இணையம் எந்தளவுக்கு நல்லதோ, சமயங்களில் அதே அளவுக்கு தீமையானதாகவும் மாறி விடுகிறது. அதிலும், குறிப்பாக மருத்துவம் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிப் பார்த்து சுயமருத்துவம் பார்த்துக் கொள்ளாதீர்கள் என மருத்துவர்கள் எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டாலும், அதையும் மீறி இன்னமும் பலர் தங்களுக்கான உடல்நலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இணையத்தில்தான் தேடுகின்றனர்.
அதனால்தான், தவறான மற்றும் ஆதாரப்பூர்வமற்ற தகவல் பரப்பப்படுகிறது என்றால், உடனே அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர்.
அந்தவகையில், தற்போது சத்தீஸ்கர் சிவில் சமூகம் என்ற அமைப்பினர், பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதில், அவரது கணவர் புற்றுநோயில் இருந்து உணவுக் கட்டுப்பாடு மற்றும் பாரம்பரிய சிகிச்சை மூலம் குணமடைந்ததாகக் கூறியதற்கு உரிய ஆதாரம் வழங்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அப்படி உரிய ஆதாரம் அளிக்கத் தவறும் பட்சத்தில் மன்னிப்பு கேட்டு விட்டு, ரூ.850 கோடியை பி.எம்.,கேர் நிதிக்கு செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
80-களில் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. பின்னர், அரசியலில் இறங்கிய அவர், தற்போது காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் நவ்ஜத் கவுர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நவ்ஜத், புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், நான்காவது நிலை புற்றுநோய் பாதிப்பில் இருந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முடியாது எனக் கைவிட்ட நிலையில், பாரம்பரிய உணவுப் பொருட்கள் மூலம் அவரை குணமாக்கியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் உணர்ச்சிப் பெருக்குடன் சித்து கூறியிருந்தார்.
“My wife is clinically cancer free today...” என்று அவர் பேச ஆரம்பிக்கிற அந்த இந்த வீடியோ கடந்த 21ம் தேதி இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் சித்து,
“இரண்டு வருடங்களுக்கு முன்னால் என் மனைவிக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் நான்காவது ஸ்டேஜில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். எத்தனையோ கோடி செலவு செய்து பெரிய பெரிய மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பார்த்தோம். ஆனால், மருத்துவர்கள் சொன்னது என்னவோ, 'இவர் பிழைக்க மூன்று சதவீதம் தான் வாய்ப்பு இருக்கிறது' என்பதுதான்.
என்னுடைய நண்பரின் மகன் அமெரிக்காவில் புற்றுநோய் மருத்துவராக இருக்கிறார். அவரும்கூட என் மனைவியின் நிலையைப் பார்த்து, அவர் பிழைக்க வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டார். கடந்த ஏப்ரல் மாதம் என் மனைவிக்கு மூன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்தளவுக்கு சிக்கலான அறுவை சிகிச்சை அது. ஆனால், அவள் தைரியமாக இருந்தாள். ஆனாலும் என் மனைவி குணமடையவில்லை. அவர் 40 நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பார், என மருத்துவர்கள் கூறி விட்டனர்.
உணவே மருந்து
எனவே, உணவு மூலமாக என் மனைவிக்கு உதவ நாங்கள் முடிவு செய்தோம். என்னுடைய மனைவிக்கு நான் வேம்பு இலைகள், கட்டி மஞ்சள், எலுமிச்சை, தேங்காய் மட்டுமே உணவாகக் கொடுத்தேன். இவற்றிற்கெல்லாம் எவ்வளவு செலவாகிடப் போகிறது. இந்த உணவுகளை எடுத்து கொண்டாலே கேன்சரை குணப்படுத்த முடியும். சில நாள்கள் சர்க்கரை, மாவுச்சத்து உணவுகளைத் தவிர்த்தோம். இப்படிச் செய்தால் தானாகவே புற்றுநோய் செல்கள் இறந்து விடும்.
''காலையில் எழுந்தவுடன் முதலில் எலுமிச்சைச் சாறு எடுத்துக்கொண்டு, மாலையில் ஆறு மணிக்கு முன்னரே அன்றைய நாளின் உணவை முடித்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையை மாற்றினாலே கேன்சரை குணப்படுத்தி விடலாம். இதை உங்கள் அனைவரிடமும் சொல்வதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,'' என நவ்ஜோத் சிங் சித்து பேசியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, தனது மனைவியின் டயட் பற்றிய குறிப்புகளையும் அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மருத்துவர்கள் கண்டனம்
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இதற்குக் கண்டனம் தெரிவித்து மருத்துவர்கள் உட்பட பலர் கமெண்ட் தெரிவித்து வந்தனர். இது போன்ற ஆதாரமற்ற தகவல்களை பிரபலங்கள் பேசுவதால், சமூகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் எச்சரித்தனர்.
‘மக்கள் இதனைக் கண்மூடித்தனமாக உண்மை என நினைத்து, உடல்நலக் குறைவு ஏற்பட்டால், மருத்துவமனைகளுக்கு செல்வதைத் தாமதப்படுத்தி விடுவார்கள், இதனால் நோய் முற்றிய நிலையிலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்,’ என அவர்கள் தெரிவித்திருந்தனர். மேலும், இது போன்ற தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், அலோபதி மருத்துவம் மீதான எதிர்மறையான சிந்தனையை உருவாக்கி விடும், எனவும் அவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
ஆதாரமற்ற தகவல்
அதோடு, ‘எலுமிச்சை சாறு, வேம்பு, மஞ்சள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர்' போன்ற உணவுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாமே தவிர அவற்றால் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க முடியும், குணப்படுத்த முடியும் என்பதற்கான நிரூபணமோ, அறிவியல் சான்றுகளோ இல்லை. மிக முக்கியமாக, 'புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைக்கு மாற்றாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை’ என்றும் புற்று நோய் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்ததனர்.
ஆதாரம் கேட்டு நோட்டீஸ்
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சத்தீஸ்கர் சிவில் சமூகம் என்ற அமைப்பினர், சித்துவின் மனைவி நவ்ஜத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், சித்து உணவுக் கட்டுப்பாடு மற்றும் பாரம்பரிய சிகிச்சை மூலம் நவ்ஜத் புற்றுநோயில் இருந்து குணமடைந்ததாகக் கூறியதற்கு உரிய ஆதாரத்தை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும், என அவர்கள் கூறியுள்ளனர்.
அப்படி உரிய ஆதாரம் அளிக்கத் தவறும் பட்சத்தில் மன்னிப்பு கேட்டு விட்டு, ரூ.850 கோடியை பி.எம்.,கேர் நிதிக்கு செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக உரிய பதிலளிக்காவிட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும், என்று சத்தீஸ்கர் சிவில் சமூகத்தின் ஆலோசகர் குல்திப் சோலான்கி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் சிவில் சமூகத்தில் நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.