ஐஐடி மெட்ராஸ், இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தைத் தொடங்கியுள்ளது.
மேம்பட்ட வசதிகளுடன் கூடிய இந்த ஆய்வுக் கூடம், ஐஐடி மெட்ராஸ் மற்றும் நாட்டின் ஆராய்ச்சி- தொழில்நுட்பத் திறன்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஐஐடி மெட்ராஸ்-ல் இருந்து 36 கி.மீ. தொலைவில் தையூரில் அமைக்கப்பட்டுள்ள ‘டிஸ்கவரி’ செயற்கைக்கோள் வளாகத்தில் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய துறைமுகங்கள், நீர்வழிகள், கடல்சார் பொறியியல் போன்றவற்றில் உள்ள சவாலான பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் பிரத்யேக வசதிகள் இங்கே உள்ளன. இது சிக்கலான அலைகள், கடல் நீரோட்டத்தைக் கையாளக் கூடிய பல்திசை ஆழமற்ற அலைப்படுகையாகும்.
துறைமுகங்கள், நீர்வழிகள், கடலோரப் பகுதிகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சிக்கூடம், துறைமுகங்கள்- கடல்சார் துறையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், புதிய சிந்தனைகள், மேம்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மையமாகும்.
இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாகச் செயல்படுவதுடன், துறைமுகங்கள், இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்குகிறது.
“இந்த ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடம் சர்வதேச அரங்கில் ஐஐடி மெட்ராஸ்-ஐ பெரிய அளவில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக நிலைநிறுத்தும். ஆராய்ச்சி - தொழில் பயன்பாடுகளுக்கான ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆய்வகத்தில் அலைகளை உருவாக்க பிற நாடுகளின் தொழில்நுட்பத்தை நாம் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது,” என ஐஐடி மெட்ராஸ் பெருங்கடல் பொறியியல் துறை பேராசிரியர் முரளி கூறினார்.
“இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் புனையமைப்புகளில் (fabrications) பெரும்பாலானவை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியவை. கட்டுமானத் திட்டமிடல், தொலைத்தொடர்பு, வடிவமைப்பு போன்ற இயக்கத்திற்கான வசதிகள் ஐஐடி-யில் தயார் நிலையில் இருந்து வருவதுடன், நீண்டகாலம் நிலைத்து நிற்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டன.
புதிய துறைமுகங்கள், கடல்சார் பொறியியல், உள்நாட்டு நீர்வழித் திட்டங்கள் என இந்திய அரசின் எதிர்கால முன்முயற்சிகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவையாகும், என்று ஐஐடி மெட்ராஸ் பெருங்கடல் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் வி.ஸ்ரீராம் கூறினார்.
பல்கலைக்கழக அளவில் உலகிலேயே மிகப் பெரிய கடல்அலை நீரோட்டம் மற்றும் படுகையை இயக்கி வரும் ஜெர்மனியின் ஹானோவரில் உள்ள லீப்னிஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டார்ஸ்டன் ஸ்லூர்மான் (இந்த புதிய ஆராய்ச்சிக் கூடம் அறிவு மற்றும் கண்டுபிடிப்புகளைத் தேடுவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியிருப்பதாகக் குறிப்பிட்டார்.
Edited by Induja Raghunathan