டோக்கியோவின் தெருக்கள் எங்கும் வென்டிங் மிஷின்கள் நீக்கமற நிறைந்திருப்பதை போன்று, இந்திய தெருக்களும் காட்சியளிக்க தொடங்கியுள்ளன. அதற்கான முக்கிய காரணியாக செயல்பட்டு வரும் 'டால்சினி டெக்னாலஜிஸ்' நிறுவனம், நாடு முழுவதும் 80க்கும் மேற்பட்ட நகரங்களில் 2,500 ஸ்மார்ட் விற்பனை இயந்திரங்களை நிறுவி மக்களின் ஷாப்பிங் முறையை மாற்றியமைத்து வருகிறது.
டில்லியை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான டால்சினி டெக்னாலஜிஸ் (Daalchini Technologies) முன்னாள் Paytm நிர்வாகிகளான பிரேர்னா கல்ரா மற்றும் வித்யா பூஷன் ஆகியோரால் 2018ல் நிறுவப்பட்டது.
சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் இணையவழி மற்றும் விரைவான வர்த்தக வழங்குநர்களால் ஆதிக்கம் செலுத்தும் உலகில், டால்சினி இந்திய நுகர்வோர் தயாரிப்புகளை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை மறுவரையறை செய்வதன் மூலம் அவர்களுக்கு புதிய பர்சேஸிங் அனுபவங்களை வடிவமைத்து வருகிறது. பாரம்பரிய விற்பனை இயந்திரங்களைப் போலன்றி, டால்சினியின் விற்பனை இயந்திரங்கள் பணமில்லா, தொடர்பு இல்லா மற்றும் செயலி அடிப்படையிலானது.
2,500 வென்டிங் மிஷின்; ரூ42 கோடி வருவாய்
ஸ்டார்ட் அப் ஆனது மெட்ரோ நிலையங்கள், உயர் போக்குவரத்துப் பகுதிகள், மால்கள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் விற்பனை இயந்திரங்களை நிறுவியுள்ளது. டால்சினி சானிட்டரி நாப்கின்கள், ஈரமான துடைப்பான்கள், வாய் ப்ரெஷ்னர்கள், டாய்லெட் ஸ்ப்ரேக்கள் போன்ற தயாரிப்புகள் அடங்கிய ஆரோக்கிய விற்பனை இயந்திரங்களையும் வழங்குகிறது.
மேலும், எழுதுபொருட்கள் மற்றும் புத்தகங்களுக்கான விற்பனை இயந்திரங்களையும், ஓடிடி தயாரிப்புகள் மற்றும் தொழில்துறை பொருட்களுக்கான விற்பனை இயந்திரங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
விரைவான நகரமயமாக்கல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் அதிக சில்லறை முதலீடு ஆகியவை இந்தியாவில் விற்பனை இயந்திர சந்தையின் வளர்ச்சியை 2020-2026ம் ஆண்டில் 14.9% CAGR ஆக எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், கொரோனா தொற்றுக்குபின் அதன் சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 10மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், டால்சினியின் டாப்லைன் கணிசமாக வளர்ந்துள்ளது.
2022ம் நிதியாண்டில், நிறுவனம் ரூ.12 கோடி வருவாய் ஈட்டியது, இது 2023ம் நிதியாண்டில் ரூ.25 கோடியாகவும், 2024ம் நிதியாண்டில் ரூ.42 கோடியாகவும் வளர்ந்தது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஆண்டு தொடர் வருவாய் ரூ.100 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறது. டால்சினி HUL, Amul, Britannia, Nestle, Marico மற்றும் ITC உள்ளிட்ட 40 D2C பிராண்டுகளுடன் கைக்கோர்த்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா, Paytm, NITI Aayog, Gaana, Fortis, Dell, MAX Hospitals மற்றும் EY உட்பட 500 வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தற்போது சேவை செய்து வருகின்றனர்.
"கோவிட்-19க்கு முன் எங்களிடம் 200க்கும் குறைவான விற்பனை நிலையங்களே இருந்தன. இப்போது, எங்களிடம் நாடு முழுவதும் 2,300க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் உள்ளன," என்று யுவர்ஸ்டோரியிடம் கூறினார் டால்சினியின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரேர்னா கல்ரா.
ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் வென்டிங் மிஷன்...
Daalchini இன் ஸ்மார்ட் வென்டிங் மிஷனில் பொருத்தப்பட்டுள்ள கியோஸ்க்குகள் வாடிக்கையாளரின் முன்னுரிமை, பொருட்களை வாங்கும் முறைகள் மற்றும் அதிகபட்சமாக வாங்கும் நேரங்கள் பற்றிய தரவைச் சேகரிக்கின்றன. இதன்மூலம், கிடைக்கும் தரவுகள் தயாரிப்புகளை வகைப்படுத்தல்கள், விலை நிர்ணயம் மற்றும் பொருட்களை நிரப்புதல் ஆகிய முடிவுகளை எடுக்க நிறுவனத்திற்கு உதவுகிறது.
