ஆடைத்தொழிற்சாலையில் நேர்ந்த கோரஅனுபவங்களை மாற்றத்திற்கான இயக்கமாக மாற்றிய இருபெண்கள்..!

02:30 PM Dec 28, 2024 | YS TEAM TAMIL

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களாக கடுமையான மற்றும் சுரண்டல் நிலைமைகளை சகித்துக்கொண்டு, பணியாற்றிய ஜானகி மற்றும் கல்பனா ஆகிய இருவரும் அவர்களது அனுபவங்களை மாற்றத்திற்கான சக்திவாய்ந்த இயக்கமாக மாற்றி ஆடை தொழிற்சாலையில் பெண்களுக்கான உரிமையினை கோர குரல் எழுப்பி வருகின்றனர்.

45 மில்லியன் மக்கள் பணியாற்றும் இந்தியாவின் ஆடைத் தொழில் துறையில் 60-70% க்கும் அதிகமானோர் பெண்கள். அவர்களில் பலர் கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பு உள்ளிட்ட சுரண்டல் வேலை நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். ஆண்களை விட குறைவாகவே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடு, குடும்ப மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்.

தொழிற்சாலைகள் சட்டம் 1948, பெண்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்த போதிலும், அது அவர்களை சுரண்டலில் இருந்து பாதுகாக்கத் தவறிவிட்டது. சுமார் 10% ஆடைத் தொழிற்சாலைகள் மட்டுமே தொழிற்சங்கமாக்கப்பட்டுள்ள நிலையில், சிறந்த பணிச்சூழலைக் கோர பெண் தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் ஆதரவு கிடைப்பதில்லை. இந்நிலையில், அதிகமான பெண் தலைவர்கள் ஆடைத்தொழில் பணியாற்றும் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மனிதாபிமானமற்ற சூழலில், சுகாதாரம் மற்றும் இதர வசதிகள் குறைவாக இருந்த நிலையிலும், தினமும் 15 மணி நேரத்திற்கும் மேலாக ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள் ஜானகி மற்றும் கல்பனா. முன்னாள் தொழிலாளர்களான அவர்கள் அனுபவித்த கொடுமையின் எதிரொலியாக இன்று, அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்தும் பெண்களைப் பாதுகாக்கும் தொழிற்சங்கமான தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்மென்ட்ஸ் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் (GAGU) தலைவர்களாக, அவர்களுக்கான உரிமையினை கோர குரல் எழுப்பி வருகின்றனர்.

மனித கடத்தலில் இருந்து தப்பியவர்களுக்கான தேசிய மன்றமான ILFAT (கடத்தலுக்கு எதிரான ஒருங்கிணைக்கப்பட்ட தலைவர்கள் மன்றம்)-ன் தலைவர்களாகவும் உள்ளனர். ஏழு மாநிலங்களில் ஏறக்குறைய 4,000 உறுப்பினர்களுடன், உயிர் பிழைத்தவர்களின் குரல்களைப் பெருக்கி, முறையான மாற்றத்தை உண்டாக்க முயற்சிக்கும் வலையமைப்பாக ILFAT செயல்படுகிறது. அவர்களின் வார்த்தைகளில் அவர்களின் கதைகள் இங்கே...

ஜானகி, ஈரோடு மாவட்டம்

"12 ஆம் வகுப்பு முடித்த பிறகு, என் பெற்றோரால் என்னை மேல் படிப்பு படிக்க வைக்க முடியவில்லை. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஜவுளித் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது பெற்றோர் என்னிடம், நீயும் அங்கே வேலை செய்யலாம், அவர்கள் படிக்க வசதி செய்து தருவார்கள் என்று சொன்னார். 3 ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்தால் எனது திருமணத்திற்கு ரூ.1 லட்சம் தருவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது.

பின்பு தான், என்னை வேலைக்குச் சேர்த்துவிட்ட பக்கத்து வீட்டுக்காரர் ஒரு ஏஜென்ட் என்பதும், என்னை வேலையில் சேர்த்துவிட்டதற்காக அவருக்கு கமிஷனாக ரூ.3,000 வழங்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.

