கதைசொல்லலின் மூலம் 'சித்தி' சமூகத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் கோபி!

03:01 PM Dec 30, 2024 | YS TEAM TAMIL

வர்த்தகம், இடம்பெயர்வு மூலம் இந்தியாவிற்கு அடிமைகளாகவோ, கூலிப்படையாகவோ அல்லது மாலுமிகளாகவோ அழைத்து வரப்பட்டு, பின்னர் இந்திய சமுதாயத்தில் இணைக்கப்பட்ட 'சித்தி 'சமூகத்தார், எதிர்கொள்ளும் சமூக பாகுபாடுகள் மற்றும் சவால்களுக்கு கதைச்சொல்லலின்வழி, குரல் எழுப்புவதுடன் அவர்களது பராம்பரியத்தை மீட்டெடுத்து வருகிறார், கோபி சன்னா சித்தி.

பல ஆண்டுகளாக, கோபி சன்னா சித்தி, கர்நாடகாவின் ஹுலசிஹோண்டாவில் உள்ள குண்டகனி கிராமத்தில் உள்ள மக்களால் "பைத்தியம்" என்று அழைக்கப்பட்டார். எப்போது முகத்தில் ஒரு மயக்கமான புன்னகை, தனக்குத்தானே பேசுதல், விலங்குகள், பறவைகள் மற்றும் அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு இடையேயான நட்பு பற்றிய கதைகளை சொல்லி கொண்டு வலம்வந்ததால் மக்களால் அப்பெயர் பெற்றார்.

ஆனால், அவர் துக்கம், சுதந்திரம் மற்றும் சூழலியல் பற்றிய கதைகளின் பொக்கிஷம் என்பது மக்களுக்கு பின்னரே தெரிய வந்தது. கோபி சன்னா, சித்தி சமூகத்தை சேர்ந்தவர். கதைச்சொல்லல் மூலம் அவர்களது பராம்பரியத்தை மீட்டெடுத்து வரும் கோபி, நகையை அடகு வைத்து சுயமாக அவரது புத்தகத்தை வெளியிட்டுள்ள எழுத்தாளர்.

யார் இந்த 'சித்தி' மக்கள்

சித்தி மக்கள் என்பவர்கள் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டின் ஜான்சி கடற்கரை பகுதியில் வாழ்ந்த பாண்டு மக்களில் ஒரு குழுவினர். 7 ஆம் நூற்றாண்டில் வர்த்தகம், இடம்பெயர்வு மற்றும் கட்டாய இடப்பெயர்வு மூலம் இந்தியாவிற்கு வந்த, அவர்கள் அடிமைகளாகவோ, கூலிப்படையாகவோ அல்லது மாலுமிகளாகவோ அழைத்து வரப்பட்டு, பின்னர் இந்திய சமுதாயத்தில் இணைக்கப்பட்டனர். காலப்போக்கில், அவர்களில் பலர் உள்ளூர் மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டனர்.

அதே நேரத்தில், அவர்களின் பாரம்பரியங்களை எதிரொலிக்கும் தமல் இசை மற்றும் நடன வடிவங்கள் ஆகிய அவர்களின் ஆப்பிரிக்க பாரம்பரியத்தின் கூறுகளை பராமரித்து வருகின்றனர். இந்தியாவில் சித்தி மக்கள் தொகை 20,000–50,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் கணிசமானோர் கர்நாடகாவின் உத்தர கன்னடா, தார்வாட் மற்றும் பெலகாவி ஆகிய மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

கோபியின் கணவர் அவரை விட்டு, வேறு பெண்ணோடு சென்று 35 வருடங்களாகி விட்டன. இலக்கை அடைவதில் அவருக்கிருக்கும் அவரது விடாப்பிடிவாதம், அவருக்கான எல்லாவற்றிருக்குமாக அவரை போராட செய்தது. அவரது விளைநிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டதில் தொடங்கி, அவரது புத்தகத்தினை சுயமாக வெளியிடுவது வரை அவருக்காக அவர் போராடியுள்ளார். அவரது புத்தகத்தை வெளியிடுவதற்காக நகைகளை அடகு வைத்து, வேலை செய்தவர்களிடமிருந்து கடன் பெற்றார்.

