ஏதர் முதல் ரேபிடோ வரை: 2024-ல் யூனிகார்ன் ஆக உயர்ந்த 6 நிறுவனங்கள்!

06:00 PM Jan 07, 2025 | Jai s

ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது சந்தை மதிப்பை 100 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7,500 கோடிக்கு நிகர்) அல்லது அதற்கும் மேலே உயர்த்தி கம்பீர நிலையை எட்டினால், அந்நிறுவனமே ‘யூனிகார்ன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த யூனிகார்ன் அந்தஸ்து, நிதி ரீதியான வெற்றியையும் தாண்டி, சந்தைதையும் அதன் தொலைநோக்கு பார்வையும் வெளிப்படுத்துகிறது.

2024-ம் ஆண்டில் உலகளவில் இருந்த சவாலான சூழல், சந்தையின் போக்கு, முதலீடுகள் போன்ற அனைத்து தடைகளையும் உடைத்து சில நிறுவனங்கள் ‘யூனிகார்ன்’ அந்தஸ்த்தை எட்டிப்பிடித்தன. இந்த புதிய யூனிகார்ன்கள் தொழில்முனைவோர் சூழல் அமைப்பின் பன்முகத்தன்மைக்கு சான்றாக உள்ளன.

இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவமான கதை உள்ளது. விடாமுயற்சி, கிரியேட்டிவிட்டி ஆகியவை இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிறைவேற்ற இந்த நிறுவனங்களை தூண்டியது. இந்தக் கட்டுரையில், 2024-ம் ஆண்டு யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற 6 தனித்துவமான ஸ்டார்ட் அப்களைப் பற்றி அலசுவோம்.

மின்சார வாகனங்கள் முதல் ஏஐ, ஃபின்டெக் வரை, 2024-ல் யூனிகார்ன் கிளப்பில் இணைந்த 6 ஸ்டார்ட் அப்களும் பல்வேறு வகையான துறைகளில் தொழில்களில் சாதித்துள்ளன.

இந்த 6 ஸ்டார்ட் அப்களையும் வேறுபடுத்துவது என்ன, அவர்களின் முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் சந்தையில் இவை எப்படி தலைமையாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டன என்பதை பற்றி பேசுவோம்.

1. ஏதர் எனர்ஜி (Ather Energy)

பெங்களூருவை தளமாகக் கொண்ட இரு சக்கர மின்சார வாகன நிறுவனம் ‘ஏதர் எனர்ஜி’. ஆகஸ்ட் 2024-ல் இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி அமைப்பிலிருந்து (NIIF) ரூ.600 கோடி நிதி உட்பட 1.3 பில்லியன் டாலர் திரட்டியதால் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றது.

தருண் மேத்தா, ஸ்வப்னில் ஜெயின் ஆகிய இருவரால் 2013-ல் நிறுவப்பட்ட ‘ஏதர் எனர்ஜி’, இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னோடியாக இருந்து வருகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தியை தாண்டி, சார்ஜிங் ஸ்டேஷன் உள்கட்டமைப்பு, மின் விநியோக சேவைகளிலும் ‘ஏதர் எனர்ஜி’ ஈடுபட்டுள்ளது.

InnoVen Capital மற்றும் Stride வென்ச்சர் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 630 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ள ஏதர், பங்குசந்தை பொதுப்பட்டியல் மூலமாக 2 பில்லியன் டாலர் முதலீடுகளை பெற்றது.

ஒருபக்கம் முதலீடுகள் இருந்தாலும், மறுபக்கம் ஏதரின் லாபத்தை நோக்கிய பாதை சற்று கடினமாகவே உள்ளது. எனினும், ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஹீரோ மோட்டார்கார்ப் ஆகியவற்றுக்கு ஏத்தர் ஒரு வலிமையான போட்டியாளராக எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தையில் முன்னணியில் உள்ளது.

2. க்ருட்ரிம் (Krutrim)

பாவிஷ் அகர்வால் - இந்த பெயர் ஸ்டார்ட் அப் வட்டாரங்களில் நல்ல அறிமுகமான ஒன்று. ஆம், ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வாலின் மற்றொரு ஸ்டார்ட் அப் யூனிகார்ன் ‘க்ருட்ரிம்’. இது, இந்தியாவின் முதல் ஏஐ யூனிகார்னும்கூட. 2024 ஜனவரியில் பாவிஷ் அகர்வால் க்ருட்ரிமை நிறுவினார். தொடங்கிய ஒரு வருடத்திற்குள் 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டியது.

க்ருட்ரிம் கம்ப்யூட்டிங், தரவு சேமிப்புகளுக்கான AI சிப்களை உருவாக்குகிறது. இந்தியாவின் முதல் உள்நாட்டு AI சிப்களை உருவாக்கும் நிறுவனம் க்ருட்ரிம்.

ஓபன் AI, கூகுள் AI போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுடனும், சர்வம் AI போன்ற உள்நாட்டு நிறுவனங்களுடனும் போட்டியிடும் க்ருட்ரிம், இந்தியாவின் வளர்ந்து வரும் AI சூழல் அமைப்பில் ஒரு முன்னோடியாக உள்ளது.

