சரும பராமரிப்பு செய்ய ரூ.1 லட்சம் ஸ்டைபண்ட் - வித்தியாச இன்டர்ஷிப்பை அறிவித்த Deconstruct நிறுவனம்!

02:00 PM Nov 28, 2024 |

முன்பைவிட சருமப்பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே தற்போது அதிகரித்துள்ளது. எப்படி சருமத்தைப் பராமரிக்க வேண்டும், எந்தெந்த சரும வகைகளுக்கு என்னென்ன மாதிரியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்ற தெளிவான அறிவை இணையம் அவர்களுக்கு தந்து விடுகிறது.

இதனாலேயே, அழகு சாதனப் பொருட்கள் மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, நாள்தோறும் பல புதிய பிராண்டுகள் சந்தையில் அறிமுகமாகி வருகின்றன. எனவே, தங்களது பொருட்களின் தரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒவ்வொரு பிராண்டுமே அதிக மெனக்கெட வேண்டியதாக இருக்கிறது. இதற்காக புதிது புதிதாக யோசித்து, பல மார்க்கெட்டிங் யுக்திகளையும் அவர்கள் பின்பற்றுகிறார்கள்.

ஒரு லட்சம் ரூபாய் இண்டர்ன்ஷிப்

தற்போதும் அப்படியொரு வித்தியாசமான அறிவிப்புதான் இணையத்தில் அதிகம் பேசுபொருளாகி இருக்கிறது. அதில்,

சருமத்தைப் பராமரிக்கும் நபருக்கு ரூ.1 லட்சம் இண்டர்ன்ஷிப்பாக (அதாங்க உதவித்தொகை) வழங்க இருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது Deconstruct என்ற முன்னணி நிறுவனம்.

இந்த சருமப் பராமரிப்பு இண்டர்ன்ஷிப் பயிற்சி, சருமப் பராமரிப்பைத் தொடங்கியுள்ள புதியவர்களுக்காக எனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் சருமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வகையில், சருமப் பராமரிப்பு பயணத்தைத் தொடங்க அடித்தளமாக இந்த இண்டர்ன்ஷிப் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமும் காலையில் பல் துலக்குவதைப் போல, சருமப் பராமரிப்பும் ஒவ்வொருவருக்கும் அவசியமானது என்ற விழிப்புணர்வை உருவாக்கி, அதனை அனைவருக்குமான அன்றாடப் பணிகளில் ஒன்றாக்க முன்முயற்சியாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த இண்டர்ன்ஷிப் பயணத்தில் கலந்து கொள்ள இயலும். இதற்கு முன்பு அவர்களுக்கு சருமப் பராமரிப்பு பற்றிய போடிய அறிவு இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என 'டிகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் தங்கள் சருமத்துடன் நல்லதொரு ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக் கொள்ள இந்த இண்டர்ன்ஷிப் ஊக்குவிக்கிறது.

தேவையான தகுதிகள்

கரும்பு தின்னக் கூலியா என இந்த இண்டர்ன்ஷிப்பில் கலந்து கொண்டு ரூ.1 லட்சம் உதவித் தொகையை நீங்கள் எப்படிப் பெறலாம் எனத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?

இதோ அதன் விபரங்கள்:

  • இந்த திட்டத்தில், பங்கேற்க, 6-10 பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

  • Deconstruct-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நீங்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு 50% இடஒதுக்கீடு

இதில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இல்லை. ஆண் பங்கேற்பாளர்களுக்கும் 50% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சருமப் பராமரிப்பு என்பது பெண்களுக்கு மட்டுமே என்ற காலாவதியான ஸ்டீரியோடைப்களுக்கு சவால் விடுவதற்காக இந்த ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

வயது, பாலினம் மற்றும் பொருளாத பின்புலம் என எதையும் பொருட்படுத்தாமல் பங்கேற்பாளர்களை தேர்ந்தெடுக்க இருப்பதாக டிகன்ஸ்ரக்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தோல் பராமரிப்பை அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன், ஆரம்பநிலையாளர்கள் தங்கள் தோல் பராமரிப்பு பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்குவதற்கு ஊக்குவிப்பதன் மூலம், அனைவருக்கும் ஆரோக்கியமான சருமத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்த பிராண்ட் வலியுறுத்துகிறது