தொடக்கத்தில் உதவியாளராக பணியமர்த்தப்பட்டேன். ஒரு விடுதியில் ஒரே அறையில் 10-11 பெண்களுடன் சேர்ந்து தங்க வைக்கப்பட்டோம். தினமும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து குளியலறையில் வரிசையில் நின்று வேலைக்குத் தயாராக வேண்டும். காலை 8 மணிக்கு வேலை தொடங்கும். மாலை 5 மணிக்கு ஷிப்ட் முடிவடையும். ஆனால், ​​​​சில நேரங்களில் இரவு 10 மணி வரை தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அதற்கு கூடுதல் நேர ஊதியமெல்லாம் தர மாட்டார்கள். எனக்கு மாதம் சம்பளமே ரூ.4,000 தான்.

"எந்நேரமும் நின்றுகொண்டே இருக்கவேண்டும். ஓய்வு எடுக்கவோ, பிரேக் எடுக்கவோ முடியாது. மாதவிடாய் சமயங்களில் நிலையை கூறி கெஞ்சினாலும், அவர்கள் எங்களுக்கு ஒரு சின்ன பிரேக் எடுத்துகொள்ளகூட அனுமதிக்கமாட்டார்கள். வீட்டிற்கு போன் பேச அனுமதி கிடையாது. தொழிற்சாலையில் நடக்கும் அவலங்களை யாரிடமாவது கூறி புகார் கொடுக்கலாம் என்றால், அதற்கு வழியில்லாதவாறு, இந்த தொழிற்சாலையில் தான் பணிபுரிகிறேன் என்பதற்கு எந்தவொரு அடையாள அட்டையோ, ஆதாரமோ இல்லை."

இவை அனைத்திற்கும் இடையில், எனது கல்வியைத் தொடர வழியேயில்லை. இனியும் என்னால் அங்கு பணிபுரிய முடியாது என்றநிலையில், வேலையை விட்டு விலக எண்ணினேன். ஆனால், அதற்கு ​​நிர்வாகம் என்னை அனுமதிக்கவில்லை. எனது பெற்றோர் READ-ஐ அணுகினர். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் உள்ள பெரியார் நகரில் செயல்படும் READ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனமானது பெண்களுக்கான அதிகாரம், பெண் மாணவர்களுக்கு கல்வி கற்பது மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளில் பெண்களின் நிலைமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. அக்குழுவினர் தொழிற்சாலையிலிருந்து என்னை மீட்டனர்.

எனது கல்விக்கு ஆதரவளிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். பிஇ படித்து முடித்து, தொண்டு நிறுவனத்திலிருந்து பல்வேறு பயிற்சி அமர்வுகள் மூலம், மாவட்ட மகளிர் கூட்டமைப்பின் செயலாளராக பொறுப்பேற்றேன். திருமணமான பிறகு, அதே மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் குடியேறியநிலையில் அங்குள்ள READ அத்தியாயத்தில் வேலை செய்யத் தொடங்கினேன்.

2018ல் GAGU (Garments and General Workers Union)-ஐத் தொடங்கினோம். ஆடைத் தொழிலில் பெண்கள் எதிர்கொள்ளும் சுரண்டல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினோம். ஆட்கடத்தல் மற்றும் வழக்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினோம். இந்த தொழிற்சாலைகளை விட்டு வெளியேறும் பெண்களுக்கு ஆதரவளித்தோம்.

ஒருமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மற்றும் கொத்தடிமையாக பணிபுரிந்த புலம்பெயர்ந்த சிறுமியை மீட்டோம். தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்களுக்கு பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ சலுகைகள் வழங்கப்படுவதையும், அவர்களின் உடல்நலம் கவனிக்கப்படுவதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம்.

2019ம் ஆண்டில் ILFAT -இல் தலைவராக சேர்ந்தேன். மேலும் ஜவுளித் துறையில் பெண்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எழுப்ப இந்த பதவியை பயன்படுத்துகிறேன். ஏனெனில், இந்த அமைப்பில் நிறைய கடத்தல் நடக்கிறது. GAGU ஆனது ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் செயல்படுகிறது. எதிர்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் எங்கள் பணி விரிவடையும் என நம்புகிறோம்.

"இங்கே பல ஜானகிகள் மீட்கப்படுவதற்காகக் காத்திருக்கிறார்கள். என் வேலை இப்போதுதான் தொடங்கியுள்ளது," என்று பகிர்ந்தார் ஜானகி.

