பரப்பரப்பான வாழ்வில் குடும்ப பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கும் பெண்கள் அவர்களது ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை சமூகத்தில் விதைத்து, எண்ணற்ற பெண்களுக்கு யோகா பயிற்சியினை இலவசமாக வழங்கி, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறார் வினிதா கஸ்வான்.
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள ராஜஸ்தானில் உள்ள சிறிய நகரமான ஸ்ரீ கங்காநகரில், 30 பெண்கள் கொண்ட குழு ஒன்று கூடி யோகாசனம் செய்வது வழக்கமான ஒன்று. அதற்குக் காரணம் வினிதா கஸ்வான். 5 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் யோகா பயிற்சி அமர்வுகளை இலவசமாக வழிநடத்தி வருகிறார்.
பரப்பரப்பான வாழ்வில் குடும்ப பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கும் பெண்கள் அவர்களது ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை சமூகத்தில் விதைத்து, எண்ணற்ற பெண்களுக்கு யோகா பயிற்சியினை இலவசமாக நடத்தி வருகிறார். அவரது மாணக்கருள் ஒருவரான சங்கீதா சவுத்ரி, இதற்கு முன்பு யோகாவை முயற்சித்ததில்லை. ஆனால், வினிதா அருகிலுள்ள பூங்காவில் யோகா அமர்வுகளை வழிநடத்துவதைக் கவனித்தபோது அவரது ஆர்வத்தைத் தூண்டியது. இறுதியில், அவர் அதை முயற்சி செய்ய முடிவு செய்து குழுவில் சேர்ந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, யோகா அவரது அன்றாட வழக்கத்தின் ஒரு அங்கமாகிவிட்டது. இந்த ஆண்டு, வினிதா அவரை ஊக்கப்படுத்தியதில் சங்கீதா, மாவட்ட அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க முடிவு செய்தார். இது அவரது முதல் முயற்சி என்றாலும் அவரது அர்ப்பணிப்பும் மற்றும் பயிற்சிம் பலனளித்தது.
அவர் தங்கப் பதக்கத்தை உறுதிசெய்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். மாநிலப் போட்டியிலும் சங்கீதா மற்றொரு தங்கப் பதக்கம் வென்றார். இப்போது, இரண்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளுடன், அவர் தேசிய யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.
"யோகா போட்டியில் பங்கேற்க வினிதா மேம் என்னை ஊக்குவித்தார். அது உண்மையிலேயே வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது. அவருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும், போதுமானதாக இருக்காது. அவர் என் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த யோகா பயிற்சி அமர்வுகள், பெண்களை ஒருங்கிணைத்து, இணைப்புகளை உருவாக்கி, சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முயற்சிக்க வைக்கும் ஒரு இடமாகும்," என்று மகிழ்ச்சியுடன் கூறினார் சங்கீதா.
உடல்நலத்துடன், இழந்த நம்பிக்கையை மீட்ட யோகா!
2003ம் ஆண்டில் வினிதாவிற்கு யோகா அறிமுகமாகியது. தொடர்ந்து யோகா பயிற்சி எடுத்து வந்தாலும், குழந்தைகளை கவனிப்பது, குடும்பப் பொறுப்புகளும், கடமைகளும் அதிகமாகியதில், யோகாவிற்கான முக்கியத்துவம் படிப்படியாக குறைந்தது. சில ஆண்டுகள் கழிந்தநிலையில், அவர் முகவலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். உடல்நலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது.
நோயின் தீவிரம் காரணமாக ஸ்டெராய்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அதிலும் சவால்கள் நிறைந்து இருந்தன. மருந்துகளை எடுத்து கொண்டதில் எடை அதிகரிப்பு, முடி இழப்பு, மற்றும் சில உடல் மாற்றங்களுக்கு வழிவகுத்தன. இது அவரது நம்பிக்கையையும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதித்தது.
"அது பெரும் போராட்டத்தின் காலம். உடல் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது. ஆனால், அது என் வாழ்க்கை முறையை மறுபரிசீலனை செய்யத் தூண்டியது. ஒரு நாள், நண்பர் ஒருவர் அருகில் உள்ள பூங்காவில் ஒரு வாரகால யோகாசன வகுப்பில் சேர ஊக்குவித்தார். அமர்வின் முடிவில், குழுவில் உள்ள பெண்கள் வகுப்புகளை தொடர விரும்பினர். அதற்கு என்னைப் பொறுப்பேற்கச் சொன்னார்கள். நான் ஒவ்வொரு நாளும் இந்த பெண்களுடன் யோகா பயிற்சி செய்தேன். யோகா பயிற்சி பற்றி நிறைய கற்றுக்கொண்டேன்," என்று பகிர்ந்தார்.
