'2024ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு' - 83 மில்லியன் ஆர்டர்களுடன் 9வது ஆண்டாக பிரியாணி முதலிடம்!

04:30 PM Dec 26, 2024 | Chitra Ramaraj

வாழ்வதற்காக சாப்பிடுகிறோமா அல்லது சாப்பிடுவதற்காக வாழ்கிறோமா என நாமே யோசிக்கும் அளவிற்கு, மக்களின் சாப்பாடு பிரியம் சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். அதனால்தான், தெருவுக்கு பத்து உணவகங்கள் புதிதாக முளைக்கின்றன. போதாக்குறைக்கு வீட்டில் இருந்தபடியே, பிடித்த உணவகங்களில், பிடித்தமான உணவை, எந்த நேரத்திலும் ஆர்டர் செய்து கொள்ளலாம் என்ற வசதி வந்தபிறகு, மக்களைக் கையிலே பிடிக்க முடிவதில்லை.

இரவில் எந்த நேரமாக இருந்தாலும் ஸ்விக்கி, ஜோமாட்டோ என ஆன்லைனில் ஆர்டர் செய்து விரும்பியதை சாப்பிட்டுக் கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இப்படி ஆன்லைனில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துத்தான் வருகிறது.

அதனால்தான், ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் எவை என்ற பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, இப்போது ஸ்விக்கி நிறுவனம் தங்கள் தளத்தில், அந்த ஆண்டு இந்திய மக்கள் விரும்பிச் சாப்பிட்ட உணவுகளைத் தர வரிசை செய்து பட்டியலாக வெளியிட்டுள்ளது.

அதில், உள்ள அனைத்து புள்ளிவிவரங்களும் ஜனவரி 1, 2024 மற்றும் நவம்பர் 22, 2024 இற்கு இடையில் சேகரிக்கப்பட்ட தரவை அடிப்படையாகக் கொண்டவையாகும். இந்தப் பட்டியலில், கடந்த எட்டு ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் வேறு யாரையும் நுழைய விடாமல் பிரியாணிதான் முதலிடத்தில் இருந்து வருகிறது.

பிரியாணி

பிரியாணி என்ற வார்த்தைக்கு நம் நாட்டில் ரசிகர்கள் ஏராளம். ஒவ்வொரு ஊர் பிரியாணிக்கும் ஒவ்வொரு தனிச்சுவை, அதனை தயாரிக்கும் விதம் மாறுபடும் என்றாலும், அதனைத் தேடித்தேடி சாப்பிடுவதில் மக்களுக்கு ஆர்வம் அதிகம். இந்திய உணவாக இல்லாவிட்டாலும், ஏனோ இந்தியர்களின் பிரதான பிரியமான உணவாகி விட்டது இந்தப் பிரியாணி.

இந்தாண்டு மட்டும் ஸ்விக்கி மூலமாக,

சுமார் 8.3 கோடி பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதாவது, ஒரு நிமிடத்திற்கு 158 ஆர்டர்கள், பிரியாணி பிரியர்கள் பிரியாணியை வாங்கி மணமணக்கச் சாப்பிட்டுள்ளனர். இதனை கிட்டத்தட்ட, ஒரு நொடிக்கு 2 பிரியாணி ஆர்டர் என கணக்கிட்டுள்ளது ஸ்விக்கி. இதன் மூலம் தொடர்ச்சியாக 9வது ஆண்டாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாகப் பிரியாணி தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது.

3ம் இடத்தில் சென்னை

இந்திய அளவில், ஸ்விக்கி ஆர்டர்களில் பெரும்பகுதி தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் செய்யப்பட்டுள்ளது. அதில், 2024ம் ஆண்டில் 9.7 மில்லியன் பிரியாணி ஆர்டர்களுடன், ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து பெங்களூரு, 7.7 மில்லியன் ஆர்டர்களுடன் இரண்டாம் இடத்திலும், சென்னை 4.6 மில்லியன் உணவு ஆர்டர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஒரு பிரியாணி மலைக்கு நிகரான 46.1 லட்சம் சிக்கன் பிரியாணிகளை சென்னைவாசிகள் இந்த ஆண்டு சாப்பிட்டுள்ளதாக ஸ்விக்கி அறிக்கை குறிப்பிடுகிறது. ஒரு வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் 66 பிரியாணிகளை ஆர்டர் செய்து இந்த பிரியாணி மலைக்கு மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்திருப்பதாக நகைச்சுவையான இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மிட்நைட் பிரியாணி

அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி அதிகபட்சமாக 4.9 கோடி முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி ஆர்டரில் 97 லட்சம் பிரியாணி ஆர்டர்களுடன் ஹைதராபாத் முதலிடத்திலும் 77 லட்சம் பிரியாணி ஆர்டர்களுடன் பெங்களூர் 2வது இடத்திலும் 46 லட்சம் பிரியாணி உடன் சென்னை 3வது இடத்திலும் உள்ளது. 