கல்பனா, கோயம்புத்துார்

"சிறுவயதில் அப்பா அடிக்கடி குடித்துவிட்டு எங்களை அடிப்பார். உட்கார்ந்து படிக்கக் கூட இடம் கிடையாத அளவிற்கு சிறிய வீட்டில் தான் வசித்து வந்தோம். 9 ஆம் வகுப்பு படிக்கும் போது, நோய்வாய்பட்டதில் தேர்வு எழுத முடியவில்லை. 9ம் வகுப்பில் ஃபெயில் ஆகினேன். அம்மா என்னை மீண்டும் பள்ளிக்குச் செல்லும்படி வற்புறுத்தினார். ஆனால், என் ஜுனியர் பெண்களுடன் ஒன்றாக படிக்க வெட்கப்பட்டேன். வேலைக்காவது போ என்று அம்மா சொன்னதால், வீட்டுக்கு பக்கத்திலே ஒரு பைக் மற்றும் கார் உதிரிபாக கடையில் வேலைக்கு சென்றேன். ஒரு நாள் சம்பளம் ரூ.30 மட்டுமே. எட்டு மாதங்கள் அங்கு பணிபுரிந்தேன்.

முழுக்க முழுக்க உடல் உழைப்பிலான வேலை என்பதால், அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. 15வயதில் திருமணம் நடந்தது. 18 வயதிற்குள் இரண்டு குழந்தைகள் பிறந்தன. என் மாமியார் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி என்னை வேலைக்குச் செல்லும்படி கூறினார்.

அதனால், ஒரு ஜவுளி மில்லில் வேலைக்கு சேர்ந்தேன். கடினமாக உழைத்ததால், அவர்கள் என்னை கனரக இயந்திரங்களை இயக்கச் செய்தார்கள். அதற்காக அதிக சம்பளம் அளிப்பதாக உறுதியளித்தனர். ஆனால், அது ஒரு போதும் நடக்கவில்லை. வயிற்று வலி, வீக்கம் மற்றும் ஒவ்வாமையால் அவதிப்பட்டேன். 1.5 வருடங்கள் பணிபுரிந்தபின் வேலையை விட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக மீண்டும் வேலைக்கு சென்றேன்.

எங்கள் பகுதியில் 'ரீட்' எனும் தொண்டு நிறுவனம் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்திவந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பக்கத்து வீட்டுக்கார பெண் கட்டாயப்படுத்தினார். அவரது வற்புறுத்தலின் பேரில் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அங்கு அவர்கள் சொன்னதை கேட்டு அதிர்ந்துபோனேன்.

அவர்கள் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் PF மற்றும் ESI கோரும் உரிமை பற்றி பேசினர். பின், PF மற்றும் ESI பற்றி எனது மேலாளரிடம் கேட்டேன். அதற்கு சிறிது காலம் எடுத்தாலும், அதற்கான செயல்முறையை செய்து முடிந்தனர். ஆனால், நான் அளித்த புகார்கள் மற்றும் விசாரணைகள் நிர்வாகத்துடன் சரியாகப் போகவில்லை. கொளுத்தும் வெயிலில் என்னை வேலை செய்ய வைத்தார்கள் அல்லது பருத்தி எடுக்க வைப்பார்கள். சின்னசின்ன காரணங்களுக்காக ஊதியத்தை அடிக்கடி குறைத்தனர். அத்தகைய நிலைமைகளை பொறுத்து கொண்டு 5 ஆண்டுகள் அங்கு வேலை செய்தேன்.

அநாமதேய ஆதாரத்தின் தகவலின் பேரில், ரீட் சோஷியல் சர்வீசஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், மில் இருந்த மாவட்டத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தின் உதவியுடன் மீட்புப் பணியை மேற்கொண்டது. இப்போது, ​​நான் GAGU இன் உறுப்பினராகவும், ILFAT தலைமைக் குழு உறுப்பினராகவும் உள்ளேன். ஆடைத் துறையில் பெண்களின் உரிமைகளுக்காகப் பணியாற்றி வருகிறேன். பெண் தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைகளை புரிய வைக்க விரும்புகிறேன்.

ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், சட்டத்தின் கீழ், அவர்களது உரிமைகளுக்கு தகுதியானவர்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன்.