வாழைப்பழங்கள் பழுத்தால் குப்பையில் ஏறியும் நிலையில் தவித்துவந்த 72 வயது விவசாயியான அசோக், மாற்றி யோசித்து மதிப்புக்கூட்டலின் மூலம் வாழைப்பழ பிஸ்கட்கள் உட்பட பல வாழைப்பழ தயாரிப்புகளின் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வருவாய் ஈட்டுகிறார்.
தக்காண பீடபூமியின் வடக்கு விளிம்பில் அமைந்துள்ள மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டம் எரிமலை மண் வளம் கொண்டது மற்றும் பருத்தி மற்றும் வாழைப்பழங்களுக்கான முக்கிய வணிக மையமாகும். இந்தியாவின் வாழைப்பழ நகரம் என்று குறிப்பிடப்படும், ஜல்கான் 3.4 மில்லியன் டன் வாழைப்பழங்களை உற்பத்தி செய்கிறது.
அதாவது, மகாராஷ்டிராவின் வாழைப்பழ உற்பத்தியில் 70 சதவீதம் மற்றும் இந்தியாவில் 11 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க புள்ளிவிவரங்கள் இருந்தபோதிலும், வாழை சாகுபடி அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு லாபமற்ற வணிகமாக உள்ளது.
அதிக மகசூலுக்கு மத்தியில் அதன் விலைவாசி மிகக்குறைவாக உள்ளது. மேலும், விரைவில் அழுகக்கூடிய பொருள் என்பதால் அதனை சேகரித்து வைக்க முடியாத நிலையில், வந்தவிலைக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகளும் தள்ளப்படுகின்றனர். அப்படியான நிலையில் அவதிப்பட்டு வந்த 72 வயதான விவசாயியான அசோக்கும் அவரது மனைவி குசும் உடன் இணைந்து நிலையற்ற சந்தையில் வாழைப்பழங்களை நேரடியாக விற்பனை செய்வதற்குப் பதிலாக மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக பதப்படுத்துவதன் மூலம் அதன் ஷெல்ஃப் லைஃபை அதிகரிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, இத்தம்பதியினர் இன்று வாழைப்பழங்களை மதிப்புக்கூட்டி வாழைப்பழ சிப்ஸ், ஜாம், மிட்டாய், பப்பட், சிவ்டா (தட்டையான வாழைப்பழம்), லட்டு, சேவ் மற்றும் குலாப் ஜாமுன் போன்ற வாழைப்பழ பொருட்களை தயாரிக்கிறது. சுவாரஸ்யமாக, இவர்கள் வாழைப்பழத்திலிருந்து பிஸ்கட்களையும் புதுமையாக உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரலில் மத்திய அரசு அவர்களின் வாழைப்பழ பிஸ்கட்டுகளுக்கு காப்புரிமை வழங்கியது. பரிசீலனையில் உள்ள மேலும் இரண்டு காப்புரிமைகளுக்கும் அவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
"எங்கள் விளைப்பொருட்களை விற்க முயற்சிக்கும் போதெல்லாம், நஷ்டத்தையே சந்தித்தோம். வாழை விவசாயம் ஏன் லாபகரமாக இல்லை என்று யோசித்த போது அதன் ஷெல்ஃப் லைஃப் தான் அதற்கு காரணமாக இருந்தது. ஒருமுறை விதைத்த வாழையை ஓராண்டுக்குப் பிறகுதான் அறுவடை செய்ய முடியும். அறுவடை காலம் சுமார் 28 நாட்கள் ஆகும். ஒரு சீப்பு வாழைப்பழத்தை உற்பத்தி செய்ய சுமார் ரூ.150 செலவாகும். அதேசமயம், ஒரு குவிண்டால் [100 கிலோ] விளைச்சலுக்கு ரூ.1,000 மட்டுமே சம்பாதிக்கிறோம். கிட்டத்தட்ட சாகுபடிச் செலவுக்கு சமம். ஒரு கிலோ வாழைப்பழத்தை வெறும் ரூ.1.25க்கு கூட விற்றுள்ளோம்."
எங்கள் பகுதியில் வாழைப்பழங்கள் மொத்தமாக உற்பத்தி செய்யப்படுவதால், அதிக வரத்துக்கு மத்தியில் குறைந்த விலை கிடைக்கிறது. சந்தையில் விலைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. வாழைப்பழம் அழுகும் பொருளாக இருப்பதால், விளைபொருட்களை இருப்பு வைக்கவும் முடியாது.
அதனால், விவசாயிகள் வாழைப்பழங்களை விரைவில் விற்பனை செய்ய வேண்டும். மேலும், விளைச்சல் பழுக்க ஆரம்பித்தால், தூக்கி எறியும் விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கஷ்டப்பட்டு விளைந்த விளைபொருட்கள் வயலில் அழுகுவதை அடிக்கடி பார்க்கிறோம், என்று வேதனையுடன் பகிர்ந்தார் அசோக்.
வக்கீல் படிப்பிலிருந்து வாழைப்பழ வணிகம்!
யாவல் தாலுகாவில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த அசோக், ஜல்கானில் சட்டம் பயின்றார். எல்.எல்.பி பட்டம் பெற்ற பிறகு, அவர் சுமார் 5 ஆண்டுகள் சட்டப் பயிற்சி செய்தார். இருப்பினும், 1990ம் ஆண்டில் அவரது தந்தை இறந்த பிறகு அவரது பயிற்சியை கைவிட வேண்டியிருந்தது.
"தலைமுறை தலைமுறையாக வாழை பயிரிட்டு வருகிறோம். என் தந்தையின் மறைவுக்குப் பிறகு, பண்ணையை நிர்வகிக்கும் முழுப் பொறுப்பும் எனக்கு வந்தது. சட்டத்தில் ஆர்வம் இருந்தபோதிலும் சட்டத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. நாங்கள் இந்த நுட்பத்தை எங்கிருந்தும் கற்றுக் கொள்ளவில்லை, எனவே, நாங்கள் வாழைப்பழங்களில் தொடர்ந்து பரிசோதனை செய்தோம். இறுதியில், வாழைப்பழத்தில் இருந்து பிஸ்கட்களை கண்டுபிடித்தோம். வாழைப்பழம், நெய், சர்க்கரை ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த பிஸ்கட்களைத் தயாரிக்கிறோம்," என்று 12.5 ஏக்கர் விவசாய நிலத்தை வைத்திருக்கும் அசோக் கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, அசோக்கும் அவரது மனைவியும் இந்த வாழைப்பழ பிஸ்கட்களை உள்ளூரில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில் இதற்கான காப்புரிமையை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளனர். இந்த காப்புரிமையால் அவர்களின் அனுமதியின்றி மற்றவர்கள் அவர்களது கண்டுபிடிப்பை நகலெடுப்பதைத் தடுக்க முடியும்.
"எங்கள் கண்டுபிடிப்பு எங்களின் அறிவுசார் சொத்து என்பதால் அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினோம். நாங்கள் காப்புரிமையைப் பெற்ற பிறகு, எங்கள் தயாரிப்புக்கான தேவை அதிகரித்தது, மேலும் அங்கீகாரத்தையும் பெற்றோம்," என்றார்.
மதிப்புக்கூட்டலின் மகத்துவம்; ஆண்டுக்கு ரூ50 லட்சம் வருவாய்...
ஒரு கிலோ வாழைப்பழ பிஸ்கட்களை மொத்த விற்பனையில் ரூ.400க்கும், சில்லறை சந்தையில் ரூ.500க்கும் விற்பனை செய்வதன் மூலம் தம்பதியினர் 4 மடங்கு லாபத்தை ஈட்டுகின்றனர். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கண்காட்சிகளின் மூலம் ஒரு வாரத்திற்கு 200 முதல் 350 கிலோ வாழைப்பழ பிஸ்கட்களை விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ50 லட்சம் வருமானம் ஈட்டுகின்றனர்.
மகாராஷ்டிரா மட்டுமல்லால், மேற்கு வங்காளம், ஒடிசா, கர்நாடகா மற்றும் டெல்லியிலும் அவர்களது வாடிக்கையாளர்கள் உள்ளனர். மத்திய அரசிடமிருந்து வாழைப்பழ பிஸ்கட்டுகளுக்கு காப்புரிமை பெற்றதன் மூலம் அவர்களது சந்தை விரிவடையும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிவித்தனர். காப்புரிமை காரணமாக தேவை அதிகரித்திருப்பதுடன், அசோக் அவரை போன்ற விவசாயிகளுக்கு பயனளிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறார்.
"நாங்கள் அதிக ஆர்டர்களைப் பெறுகிறோம். அதற்காக கிராமத்தில் உள்ள 50 வாழை விவசாயிகளுடன் கூட்டு சேர்ந்து அவர்களது விளைப்பொருள்களை கொள்முதல் செய்கிறோம். 1,000 சதுர அடி பரப்பளவில் 'சங்கல்ப் எண்டர்பிரைசஸ்' என்ற உற்பத்திப் பிரிவையும் நிறுவியுள்ளோம். இந்தூர் மற்றும் கோலாப்பூரில் இருந்து இயந்திரங்களை வாங்கி, தயாரிப்பு யூனிட் அமைப்பதற்காக சுமார் 30 முதல் 40 லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம். தேவை அதிகரித்து வருவதால், வாழைப்பழங்களை பதப்படுத்தும் பணிக்கு முற்றிலும் மாறியுள்ளோம். இனிமேல் வாழைப்பழங்களை விற்க மாட்டோம்," என்று கூறிப் புன்னகைக்கிறார் அசோக்.
தமிழில்: ஜெயஸ்ரீ