பல்கலைக்கழகம், ஹெரியட்-வாட் பல்கலைக்கழகம் ஆகியவையும் கிரணுக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளது.

கிரணின் தலைமையின் கீழ் மது, காகிதத் தயாரிப்பு உள்ளிட்ட பல துறைகளுக்குத் தேவையான என்சைம்களைத் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது பயோகான். அதேபோல், நீரிழிவு, புற்றுநோயியல் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அது தொடர்புடைய தயாரிப்புகளை வெளியிட்டது.

இவரின் தலைமையின் கீழ், இந்த மாற்றத்தின் போது, ​​Biocon இரண்டு துணை நிறுவனங்களை நிறுவியுள்ளது: ஆராய்ச்சிக்கான மேம்பாட்டு ஆதரவு சேவைகளை வழங்க சின்ஜின் (1994), மருத்துவ வளர்ச்சியில் சேவைகளை வழங்க கிளினிஜீன் (2000) ஆகியவை தான் அந்த இரண்டு நிறுவனங்கள்.

அமெரிக்காவின் முன்னணி வர்த்தக வெளியீடான ‘மெட் ஆட் நியூஸ்’ அதன் உலகின் முன்னணி பயோ டெக்னாலஜி நிறுவனங்களின் பட்டியலில் பயோகானுக்கு 20-வது இடத்தை அளித்தது. இப்போது, உலகின் ஏழாவது பெரிய பயோடெக் நிறுவனமாகவும் உயர்ந்துள்ளது.

டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக தலைவர்

இந்தியாவில் கார்ப்பரேட் சுகாதார சேவையின் முன்னோடியான டாக்டர் பிரதாப் சி.ரெட்டியின் மகள்தான் ப்ரீத்தா ரெட்டி. தந்தையால் ஈர்க்கப்பட்டு, சுகாதார துறைக்குள் வந்த ப்ரீத்தா ரெட்டி, 1989-ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநராக முறையாகச் சேர்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போலோ குழுமத்தின் நிர்வாக இயக்குநராக உயர்ந்தார். ஆசியாவிலும் உலக அளவிலும் சுகாதார சேவையில் முன்னோடியாக அப்போலோ குழுமம் வலுவான நிலையில் உள்ளது.

1983-இல் தொடங்கப்பட்டதில் இருந்து, அப்போலோ மருத்துவமனைகள் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

ப்ரீத்தா ரெட்டி சமகாலத்துக்கு ஏற்ற வழிமுறைகளை வகுத்து மருத்துவருடன் நெருக்கமாக இருந்து அப்போலோ மருத்துவமனை குழுவின் செயல்பாடுகளை வழிநடத்துகிறார். புதிய திட்டங்களை திட்டமிடுவது முதல் அவற்றுக்கு நிதியளிப்பது வரை அனைத்து மேனேஜ்மேன்ட்களையும் செய்வது அவரே.

அப்போலோ மருத்துவமனைக்கான தரத்தை தொடர்ந்து வழங்குவதில் கவனம் செலுத்தும் ப்ரீத்தா ரெட்டி, அதேநேரம் தற்காலத்துக்கு ஏற்றவகையில் மொபைல்கள் மூலம் எம்-ஹெல்த் தீர்வுகளையும் மருத்துவர்களை கொண்டு வழங்குகிறார். இந்த மொபைல் ஹெல்த்கேர் அப்போலோ மருத்துவமனையின் தொலைநோக்கு பார்வையை மேலும் விரிவுபடுத்துகிறது.

பிஸியான கார்ப்பரேட் உலகில் வலம்வரும் போதிலும், இந்திய அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்றுகிறார் டாக்டர் ப்ரீத்தா. இந்தோ - அமெரிக்கா, இந்தோ - மலேசியா தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் நுழைய, 2009-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கே ப்ரீத்தா ரெட்டிக்கு அழைப்பு விடுத்தார்.

2010, 2011 ஆண்டில் ஃபார்ச்சூன் வெளியிட்ட சர்வதேச சக்தி வாய்ந்த 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றார். மேலும், ஃபார்ச்சூன் இந்தியாவின் 'வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்' பட்டியலிலும், பிசினஸ் டுடே-வின் சக்திவாய்ந்த வணிகப் பெண்களின் பட்டியலிலும் இடம்பிடித்தார்.

இதேபோல், இந்திய மருத்துவமனைகளுக்கு தரம் குறித்து வழிகாட்டும் தேசிய தர கவுன்சிலின் உறுப்பினராகவும், விப்ரோ பிசினஸ் லீடர்ஷிப் கவுன்சிலின் உறுப்பினராகவும் உள்ளார்.

