இரட்டை குழந்தைகளுக்கென பிரத்யேக வணிகத்தளம் - 'TwinsTribe' தொடங்கிய இரட்டையர்களின் தாய்!

04:32 PM Dec 06, 2024 | YS TEAM TAMIL

தூக்கமற்ற இரவுகள், தாய்ப்பாலுாட்டுதல், டயப்பர் மாற்றுதல் மற்றும் இன்னும் பல - அப்பப்பா... குழந்தை வளர்ப்பு பல கடினமான விஷயங்களை காட்டிலும் கடினமானது. இதில், இரட்டை குழந்தைகளை வளர்ப்பது என்றால் சவாலின் உச்சம்.

அப்படியான சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இரட்டைக்குழந்தை பெற்றோர்களின் வலியுணர்ந்து, இரட்டை குழந்தைகளுக்கான பிரத்யேக தயாரிப்புகளை விற்கும் நிறுவனமான "ட்வின்ஸ் ட்ரைப்" (TwinsTribe)-ஐத் தொடங்கியுள்ளார் இரட்டைக்குழந்தைகளின் தாயான ருச்சிகா அகர்வால்.

ஒவ்வொரு மாதமும் விற்பனையை இரட்டிப்பாக்கிய நிறுவனம், ஆறு மாதங்களில் ரூ.40-50 லட்சம் வருவாயை எட்டியுள்ளது.

அனுபவம் அளித்த வணிக யோசனை...

நாக்பூரை தளமாகக் கொண்ட ட்வின்ஸ் ட்ரைப், குறிப்பாக இரட்டைக் குழந்தைகளைப் பராமரிக்கும் தயாரிப்புகளை ஒரே இடத்தில் வழங்கும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இரட்டைக் குழந்தைகளின் தாயான ருச்சிகா, அவர்களது குழந்தைகளுக்கான சரியான தயாரிப்புகளை சந்தையில் தேடுவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளார்.

அந்த அனுபவம் அளித்த வணிக சோதனையை அவரது தோழி நிக்கிதா அகர்வாலிடம் பகிர, இருவரும் இணைந்து ட்வின்ஸ் ட்ரைப்பை உருவாக்கினர்.

"வணிக குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதால், தொழில் முனைவு எப்போதுமே என் லிஸ்டில் இருக்கும் ஒன்று. ருச்சிகா ட்வின்ஸ் ட்ரைப் பற்றிய யோசனையை என்னுடன் பகிர்ந்து கொண்டபோது, உடனடியாக அதில் ஈர்க்கப்பட்டேன். சந்தையில் இரட்டைக்குழந்தைகளின் தயாரிப்புகளுக்கென ஒரு வணிகத்தளத்தின் தேவையும், அதற்கான வெற்றிடமும் இருந்தது," என்று நிகிதா யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார்.

ஆனால், ஆரம்பத்தில் ட்வின்ஸ் ட்ரைப் இரட்டை பெற்றோர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு சமூகமாகவே தொடங்கப்பட்டது.

ஆம், TwinsTribe வலைப்பதிவில், இரட்டை பெற்றோர்கள், மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால், தாய்ப்பால், NICU பயணங்கள் மற்றும் முதல் விமானங்கள் போன்ற தலைப்புகளால் எழுதப்பட்ட 25க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. மேலும், ஒவ்வொரு மாதமும் சுமார் 5,000 வாசகர்களை அவ்வலைப்பதிவானது ஈர்க்கிறது. பிறகே, ட்வின்ஸ் ட்ரைப் வணிகத் தளமாக பரிணமித்தது.

"இந்தியாவில் இரட்டைக் கர்ப்பம் அதிகரித்து வருகிறது. சமீப ஆண்டுகளில், தாமதமான கர்ப்பங்கள் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறைகள், செயற்கை கருவுறுதல் சிகிச்சைகளை அதிகரிப்பதற்கு வழிவகுத்தன. இது இரட்டை குழந்தை பிறப்புகளில் கணிசமான வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இரட்டைக் குழந்தைகளுக்கான தயாரிப்பு விற்பனையில் அதிக வாய்ப்பு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்," என்றார் ருச்சிகா.

1980ம் ஆண்டுகளில் இருந்து உலகளாவிய இரட்டைக்குழந்தை பிறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது என்று பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 1,000 பிரசவங்களுக்கு 9.1 முதல் 12.0 இரட்டை பிரசவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.6 மில்லியன் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன.