சிக்கன் பிரியாணிக்கு பிறகு மட்டன் பிரியாணி ஹைதராபாத்தில் மட்டும் 22 லட்சம் ஆர்டர்களுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும், புதிதாக ஸ்விக்கியில் இணைந்தவர்களில் சுமார் 28 லட்சம் பேர் தங்களது முதல் ஆர்டராக பிரியாணியை ஆர்டர் செய்ததாகவும், நள்ளிரவு 12 முதல் 2 மணி வரை பசியைப் போக்க பிரியாணி அதிகளவில் ஆர்டர் செய்யப்படுவதாகவும் ஸ்விக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் இடத்தில் தோசை

பிரியாணிக்கு அடுத்த இடத்தில், இந்தியர்களால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக தோசை உள்ளது. இந்த ஆண்டு 23 மில்லியன் ஆர்டர்களை தேசை பதிவு செய்துள்ளதாக ஸ்விக்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சிக்கன் ஃப்ரைடு ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் ஃப்ரைடு ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன் போன்றவை இடம் பிடித்திருக்கின்றன.

வெளிநாட்டு உணவில் இட்டாலின் பாஸ்தா, பிட்ஸா, மெக்ஸிக்கன் பௌல், ராமென், சூஸி ஆர்டர் ஆகி உள்ளது. இனிப்புகளில் குலாப் ஜாமூன், ரசமலாய், லாவா கேக், ரசகுல்லாவும் ஸ்னாக்ஸில் சமோசா, பாப்கான், பாவ் பஜ்ஜியும் ஆர்டர்கள் அதிகம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

ரூ.10,000 கோடி பிரியாணி சந்தை:

உணவு மார்க்கெட்டைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் மட்டும் பிரியாணி மூலம் நடத்தப்படும் வர்த்தகமானது 10,000 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இதில், ஒழுங்கமைக்கப்பட்ட பிரியாணி சந்தையின் மதிப்பு ரூ.2,500 கோடி என்றும், அமைப்புசாரா பிரியாணி சந்தை ரூ.7,500 கோடிக்கும் அதிகமாக உள்ளதாகவும் தமிழ்நாட்டில் உணவு வணிகத்தைக் கண்காணிப்பவர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது, ஹோட்டல்களில் விற்கப்படும் பிரியாணியைவிட, சாலையோரங்களில் தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்படும் பிரியாணி வர்த்தகம் அதிகம், என்கிறார்கள்.

திண்டுக்கல் தலப்பாக்கட்டி, ஜூனியர் குப்பண்ணா, புகாரி, அஞ்சப்பர், சேலம் ஆர்ஆர் பிரியாணி, பொன்னுசாமி மற்றும் எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி போன்ற நிறுவனங்கள், தமிழ்நாட்டின் பிரியாணி தொழிலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நன்கு அறியப்பட்ட பிராண்டுகளுக்கு இணையாக, பல்வேறு பெயர்களில் இயங்கும் நடுத்தர அளவிலான நிறுவனங்களின் பரந்த நெட்வொர்க்கும் உள்ளது. எண்ணற்ற தள்ளு வண்டி விற்பனையாளர்கள் பகல் மற்றும் இரவு முழுவதும் பிரியாணியை வழங்குவதால், அனைத்து நேரத்திலும், அனைத்து இடங்களிலும் பிரியாணி சுலபமாகவும், பரவலாகவும் கிடைக்கிறது.

50% சென்னையில்தான்

சென்னை முஸ்லிம் பிரியாணி (பாசுமதி அரிசி), கொங்கு பிரியாணி (சீரக சம்பா அரிசி), செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பாணி பிரியாணி, வாலாஜா பாணி பிரியாணி மற்றும் திண்டுக்கல் பாணி பிரியாணி ஆகியவை பிரபலமான சில பாணிகள் என்று பிரியாணி விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரியாணிக்கான மிகப்பெரிய சந்தையாக சென்னை விளங்குவதாகவும், தமிழ்நாட்டின் மொத்த பிரியாணி விற்பனையில் 50% வணிகம் சென்னையில் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.