கர்நாடகாவின் உத்தர கன்னடாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான BuDa Folklore இன் நிறுவனரான சவிதா உதய், 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரது வீட்டு வேலைக்கு ஆள் தேடியபோது, கோபியை சந்தித்துள்ளார். இத்தொண்டு நிறுவனமானது, உள்நாட்டு கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளைப் பாதுகாக்கும் வேட்கையில் செயல்பட்டுவருகிறது.

"கோபி வலிமையானவர், சுதந்திர மனநிலை கொண்டவர், எதற்கும் தயங்காதவர். எவ்வித தடைகளுக்கும் கட்டுப்படாத அவரது ஆளுமையால், அவரை வலுவானவராகவும், எதையும் தாங்கக்கூடியவளாகவும் கருதுபவர்களால் மாவீரன் என்று அழைக்கப்பட்டார். ஆனால், வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட போராட்டங்களே அவரது இன்றையநிலைக்கு அவரை ஆளாக்கியுள்ளது. அவர் துயரம், சுதந்திரம் மற்றும் சூழலியல் பற்றிய கதைகளின் புதையல். அவையாவும் அவரது அம்மா மற்றும் பாட்டியிடம் இருந்து கேட்டு வளர்ந்த கதைகள். அக்கதைகளை அவர் சந்திக்கும் நபர்களிடம் கடத்த அவர் விரும்பினார்," என்று கூறினார் சவிதா.

சித்தி சமூகத்தார், வறுமை மற்றும் கல்வி, சுகாதாரம், நிலையான வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை எதிர்கொண்டதாக அறிக்கைகள் காட்டுகின்றன. மேலும், அவர்கள் ஒரு அடையாள நெருக்கடியையும் எதிர்கொள்கின்றனர்.

ஏனெனில், அவர்களின் ஆப்பிரிக்க உடல் அம்சங்கள் அவர்களை சமூக பாகுபாட்டுக்கு ஆளாக்குகின்றன. இதன் விளைவாக அவர்கள் பெரும்பாலும் முக்கிய இந்திய சமூகத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள். அவர்களில் பலர் வன வளங்களை நம்பியிருப்பதால், சித்திகள் வன உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும், வன உரிமைச் சட்டத்தின் கீழ் நிலம் மற்றும் உரிமைகளைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் அதிகாரத்துவத் தடைகளையும் சமாளிக்கவேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

2003ம் ஆண்டில் கர்நாடகாவில் பட்டியலிடப்பட்ட பழங்குடி அந்தஸ்து சித்தி சமூகத்துக்கு வழங்கப்பட்ட போதிலும், கொள்கை வகுப்பதில் சமூகத்தின் இடமும் குரல்களும் மிகக் குறைவாகவே உள்ளன. வாழ்க்கையில் அவர் கடந்துவந்த இச்சவால்களே கோபியின் உள்ளிருந்த எழுத்தாளரை வெளிக் கொண்டு வந்தது, என்கிறார் கோபியைப் பற்றிய ஆவணப்படம் எடுத்த பெங்களூரைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் நிஷாந்த் குருமூர்த்தி.

குருமாமா பிலிம்ஸ் நிறுவனத்துடன், புடா ஃபோக்லோர் இணை பங்குதாரராக இணைந்து தயாரித்துள்ள இப்படம் கடந்த மாதம் நடைபெற்ற 'ஆல் லிவிங் திங்ஸ் சுற்றுச்சூழல் திரைப்பட விழா'-வின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டது.

"நான் பிறந்த வீட்டிற்குச் சொந்தமானவளா அல்லது திருமணம் செய்துகொண்ட வீட்டிற்குச் சொந்தமானவளா அல்லது என் வாழ்நாள் முழுவதும் நான் பாதுகாத்த காடுகளுக்குச் சொந்தமானவளா? என் வீடு எங்கே இருக்கிறது?" என்று கோபி அவரது ஆவணப்படத்தில் உரைக்க கேட்டு, பார்வையாளர்களுக்கு அவரது சமூகம் வரலாற்று ரீதியாக எதிர்கொண்ட பிரிவினை மற்றும் இடப்பெயர்வு பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறார்.

சிறுவயதில், அவர் வேறு ஊர்களுக்குச் செல்லும்போது, ​​மக்கள் அவரை 'ஆப்பிரிக்கன்' அல்லது 'நீக்ரோ' என்று அழைத்ததை கோபி நினைவு கூர்ந்தார். அச்சமயங்களில், சிறுப்பிள்ளையான கோபி வீட்டிற்கு ஓடி வந்து அவரது பாட்டியிடம் ஏன் அப்படி அழைக்கிறார்கள்? என்று கேட்டுள்ளார். அவர்களின் மூதாதையர்கள் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் கப்பலில் இந்த நிலத்திற்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்கள் என்றும் அவரது பாட்டி கோபியிடம் கூறியுள்ளார்.