அதாவது, தற்போதைய நிலவரப்படி, பிறக்கும் 42 குழந்தைகளில் ஒன்று இரட்டை குழந்தையாக உள்ளது. இம்மாற்றத்திற்கு மருத்துவ உதவியுடனான கருவுருறுதலே காரணம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இரட்டையர்களுக்கென பிரத்யேக வணிகத்தளம்!

புதிதாகப் பிறந்த குழந்தைகளிலிருந்து சுமார் இரண்டு வயது வரையிலான இரட்டைக் குழந்தைகளுக்கான தயாரிப்புகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

ஸ்ட்ரோலர்கள், ட்வின் ஸ்லீப்பர் பாசினெட்டுகள் (குழந்தை தொட்டில்), பாசினெட் கம் பிளேபன்கள் (குழந்தை பாதுகாப்பாக விளையாட நான்புற அடைப்பு), போர்வகைள், ட்வின்ஸ் டிரஸ், பொம்மைகள், ஆக்டிவிட்டி விளையாட்டு தயாரிப்புகள் என இரட்டையர்களுக்கான எக்கச்சக்க தயாரிப்புகளை அதன் இணையதளத்திலும், அமேசானிலும் விற்பனை செய்து வருகிறது.

நிறுவனத்தின் தயாரிப்புகளின் டிசைனிங்கை அவர்களே வடிவமைத்து, பங்குதார உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படுகிறது. ட்வின்ஸ் ட்ரைபின் ஸ்ட்ரோலர், அதன் சொந்த இணையதளத்தில் ரூ.21,249 விலையிலும், அமேசானில் ரூ.21,999 விலையிலும் விற்கப்பட்டு, சந்தையிலுள்ள HunyHuny, Leclerc மற்றும் Babyzen Yoyo போன்ற பிற தயாரிப்புகளுடன் போட்டியிடுகிறது.

TwinsTribe Activity Log for Newborn Twins

புதிதாகப் பிறந்த இரட்டையர்களுக்கான ஆக்டிவிட்டி லாக்-ன் 70-75% விற்பனையானது அதன் சொந்த வலைத்தளத்திலிருந்தும் 25-30% விற்பனை அமேசானிலிருந்தும் நடக்கிறது. நிறுவனம் விரைவில் ஃபிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனைக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் விற்பனையை இரட்டிப்பாக்கி, ஆறு மாதங்களில் ரூ 40-50 லட்சம் ரன் ரேட்டை எட்டியுள்ளது. பூட்ஸ்ட்ராப் செய்யப்பட்ட நிறுவனம் எதிர்காலத்திலும் எந்த நிதியையும் திரட்ட விரும்பவில்லை.

"சோஷியல் மீடியா பக்கங்களை நிர்வகிப்பது, தயாரிப்புகளின் ரிவ்யூ, விளம்பரப்படுத்துதல், மார்க்கெட்டிங் உள்ளிட்ட விஷயங்களை, நான் கையாளுகிறேன். தயாரிப்புகளின் மூலங்களை கண்டறிவது தொடங்கி, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது வரை திரைக்கு பின்னாள் உள்ள தயாரிப்பு பணிகளை நிகிதா கவனித்து கொள்கிறார்," என்றார் ருச்சிகா.

TwinsTribe இன் சமூகத்தில் தற்போது சுமார் 4,000 இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர்களும், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த ஒருவரும் உள்ளனர். மும்மூர்த்தி குழந்தைகளுக்கான தயாரிப்புகளின் சந்தை சிறிய அளவில் இருப்பதால் அவர்களுக்கனெ ஒரு பிரத்யேக தயாரிப்பு வரிசையை உருவாக்க இயலாது என்றனர். இருப்பினும், மும்மூர்த்தி குழந்தைகளுக்கான தயாரிப்புகளின் தேவையின் வளர்ச்சியைக் கண்டால், தயாரிப்புகளை மேலும் தனிப்பயனாக்க அவர்கள் தயாராக உள்ளனர்.

இந்திய குழந்தை பராமரிப்பு பொருட்களின் சந்தை 2031ம் ஆண்டளவில் 15.32 பில்லியன் டாலரை தொடும் என்று டேட்டா பிரிட்ஜ் மார்க்கெட் ரிசர்ச் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

"குழந்தைகளின் தயாரிப்புகள் சந்தை சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பெரியது, ஆனால், நெரிசலானது, ஏராளமான போட்டியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்புகள்... ஆனால் இரட்டை பெற்றோர்கள் மட்டுமே இதில் உள்ள தனித்துவமான சவால்களை எதிர்கொள்வதால், இரட்டையர்களின் முக்கிய இடம் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் உள்ளது," என்கிறார் ருச்சிகா.

தமிழில்: ஜெயஸ்ரீ