Stock News: மீளும் பங்குச் சந்தை - சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் ஏறுமுகம்

11:16 AM Jan 07, 2025 | Jai s

ஒரே நாளில் பேரிழப்பைக் கண்ட இந்தியப் பங்குச்சந்தை மீளத் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் ஏறுமுகம் கண்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.7) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 422.62 புள்ளிகள் உயர்ந்து 78,387.61 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 160.2 புள்ளிகள் உயர்ந்து 23,776.25 ஆக இருந்தது.

எச்எம்பி வைரஸ் பரவல் உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தையில் நேற்று கடும் வீழ்ச்சி நிலவியது. நேற்றை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,258 புள்ளிகள் (1.59%) சரிந்து 77,964.99-ல் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 389 புள்ளிகள் (1.62%) வீழ்ச்சி கண்டு 23,616.05-ல் நிலைத்தது. முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. தற்போது பங்குச் சந்தை மீளத் தொடங்கியுள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 307.73 புள்ளிகள் (0.39%) உயர்ந்து 78,272.73 ஆகவும், நிஃப்டி 127.35 புள்ளிகள் (0.54%) உயர்ந்து 23,743.40 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் ஓரளவு சாதக நிலையுடன்தான் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல் மற்றும் டோக்கியோ பங்குச் சந்தைகளில் ஏற்றமும், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தையில் இறக்கமும் நிலவுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வம் சற்றே கூடியிருப்பதும் இந்தியப் பங்குச் சந்தை மீளக் காரணமாகும்.

ஏற்றம் காணும் பங்குகள்:

டைடன் கம்பெனி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஏசியன் பெயின்ட்ஸ்

டாடா மோட்டார்ஸ்

ஐசிஐசிஐ பேங்க்

இண்டஸ்இண்ட் பேங்க்

நெஸ்லே இந்தியா

டாடா ஸ்டீல்

மாருதி சுசுகி

ஐடிசி

இறங்கு முகம் காணும் பங்குகள்:

எஸ்பிஐ

ஹெச்டிஎஃப்சி பேங்க்

விப்ரோ

டெக் மஹிந்திரா

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

டிசிஎஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா குறைந்து ரூ.85.75 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan