உலகின் நம்பர் ஒன் பணக்காரர்கள் என்றால் நமக்கு யாரெல்லாம் நினைவுக்கு வருவார்கள்? எலான் மஸ்க், பில் கேட்ஸ், ஜெஃப் பெசோஸ் உள்ளிட்டோர் தானே. ஆனால், தன்னுடைய அதிபுத்திசாலித்தனம் மற்றும் கணிதத்தில் அதீத மேதமை மூலம் பில்லியன் கணக்கில் டாலர்களை குவித்த ஒருவர் இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா? அவர்தான் ஜிம் சைமன்ஸ்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் 1938-ஆம் ஆண்டு பிறந்த ஜிம் சைமன்ஸ், சிறுவயதிலிருந்தே கணிதப் பாடத்தில் ஆர்வம் கொண்ட மாணவராக திகழ்ந்தார். அவரது அதீத கணித மேதைமை காரணமாக பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. எனினும், சைமன்ஸ் தன்னை கல்வி அளவில் மட்டுமே சுருக்கிக் கொள்ளவில்லை.
பாதுகாப்பு பகுப்பாய்வு கில்லி
பனிப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ, சைமன்ஸை பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தியது.
தனது அற்புதமான கணிதத் திறமைகள் மூலம் கடினமான ‘கோட்’களை கூட உடைத்து, ஜிம் சைமன்ஸ் அமெரிக்கா பாதுகாப்புத் துறைக்கு பதற்றமான காலகட்டங்களில் பக்கபலமாக விளங்கினார்.
1968-ல் சிஐஏ-வை விட்டு வெளியேறிய சைமன்ஸ், அதன் பிறகு, நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையின் தலைவரானார். பின்னர், தனது கவனத்தை பங்குச் சந்தையின் பக்கம் திருப்பினார்.
தனது 40-வது வயதில், நியூயார்க்கில் மோனிமெட்ரிக்ஸ் என்ற நிதி மேலாண்மை நிறுவனத்தை நிறுவினார். ஆரம்பத்தில், சைமன்ஸ் தனது கணித மூளையை நிதி உலகில் பயன்படுத்துவது குறித்து கருத்தில் கொள்ளவில்லை. எனினும், சந்தையின் போக்கை கணிக்க கணித மாதிரிகளை உருவாக்குவது சாத்தியம், என்பதை அவர் கண்டறிந்தார்.
எனவே, தான் சிஐஏ மற்றும் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் இருந்த காலகட்டத்தில் தனக்க பழக்கமான சில கணிதப் புலிகளை தன்னுடைய இந்த புதிய முயற்சியில் சேர்த்துக் கொண்டார்.
பங்கு தேர்வு உத்திகள்
குறுகிய காலத்திலேயே பல வெற்றிகளை குவிக்கத் தொடங்கிய மோனிமெட்ரிக்ஸ் நிறுவனத்தின் பெயர் ரெனேஸ்ஸான்ஸ் டெக்னாலஜிஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சைமன்ஸ் மற்றும் அவரது சகாக்களின் தொடர் உழைப்பின் காரணமாக, அவர்களது கணித மாதிரிகள், பாரம்பரிய பங்கு தேர்வு உத்திகளை பின்னுக்கு தள்ளின.
1988-ஆம் ஆண்டில் ஒரு மாற்றம் சார்ந்த உத்தியை சைமன்ஸ் கையில் எடுத்தார். தன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிக நடைமுறைகளையும் கணிதம் அடிப்படையில் மாற்ற முடிவு செய்தார். இது ஒரு மிகப் பெரிய கேம்-சேஞ்சராக அமைந்தது. இந்த மாதிரிகளின் வெற்றி என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
புகழ்பெற்ற மெடாலியன் ஃபண்ட் (பிளாக்-பாக்ஸ் ஸ்ட்ரேடஜி ஃபண்ட்) பல தசாப்தங்களாக, கட்டணக் குறைப்புகளுக்குப் பிறகும் கூட, 30 சதவீதத்துக்கும் அதிகமான வருடாந்திர வருமானத்தைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் விளைவாக 2012-ல் சைமன்ஸின் நிறுவனம் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு சொத்தை நிர்வகித்தது. இது சைமன்ஸின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கணித மேதைமைக்கு சான்று.
இதுவும் புரட்சியே!
1988 முதல் 2018 வரை ரெனேஸ்ஸான்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் லாபத்தை ஈட்டியிருந்தது. தனது வெற்றிக்கான காரணம் ஜிம் சைமஸ் ஒருபோதும் பகிர்ந்துகொள்ளவில்லை. தனது நிறுவனத்தின் வெற்றிக்கு தங்கள் ‘சீக்ரெட் சாஸ்’ தான் காரணம் என்று கூறுகிறார்.
ஜிம் சைமன்ஸ் இந்த ஆண்டு மே மாதம் மறைந்தபோது அவரது சொத்து மதிப்பு 31 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
பொருளாதார வெற்றியால் மட்டுமே ஜிம் சைமன்ஸ் புகழ்பெறவில்லை. உள்ளுணர்வு அடிப்படையில் இயங்கி வந்த ஒரு துறையில் கணித அறிவை பயன்படுத்தி புரட்சியை நிகழ்த்தியவர் ஜிம் சைமன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
'கூகுளின் வெற்றியை கணித்து தொடக்க காலத்திலே முதலீடு செய்த இந்திய முதலீட்டாளர்' - யார் இந்த ராம் ஸ்ரீராம்?
Edited by Induja Raghunathan