"என் பாட்டியே அவர் கூறும் விஷயத்தில் அவரே உறுதியாகயில்லை. ஏனென்றால், அவருமே இங்கே பிறந்தவர் தான். இந்த இடம்பெயர்வு என்பது அவருக்கும் சில தலைமுறைகளுக்கு முன்பே நடந்தது," என்கிறார் கோபி.

உண்மைகளை உரைக்கும் கதைச்சொல்லி..!

முன்னோர்களிடமிருந்து பெற்ற துடிப்பான நாட்டுப்புறக் கதைகளின் வாரிசான கோபி, கர்நாடகா முழுவதிலும் உள்ள பள்ளி மாணவர்களுடன் கதை சொல்லும் அமர்வுகளை BuDa Folklore தொண்டு நிறுவனத்துடன் நடத்துகிறார். காட்டுத் தேன் சேகரிப்பாளரான கோபி, அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சேகரித்து வைத்திருந்த மருத்துவ மூலிகைகள் பற்றிய பழங்கால அறிவைப் பகிர்ந்து கொள்கிறார். மேலும், ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் பாம்பு மற்றும் கீரியின் கதை மற்றும் ஒரு விவசாயியின் கரும்புத்தோப்பில் விருந்து கொள்ளும் நரியின் கதையை சுவராஸ்யமாக சொல்வதன் மூலம் மனித-வனவிலங்கு மோதலை முன்னிலைப்படுத்தி காட்டுகிறார்.

இந்த கதைகளை உள்ளூர் அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் தொண்டு நிறுவனமானது, அவர்களுக்கு அவர்களின் நிலம், பாரம்பரியம் மற்றும் தலைமுறை ஞானம் ஆகியவற்றுடனான தொடர்பை வலுப்படுத்த முயல்கிறது. மேலும், நாடெங்கிலும் உள்ள நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு, அழிந்துவரும் மரபுகள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் பற்றிய ஆர்வத்தையும் வியப்பையும் ஏற்படுத்தும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

"மொழித் தடைகள் இருந்தபோதிலும் நகரக் குழந்தைகள் என்மீது எப்படி இவ்வளவு பாசம் வைக்கிறார்கள் என்பது சில சமயங்களில் ஆச்சரியமாக இருக்கிறது. கதையாடல் முடிந்து வீட்டிற்குச் செல்லும் நேரம் வரும்போது, ​​அவர்கள் என்னை அன்புடன் கட்டித் தழுவி விடைபெறுகிறார்கள். கனத்த இதயத்துடன் அவர்களிடமிருந்து விடைப் பெறுவேன். அவர்கள் பிரிந்து செல்லும் போது நான் உணரும் சோகம் சில சமயங்களில் தாங்க முடியாததாக இருக்கிறது," என்கிறார் கோபி.

2021 ஆம் ஆண்டில், கோபியின் கதைகள் புத்தகத்தின் 1,000 பிரதிகள் வெளியிடப்பட்டன. துரதிர்ஷடவசமாக அவற்றில் சில மட்டுமே விற்கப்பட்டன. அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெய்த கனத்த மழை அவரது கிராமத்தை மூழ்கடித்தது. அதில், அவரது புத்தகங்கள் உட்பட அனைத்து பொருட்களும் அழித்தன. கோபியும் அந்த நேரத்தில் நோய்வாய்ப்பட்டார். அவர் வளர்த்து வந்த நாய் ஒன்றையும் இழந்தார்.

"நான் கொஞ்சம் ஏமாற்றமடைந்தேன், இவ்வளவு பணத்தை இழந்ததற்கு வருந்துகிறேன். ஆனால், வாழ்க்கையில் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்கள் என்னை அன்புடனும் மரியாதையுடனும் அடையாளம் காட்டுகின்றனர். வாழ்க்கையில் துயரங்களை கண்டு பயப்பட்டதில்லை. அவற்றை தூசி தட்டிவிட்டு என் பயணத்தைத் தொடர்வேன்," என்று நம்பிக்கை வார்த்தைகளுடன் முடித்தார்.