வினிதா யோகாவை வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றிய ஒன்றரை ஆண்டுகளில், அவரது உடல்நிலையை மாற்றியது. அவருடைய வலிமையையும் நம்பிக்கையையும் மீண்டும் பெற உதவியது. அவர் சில யோகா சான்றிதழ் படிப்புகளை முடித்தார் மற்றும் யோகா போட்டிகளுக்கான நடுவர் சான்றிதழைப் பெற்றார்.
இந்த கட்டம் அவர் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை. அதன்பிறகிருந்து, வினிதா இலவசமாக யோகா பயிற்சி அமர்வுகளை நடத்தத் தொடங்கினார். அப்பயிற்சி அமர்வுகளுக்கு பாட்டி முதல் இளம் பெண்கள் வரை அனைத்து வயது பெண்களும் கலந்து கொள்வதாக அவர் தெரிவித்தார்.
"யோகா என் வாழ்க்கையை மாற்றியது, அதன் பலன்களை கண்கூடாக அனுபவிக்கையில் அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து உதவுவது முக்கியம் என்று உணர்ந்தேன். அதிர்ஷ்டவசமாக, நிலையான நிதிநிலையில் இருக்கிறேன். எனது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் யோகா பெரும் பங்கு வகித்தது. எனக்கு கிடைத்த இந்த பரிசை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதால், இந்த வகுப்புகளுக்கு யாரிடமும் கட்டணம் வசூலிக்க மாட்டேன். மாணவர்களிடம் கேட்கும் ஒரே விஷயமென்றால் அது வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே," என்றார்.
இதுவரை ஏறக்குறைய 300 பெண்களுக்கு வினிதா யோகா பயிற்சி அளித்துள்ளார். பயிற்சி வகுப்பில் பெண்கள் சேரும்போது, முதலில் அடிப்படை யோகாக்கள் மூலம் அவர்களின் உடல் நெகிழ்வுத்தன்மையை மதிப்பிடுகிறார். பின்னர், அவர்களின் உடல்நலத்திற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட பயிற்சிகளை அவர்களுக்கு கற்பிப்பதாக வினிதா விளக்குகிறார்.
ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் யோகா!
ஒன்றரை ஆண்டுகளாக வினிதாவுடன் யோகா பயிற்சி செய்து வரும் சங்கீதா, யோகா சமூகம் அவருக்கு குடும்பம் போல் மாறிவிட்டதாக தெரிவித்தார்.
"என்னுடைய கர்ப்பப்பை வாய்ப் பிரச்சினைகள் மற்றும் முதுகுவலி ஆகியவற்றில் யோகா எனக்கு உதவியது. பயிற்சி அமர்வுகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. அவற்றை நான் ஒருபோதும் இழக்க விரும்பியதில்லை. ஊருக்கு சென்றாலும், வகுப்பை தவறவிட்டதை நினைத்து வருத்தப்படுவேன்," என்றார் சங்கீதா.
யோகா பயிற்சியில் கலந்துகொள்ளும் ஷரஞ்சீத் கூறுகையில், இந்த இடம் பெண்களுக்கான புகலிடமாகும். நாங்கள் எங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், ஒருவரையொருவர் ஆதரிக்கவும் கூடி, குடும்பம் போல் உணரும் சமூகத்தை உருவாக்குகிறோம், என்று உணர்வுபூர்வத்துடன் பகிர்ந்தார்.
"பெரும்பாலும் பல பெண்கள் அவர்களது ஆரோக்கியத்தை புறக்கணிக்கின்றனர். இந்த வகுப்புகள் அவர்கள் மீது கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. இது பெண்களின் சமூகம் என்பதால், அனைவரும் ஒருவரையொருவர் ஊக்குவித்து கொள்கினறனர். அமர்வுகளை ஈடுபாட்டுடன் வைத்திருக்க, சில நேரங்களில் சில பயிற்சிகளைச் சுற்றி விளையாட்டுகள் அல்லது போட்டிகளை ஏற்பாடு செய்கிறேன். பிறந்தநாள் போன்ற சிறப்பு நிகழ்வுகளையும் கொண்டாடுகிறோம்."
கிராமத்தில் இருந்து ஸ்ரீ கங்காநகருக்கு அவரது பேரக்குழந்தையை பராமரிக்க வந்த ஒரு பெண் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில், அவர் யோகா பயிற்சி செய்யலாமா என்று தயங்கினார். பின், யோகா வகுப்பில் கலந்துகொண்டார். சில நாட்கள்பிறகு அவர் ஜெய்ப்பூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் யோகா கற்பிக்கத் தொடங்கினார்.
வரும்காலத்தில் பயிற்சி வகுப்புகளை விரிவுபடுத்தி, நகரத்தில் ஒரு யோகா மையத்தைத் திறப்பதன் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து யோகா பயிற்சி அளிப்பேன்," என்று கூறி முடித்தார்.
12,300 அடி உயரத்தில் ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளித்துள்ள 78 வயது யோகா ஆசிரியை!
தமிழில்: ஜெயஸ்ரீ