"ஸ்மார்ட் வென்டிங் மிஷினில் உள்ள கியோஸ்க் தொழில்நுட்பத்தினால் சேகரிக்கப்படும் தரவுகளின் உதவியோடு, ஒவ்வொரு விற்பனை நிலையத்தின் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்வதை உறுதிசெய்வதுடன், சரக்குகளை மேம்படுத்தவும், தேவை மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும், பருவகாலப் போக்குகளுக்கு ஏற்ப தயாரிப்புகளை நிரப்பவும் முடிகிறது. கூடுதலாக, இத்தரவுகள் மிகவும் பிரபலமான பொருட்களைப் பற்றிய நுண்ணறிவுகளை பெறவும், அதன் இருப்பை மேம்படுத்தவும், இறுதியில், வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அதிகரிக்க உதவுகிறது."
அதே போல், வளர்ச்சியடைந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தினை செயல்படுத்துவதன் மூலம் 6 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள விற்பனை இயந்திரத்தில் சரியான தயாரிப்புகளை வழங்க உதவுகிறது. எங்களது தனியுரிம ஆர்டர் மற்றும் ப்ரொஜெக்ஷன் எஞ்சின் தொழில்நுட்பம், தினசரி ஒவ்வொரு விற்பனை இயந்திரத்திலும் புதிய உணவுகளின் அளவைக் கணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உணவு விரயத்தை கணிசமாகக் குறைக்கிறது.
தொலைநிலை கண்காணிப்பு மற்றும் நிகழ்நேரத்தில் தடையில்லா விநியோகத்தை உறுதி செய்யும் 'இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்' போன்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறது. கூடுதலாக, Daalchini இன் நுகர்வோர் செயலி, வாடிக்கையாளர்களின் சர்ச் ஹிஸ்ட்ரி மற்றும் கடந்தகால பர்சேஸ் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ய AI ஐப் பயன்படுத்துகிறது.
"எங்கள் சிஸ்டம் காலாவதி தேதியை நெருங்கும் எந்தவொரு தயாரிப்புகளையும் தானாகவே செயலிழக்கச் செய்கிறது, வாடிக்கையாளர்கள் காலாவதியான பொருட்களை வாங்குவதைத் தடுக்கிறது. UPI, மொபைல் வாலட்கள் மற்றும் கார்டு பேமெண்ட்கள் உள்ளிட்ட பல கட்டண முறைகளை ஆதரிக்கும் எங்கள் வலுவான தொழில்நுட்பத் தளம், எங்களைத் தனித்து நிற்க செய்கிறது. இது முழு விற்பனை அனுபவத்தையும் பயனர்களுக்கு தடையற்றதாகவும், தொந்தரவு இல்லாததாகவும் ஆக்குகிறது," என்கிறார் கல்ரா.
டால்சினி இரண்டு மாடல்களிலான விற்பனை இயந்திரங்களை வழங்குகிறது. வாடகை மாதிரியில், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை இயந்திரங்களை வாடகைக்கு விடுகிறது மற்றும் தினசரி பொருட்களை நிரப்புதல், பராமரிப்பு, வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் ஒட்டுமொத்த மேலாண்மை உட்பட அனைத்து செயல்பாட்டு அம்சங்களையும் நிர்வகிக்கிறது.
இரண்டாவதாக, உரிமையாளர் மாதிரி, இதில் டால்சினி விற்பனை இயந்திரத்தை பங்குதாரருக்கு விற்கிறது. இதுவரை, டால்சினி 55 கோடி ரூபாய்க்கு மேல் திரட்டியுள்ளது. எதிர்காலத்தில் அதிக மக்கள் தொகைக் கொண்ட அடுக்கு II மற்றும் III நகரங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
"எங்கள் விற்பனை இயந்திரங்களில் 95% க்கும் அதிகமானவை எங்கள் கூட்டாளர்களுக்கு சொந்தமானவை, நாங்கள் அவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சங்கிலியை வழங்குகிறோம்."
டால்சினியின் முக்கிய வருவாய் விற்பனை இயந்திரம் மூலம் விற்கப்படும் பொருட்களிலிருந்து வருகிறது. பிராண்டுகளின் தயாரிப்புகளை எங்கள் விற்பனை இயந்திரங்களில் இடம்பெறச்செய்வதற்கு நாங்கள் கட்டணத்தை வசூலிக்கிறோம். இது வருவாயில் 5% பங்களிக்கிறது.
மூன்றாவதாக, சந்தா மூலம் வருவாய் கிடைக்கிறது. அலுவலகங்கள், ஹோட்டல்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் பல இடங்களில் நிறுவப்பட்ட இயந்திரங்களுக்கு மாதாந்திர வாடகைக் கட்டணம் வசூலிக்கிறோம் இது எங்கள் வருவாயில் 40% பங்களிக்கிறது. தவிர, இயந்திரத்தின் டிஜிட்டல் திரைகள் மற்றும் மொபைல் செயலியில் விளம்பரங்கள் மூலமாகவும் வருவாய் கிடைக்கிறது.