டாக்டர் ப்ரீத்தா, ஏழ்மையானவர்களுக்கு பணியாற்றுவதில் முன்னணியில் உள்ளார். இதய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியே அதற்கு உதாரணம். அதற்கான SACHi அமைப்பு மூலம் 5000-க்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

ப்ரீத்தா ரெட்டி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பிஎஸ்சி பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். அவர் சென்னை கலாச்ஷேத்ராவில் பயிற்சி பெற்றவரும்கூட. ப்ரீத்தா ரெட்டிக்கு மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியதற்காக, சென்னையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அவருக்கு அறிவியல் டாக்டர் பட்டமான, ஹானரிஸ் காசா வழங்கி கௌரவித்தது.

டாக்டர் ஸ்வாதி, பிரமல் எண்டர்பிரைசஸ் துணைத் தலைவர்:

ஸ்வாதி பிரமல் இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் தொழிலதிபர்களில் ஒருவர். மேலும், ஹெல்த்கேர் துறையிலும் ஈடுபட்டுள்ளார். புதிய மருந்துகள் மற்றும் பொது சுகாதார சேவைகளில் அவரது பங்களிப்புகள் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றினார்.

1956-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி பிறந்த ஸ்வாதி, 1980-ஆம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தின் முன்னாள் மாணவரான ஸ்வாதி,

1992-ஆம் ஆண்டு முதல் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, உலகெங்கிலும் உள்ள மக்களின் பொது சுகாதாரத்திற்கும், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில், நீரிழிவு, மூட்டுவலி மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுப்பதிலும் ஸ்வாதி மிகப் பெரிய பங்களிப்பை செய்துள்ளார்.

200-க்கும் மேற்பட்ட சர்வதேச காப்புரிமைகள் மற்றும் 14 புதிய மருந்துகளின் போர்ட்ஃபோலியோவுடன், புற்றுநோய், நீரிழிவு, அழற்சி மற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகளின் குழுவை ஸ்வாதி வழிநடத்துகிறார்.

பிரமல் எண்டர்பிரைசஸ் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இது 100 நாடுகளுக்கு மேல் மருந்துகளை சப்ளை செய்கிறது.

மும்பையில் உள்ள கோபிகிருஷ்ணா பிரமல் மருத்துவமனையின் நிறுவனரான இவர், ஆஸ்டியோபோரோசிஸ், மலேரியா, டிபி, கால் - கை வலிப்பு மற்றும் போலியோ ஆகியவற்றுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

இதோடு, மொபைல் சுகாதார சேவை, பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டங்கள் மற்றும் இளம் தலைவர்களை உருவாக்கும் சமூகக் கல்விக்கு ஆதரவாகவும், அதேநேரம் கிராமப்புற இந்தியாவில் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறார்.

தற்போது ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் ஆகிய இரண்டின் ஆலோசனைக் குழுவிலும், ஐஐடி பாம்பே மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்ற இந்திய மற்றும் சர்வதேச கல்வி நிறுவனங்களின் வாரியங்களிலும், வர்த்தகம், திட்டமிடல், சுற்றுச்சூழல், கலைகள், பெண்கள் தொழில்முனைவு, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய மேம்பாடு ஆகியவற்றிற்கான அரசாங்க பொதுக் கொள்கைக் குழுக்களிலும் ஸ்வாதி இணைந்து பணியாற்றுகிறார்.

இவரின் சாதனைகளுக்காக ஏப்ரல் 2012ல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதேபோல், பிரான்ஸின் உயரிய விருதுகளில் ஒன்றான "செவாலியர் டி எல்'ஆர்ட்ரே நேஷனல் டு மெரிட்" (நைட் ஆஃப் தி ஆர்டர் மெரிட்) விருதும் பெற்றுள்ளார்.

வினிதா குப்தா, லூபின் பாராமெடிக்கல்ஸ் சிஇஓ:

மும்பை பல்கலைக்கழக பட்டதாரி, ஜே எல் கெல்லாக் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பட்டம் பெற்றவர் வினிதா குப்தா. லூபின் நிறுவனத்தின் அட்வான்ஸ்டு மார்க்கெட்டிங்கில் முக்கியப் பங்காற்றிய இவர், அமெரிக்கா மற்றும் ஐரோப்ப சந்தைகளில் லூபின் நிறுவனத்தின் வணிகத்திற்கு தலைமை தாங்குகிறார்.

அவரது தலைமையின் கீழ், லூபின் உலகளாவிய மார்க்கெட்டில் பெரிய பங்களிப்பாளராக உயர்ந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க சந்தையில் குழந்தைகளுக்கான பிராண்டட் சந்தையில் வலுவான இடத்தை லூபின் தக்கவைத்துள்ளது.

பெண்கள் இந்திய மருந்து மற்றும் சுகாதாரத் துறையில் மட்டுமல்ல, உலக அளவில் தலைமைத்துவத்தில் கோலோச்சுகின்றனர் என்பதற்கு சான்று தான் லூபின் நிறுவனத்தில் இவரின் சிஇஓ பதவி.


Edited by Induja Raghunathan