செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளை சரியான நேரத்தில் கண்டறிந்து, முன்நடவடிக்கை எடுக்க உதவும் வகையிலான சாதனத்தையும், செல்லப்பிராணிகள் மற்றும் அதன் உரிமையாளர்களை, கால்நடை மருத்துவர்களுடன் இணைக்க உதவும் செயலியையும் உருவாக்கி VETiNSTANT எனும் ஸ்டார்ட் அப்பை தொடங்கினர் இருசெல்லப்பிராணி வளர்ப்பாளர்கள்.
பிசியான வொர்க் லைஃப் ஸ்டைலுக்கு மத்தியில் செல்லப் பிராணிகளை எவ்வாறு கவனித்து கொள்வது என்பதை இரு பெட் லவ்வர்ஸ் பகிர்ந்து கொள்ளும் போது என்ன நடக்கும்? ஒரு ஸ்டார்ட் அப்பிற்கான யோசனை உருவாகியது.
பெட் பிரியர்களான வாணி ஐயரும், அவரது உறவினரான விவேக் ஸ்ரீனிவாசும் அவ்வப்போது, அவர்களது செல்லப்பிராணியான நாயை கவனித்து கொள்வதற்கான டிப்ஸ்கள் மற்றும் கஷ்டங்களை பகிர்ந்துள்ளனர். அதில், விவேக்கின் செல்லப்பிராணியான புரூனோ அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, விவேக் பயணங்களுக்கு சென்றுவிடும் போது புரூனோவின் உடல்நலம் குறித்து அதிகம் கவலையுற்றுள்ளார்.
வலிப்பு நோயால் புரூனோ பாதிக்கப்பட்டிருக்க, மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பே அதற்கான அறிகுறிகள் குறைந்துவிடும். இதனால், நோயின் தீவிரத்தை மருத்துவர்களாலும் அறிந்து கொள்ள முடியவில்லை. இது விவேக் மட்டுமல்ல, செல்லபிராணிகளை வளர்க்கும் பலரும் சந்திக்கும் சவாலிது என்பதை உணர்ந்தார் வாணி.
விரிவான தரவுகள் இல்லாததே துல்லியமான நோயறிதல்களுக்கு பெரும்பாலும் தடையாக விளங்குகிறது. பெரும்பாலான செல்லப்பிராணிகளின் உடல்நலப் பிரச்சினைகள் இந்த தரவு இடைவெளியில் இருந்து உருவாகின்றன என்பதை அவர் கண்டுபிடித்தார். இது கால்நடை மருத்துவர்களுக்கு துல்லியமான முன்கணிப்புகளை வழங்குவதை கடினமாக்குகிறது. மேலும், திடீரென்று ஏற்படும் நோய்களுக்கு செல்லப்பிராணிகளை தயார் செய்ய முடிவதில்லை.
இதன் விளைவாக, செல்லப்பிராணிகளின் ஆரோக்கியம் பற்றி அறிந்து கொள்வதற்காக கால்நடை மருத்துவர்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து ஆய்வு மேற்கொண்டார். இதன் நீட்சியாய், செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வாணியும், விவேக்கும் இணைந்து 2023ம் ஆண்டில் VETiNSTANT எனும் ஸ்டார்ட் அப்பை தொடங்கினர்.
இதன்மூலம், செல்லப்பிராணிகளின் நோயறிதலை கண்டறிவதற்கான சாதனத்தையும், செல்லப்பிராணிகள் மற்றும் அதன் உரிமையாளர்களை கால்நடை மருத்துவர்களுடன் இணைக்க உதவும் செயலியையும் உருவாக்கி செல்லப்பிராணிகளின் சுகாதாரத்தில் நீடித்த இடைவெளியை குறைத்தனர்.
சென்னையை தளமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்ட்அப் நாய்கள் மற்றும் பூனைகளுக்கான சுகாதார தயாரிப்பையும், சேவையையும் வழங்கி வருகிறது. விரைவில், அதன் சேவையை மாடுகள் மற்றும் பிற விலங்குகளுக்கும் நீட்டிக்க திட்டமிட்டுள்ளது.
"வாழ்நாள் முழுவதும் ஒரு செல்லப்பிராணியின் பெற்றோராக இருந்துள்ளேன். அவர்களின் உடல்நலம் குறித்த கவலை கொண்டுள்ளேன். செல்லப் பிராணிகளின் பெற்றோர் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது. செல்லப்பிராணிகள் நோய்வாய்படும் நேரங்களில் அதைப்பற்றி சரியான தகவல்களை அறிந்து கால்நடை மருத்துவரிடம் கூறி சிகிச்சையளிக்க உதவ வேண்டும்."
"இடம் அல்லது இனத்தைப் பொருட்படுத்தாமல், உலகளவில் விலங்குகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே எங்களது குறிக்கோள். மேலும், ஒரு செல்லப்பிராணி அல்லது விலங்கு ஆனது கால்நடை மருத்துவமனைக்குள் நுழைவது முதல் அது வெளியேறும் வரையிலான முழுவதையும், விலங்கு சுகாதார நெட்வொர்க்கை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்," என்று அவர் ஹெர்ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.
செல்லப்பிராணிகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பம்...
முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு வாணி, காஜியாபாத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜியில் வணிக மேலாண்மை, சந்தைப்படுத்தல் மற்றும் நிதி ஆகியவற்றில் டிப்ளமோ படிப்பைத் தொடர்ந்தார். அவரது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை JWT இல் விளம்பரப்படுத்துவதில் பணியாற்றினார். VETiNSTANT ஸ்டார்ட்அப்'பை தொடங்குவதற்கு முன், நிசான் இந்தியாவில் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவராக பணியாற்றி வந்துள்ளார்.