அனைவருக்கும் ஆரோக்கியமான சருமத்தை உருவாக்குவதே தங்களது முக்கிய நோக்கம் எனவும், புதிதாக சருமப் பராமரிப்பைத் தொடங்குபவர்கள் தயக்கமில்லாமல், தங்களுக்கு எதிரே உள்ள தடைகளைக் களையவும் இந்த திட்டம் ஊக்குவிக்கும் என டிகன்ஸ்ட்ரக்ட் கூறுகிறது.

பயிற்சியாளர்கள் என்ன பெறுவார்கள்?

- இந்த இண்டர்ன்ஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு, அவர்களது சருமத்திற்கேற்ற பராமரிப்பு பொருட்கள் மற்றும் அதற்கான நடைமுறைகள் என பிரத்யேகமாக வடிவமைக்கப்படும். 

- அதோடு, சருமப் பராமரிப்புத் துறையில் புகழ்பெற்ற தோல் மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் தோல் பராமரிப்பு பயிற்சியாளர்களுடன் அமர்வுகள் உண்டு. அவர்களது கண்காணிப்பின் கீழ் மட்டுமே இந்தத் திட்டம் நடைபெற உள்ளது.

- பயிற்சியாளர்கள் உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் இந்த திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தில் சேருவதால், அவர்களின் அன்றாட வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.

தயக்கத்தை உடைத்தெறிதல்

ஐஐடி கான்பூரில் படித்த பொறியாளரான மாலினி அடபுரெட்டி உருவாக்கியதுதான் இந்த `டிகன்ஸ்ட்ரக்ட்` நிறுவனம். இந்த நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு பல ஆண்டுகள் இது தொடர்பான ஆய்வுகள் மற்றும் மார்க்கெட்டிங் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள செலவழித்திருக்கிறார் மாலினி. ‘மிகவும் பயனுள்ள ஆனால் மென்மையானது’ (Highly Effective Yet Gentle) என்பதுதான் இவரது நிறுவனத்தின் மோட்டோ ஆகும்.  

தங்களது இந்த இண்டர்ன்ஷிப் பற்றி மாலினி அடபுரெட்டி இது பற்றிக் கூறுகையில்,

“சருமம் கொண்ட அனைவருக்குமே சருமப்பராமரிப்பு தேவை. இந்தத் திட்டத்திற்கான அழைப்பு என்பது அனைவருக்குமானது. குறிப்பாக புதிதாக சருமப் பராமரிப்பைத் தொடங்கியுள்ளவர்கள் மற்றும் தங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புகிறவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக சருமப் பராமரிப்பைத் தொடங்கியுள்ளவர்களுக்காக நாங்கள் மிகவும் பயனுள்ள தயாரிப்புகளைத் தருகிறோம். இந்தப் பிரச்சாரத்தின் மூலம், சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத, நல்ல பலனைத் தரக் கூடிய பொருட்களை அறிமுகப்படுத்தி, சருமப் பராமரிப்பு பற்றிய தயக்கத்தை உடைத்தெறிய விரும்புகிறோம், என்கிறார்.

தகுதித் தேர்வுகள்

“இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்க விரும்புவர்களுக்கான விண்ணப்பிக்கத் தொடங்கலாம். விண்ணப்பித்தவர்களில் இருந்து முதல்கட்டமாகத் தேர்வு செய்யப்படுபவர்கள் ஸ்கிரீனிங் சுற்றிலும், அதனைத் தொடர்ந்து வீடியோ பதிவு சுற்றிலும் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக நேரடி நேர்காணல் நடைபெறும். இந்தச் சுற்றுகளில் தேர்ந்தெடுக்கப்படும் 6 முதல் 10 பங்கேற்பாளர்கள், சருமப்பராமரிப்பு இண்டர்ன்ஷிப்பில் கலந்து கொள்ள முடியும்,” என மாலினி கூறுகிறார்.

இந்த பிரச்சாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள். அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கி, 30-60 நாட்கள் வரை நடைபெறும்.