3. மணிவியூ (Moneyview)

டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘மணிவியூ’ 2024 செப்டம்பரில் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்தது. முந்தைய ஆண்டில்தான் புனீத் அகர்வால் மற்றும் சஞ்சய் அகர்வால் ஆகியோரால் மணிவியூ தொடங்கப்பட்டது.

லோன் வழங்குவது போன்ற நிதி ரீதியான சேவைகளை வழங்கும் மணிவியூ, டைகர் குளோபல் மற்றும் ரிப்பிட் கேபிடல் போன்ற முதலீட்டாளர்களிடமிருந்து ஸ்டார்ட்அப் 188.3 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது.

2024ல் மணிவியூவின் வருவாய் 75% அதிகரித்து ரூ.1,012 கோடியாக இருந்தது. இதில், நிகர லாபம் 5.2% உயர்ந்து ரூ.171.15 கோடியாக அதிகரித்து இந்தியாவின் fintech துறையில் மணிவியூ ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

4. பெர்ஃபியோஸ் (Perfios)

ஃபின்டெக் சாஸ் நிறுவனமான ‘பெர்ஃபியோஸ்’ 2024 மார்ச்சில் 80 மில்லியன் டாலர் நிதி திரட்டி, யூனிகார்ன் கிளப்பில் நுழைந்தது.

2008-ல், வி.ஆர்.கோவிந்தராஜன் மற்றும் தேபாசிஷ் சக்ரவர்த்தி ஆகியோரால் தொடங்கப்பட்ட பெர்ஃபியோஸ், நிதி நிறுவனங்களுக்கு டேட்டா தகவல் சேவைகளை வழங்குகிறது. 18 நாடுகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களுக்கு சேவை செய்துவரும் இந்த ஸ்டார்ட்அப் 2023-ம் ஆண்டில் லாபகரமாக மாறியது. அந்த ஆண்டு அதன் லாபம் ரூ.7 கோடி, அதன் வருவாய் ரூ.406 கோடி. இப்போது அமெரிக்க பங்கு சந்தையில் ஐபிஓ வெளியிட தயாராகி வருகிறது.

5. ரேபிடோ (Rapido)

அனைவருக்கும் தெரிந்த நிறுவனம் ரேபிடோ. ரைட்-ஹெய்லிங் ஸ்டார்ட்அப் நிறுவனமான ரேபிடோ 120 மில்லியன் டாலர் நிதி திரட்டி, யூனிகார்ன் கிளப்பில் ஜூலை 2024-ல் இணைந்தது. ரிஷிகேஷ் எஸ்ஆர், பவன் குண்டுபள்ளி, அரவிந்த் சங்கா ஆகியோரால் 2015-ல் தொடங்கப்பட்ட, ரேபிடோ பைக் டாக்ஸி, ஆட்டோ என போக்குவரத்து துறையில் செயல்பட்டு வருகிறது.

ரேபிடோ இதுவரை 625 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. அதேநேரம், வருவாய் இழப்பை 45%-க்கும் மேல் குறைத்துள்ளது.

ஓலா, உபெர் என ரேபிடோவுக்கு போட்டி நிறுவனங்கள் சந்தையில் அதிகரித்தாலும், பியர்-டு-பியர் டெலிவரி போன்ற புதுமையான சேவைகளுடன் ரேபிடோ சந்தையில் முன்னணியில் உள்ளது.

6. ரேட்கெய்ன் (RateGain)

2024-ல் யூனிகார்ன் கிளப்பில் நுழைந்த ஒரே லிஸ்ட் செய்யப்பட்ட கம்பெனி என்றால் அது, ‘ரேட்கெய்ன்’ மட்டுமே. ரேட்கெய்ன் டிராவல் தொடர்பான சேவைகளை வழங்குகிறது. 2004-ல் பானு சோப்ரா என்பவரால் தொடங்கப்பட்ட இது, 100 நாடுகளில் சேவைகளை வழங்குகிறது.

இந்த துறையில் ரேட்கெய்னின் வலுவான வளர்ச்சி, யூனிகார்ன் கிளப்பில் நுழைவதற்கான அந்தஸ்தை பெற்றுதந்தது. அதன் லாபமும் அதிகரித்தது. காலாண்டில் இதன் வருவாய் 18% உயர்ந்து ரூ.277 கோடியாக இருந்தது, லாபமோ ரூ.52 கோடியாக இருந்தது.

இப்படியாக, இந்திய ஸ்டார்ட் அப் சூழல் அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியை சந்தித்துவருகிறது. மேலே சொல்லப்பட்ட இந்த ஆறு நிறுவனங்களும் தங்கள் தொழில்களில் ஒரு பெஞ்ச்மார்க்கை அமைத்துள்ளன. இந்த 6 யூனிகார்ன் நிறுவனங்களின் வளர்ச்சி அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை ஊக்குவிக்குக்கின்றன.


Edited by Induja Raghunathan