பின்னர், 2022ம் ஆண்டில், அவரது கார்பரேட் வாழ்க்கையை விட்டுவிட்டு தொழில்முனைவோர் பாதையில் இறங்க முடிவு செய்தார். ஆனால், கார்பரேட் சூழலில் இருந்து ஸ்டார்ட் அப் உலகிற்கு நகர்வது ஆரம்பத்தில் வெறுப்பாகவும் குழப்பமாகவும் இருந்துள்ளது.
மேலும், ஒரு தொழிலதிபராக, ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் ஒரு வழக்கமான சம்பளம் கிடைக்காமல் போகலாம், என்பதால் அவர் நிதி குறித்து அதிக விழிப்புணர்வுடன் செயல்பட்டார். இதன் விளைவாக, அவர் முன்பை விட தனிப்பட்ட அளவில் மிகவும் சிக்கனமாக இருக்க வேண்டியிருந்துள்ளது. இருப்பினும், வாணியின் தொழிற்பயணம் சவால்கள் இல்லாமல் இல்லை.
"தொடர்ந்து என்ன தொழில் செய்கிறேன் என்பது குறித்து கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. என்ன என்பதை விளக்கினாலும், மக்கள் அதை லேசாக எடுத்து கொள்வர். 'ஏதோ நாய்களுடன் செய்கிறார்...' போன்ற விஷயங்களை நான் செய்வதாக சொல்வார்கள்," என்று நினைவுக் கூர்ந்து பகிர்ந்தார்.
ஆனால், கேட்பாறின் கேள்விகளுக்கு செவி சாய்க்காத வாணி, மாற்றத்தை எதிர்நோக்கி பணியாற்றத் தொடங்கினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஐஐடி மெட்ராஸ் ரிசர்ச் பார்க் இன்குபேஷன் செல்லில் இந்த ஸ்டார்ட்அப் இன்குபேட் செய்யப்பட்டது.
நாய் மற்றும் பூனைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கையடக்க, IoT-யால் இயக்கப்படும், வீட்டிலேயே கண்டறியும் 'ExamD' எனும் செல்லப்பிராணி சுகாதார கண்காணிப்பு சாதனத்தை வடிவமைத்தனர். இச்சாதனமானது அணியக்கூடிய சாதனங்களைப் போலல்லாமல், செல்லப்பிராணிகளின் பெற்றோர்களுக்கு விலங்குகளின் வெப்பநிலை, இதயத் துடிப்பு அல்லது SpO2 (ஆக்ஸிஜன் செறிவு) ஆகியவற்றுக்கான வரம்புத் தகவல்களுடன் சரியான தரவுகளை அதன் செயலியின் வழியாக வழங்குகிறது.
பாண்டிச்சேரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான நாய்களிடம் ஒரு வருடத்திற்கும் மேலாக இத்தயாரிப்பு முயற்சி செய்யப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டதாக, வாணி கூறுகிறார்.
வெப்பநிலை, இதய ஆஸ்கல்டேஷன், நுரையீரல் ஆஸ்கல்டேஷன் மற்றும் அடிவயிற்றின் ஆஸ்கல்டேஷன் போன்றவற்றை கண்டறியும் சாதனம் ரூ6,500க்கு விற்கப்படுகிறது. கூடுதலாக, SpO2 மற்றும் இதயத் துடிப்பு கண்காணிக்கும் அம்சத்தையும் உள்ளடக்கிய சாதனத்தின் விலை ரூ.9,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர்களுக்காக 'எக்ஸாம் டி ப்ரோ' எனும் சாதனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முணுமுணுப்பு அடையாளம் மற்றும் ஆரம்ப இதய நிலையைக் கண்டறிதல், நுரையீரல் அசாதாரணத்தைக் கண்டறிதல், சிஓபிடி, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் மற்றும் பலவற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கான நுண்ணறிவு போன்ற பல அளவீடுகளைக் கண்காணிக்கும் இச்சாதனத்தின் விலை ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, cloud-ல் தரவைச் சேகரிப்பதன் மூலம் VETiNSTANT செயலி செல்லப்பிராணியின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும். இந்த தரவுகளை செல்லப்பிராணிகளின் பெற்றோர்கள் அவர்களது கால்நடை மருத்துவரிடம் பகிர்ந்து, எளிதாக ஆலோசனை பெறலாம், மருந்துச் சீட்டுகளைப் பெறலாம், என்கிறார் வாணி.
மேலும், செல்லப்பிராணி பெற்றோர்கள் மற்றும் கால்நடை கிளினிக்குகளுக்காக PAWS (Pets Administration and Workflow PAWS என்பது "கால்நடை மருத்துவமனையை end to end, டிஜிட்டல் மயமாக்கும் ஒரு அமைப்பு," என்கிறார் வாணி.
கட்டணங்கள், பில்லிங் மற்றும் சரக்குகளை தானியங்குபடுத்துவதன் மூலம் கிளினிக் நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குகிறது. VETiNSTANT ஆனது 99 மொழிகளில் AI-உந்துதலுடன் மருத்துவக் குறிப்புகளையும் வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கிறது மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
‘செல்லப் பிராணிகளுக்கும் ஆரோக்கிய உணவு தேவையே’ - TABPS Pets தொடங்கிய கோவை தம்பதி!