கிரிப்டோ தாக்குதலில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உதவ ரூ.600 கோடி நிதியை அறிவித்தது 'CoinSwitch'

12:48 PM Jan 08, 2025 | YS TEAM TAMIL

கிரிப்டோ மேடையான 'CoinSwitch', கடந்த ஆண்டு WazirX மீது நடைபெற்ற சைபர் தாக்குதலில் 230 மில்லியன் டாலர் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக்களை இழந்த பயனாளிகளுக்காக ரூ.600 கோடி அளவிலான காயின்ஸ்விட்ச் கேர்ஸ் (CoinSwitch Cares) திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த நிதி இரண்டு ஆண்டு காலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், பயனாளிகள் தங்கள் இழப்பை மீட்டெடுக்கும் வகையில் இது அமைகிறது, என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயனாளிகள், இழப்பை மீட்டெடுக்கலாம், பரிசுகள் வெல்லலாம் மற்றும் கிரிப்டோ சந்தையில் மீண்டும் நுழையலாம்.

தற்போது நிகழும் பிட்காயின் ஏறுமுக போக்கில் பயன்பெற முடியாமல் போனது தொடர்பாக WazirX பயனாளிகள் பலரும் சமூக ஊடகங்களில் முறையிட்டதை அடுத்து இந்த அறிமுகம் நிகழ்கிறது. நிறுவனம் தனது மேடையை பயனாளிகளுக்காக மீண்டும் திறக்கும் செயல்முறையில் உள்ளது.

காயின்ஸ்விட்ச்சில் பயனாளிகளை முதன்மையாக கருதுகிறோம். நீண்ட கால வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அதே வேளையில், சவாலான சூழலில் இந்திய கிரிப்டோ சமூகத்திற்கு துணை நிற்க விரும்புகிறோம். துறையின் முன்னணி நிறுவனம் என்ற முறையில், கிரிட்போ சூழலுக்கு, குறிப்பாக கிரொப்டோ சந்தை உயர்ந்துள்ள நிலையில் உதவ நினைக்கிறோம்.

இந்திய கிரிப்டோ முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது. நாம் இழந்ததை மீண்டும் உருவாக்குவதற்கான முக்கிய முயற்சி இது,” என்று காயின்ஸ்விட்ச் இணை நிறுவனர் அசிஷ் சிங்கால் கூறியுள்ளார்.

“பாதிக்கப்பட்ட பயனாளிகள் தற்போதைய சந்தையை தவறவிடாமல் இருக்கவேண்டும் மற்றும் தங்கள் கிரிப்டோவை விரைவாக செயலுக்கு கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இதன் மூலம் இழப்பை சரி செய்வதோடு, டிரேடிங் மூலம் சம்பாதிக்கலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பயனாளிகள் காயின்ஸ்விட்ச் மேடையில் பணத்தை உடனடியாக டெபாசிட் செய்யலாம் அல்லது தங்கள் பணத்தை வாசிர் எக்ஸ் திரும்பித்தர காத்திருந்து பின் டெபாசிட் செய்யலாம். பயனாளிகள் தங்கள் WazirX அறிக்கையை சமர்பித்து, வெரிபை செய்து பரிசுகளை பெறலாம்.

இந்த பரிசு முறையின்படி, தகுதியுள்ள பயனாளிகள் இந்த திட்டம் வாயிலாக டெபாசிட் செய்யும் பணத்திற்கு இரண்டு ஆண்டுகளில் 10 சதவீதம் வரை பலன் பெறலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை திரட்டி பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்படும். மேலும், இந்த திட்டத்தை பாதிக்கப்பட்ட மற்ற பயனாளிகளுக்கு பரிந்துரைப்பதன் மூலம் கூடுதலாக 5 சதவீத பலன் பெறலாம்.

ஆகஸ்ட் மாதம், WazirX தாக்குதலுக்குப்பிறகு, நிறுவனத்திற்கு எதிராக காயின்ஸ்விட்ச் நடவடிக்கை எடுத்து, மேடையில் சிக்கியிருந்த ரூ.81 கோடி நிதியை மீட்டது.

ஆங்கிலத்தில்: சாய் கார்த்தி


Edited by Induja Raghunathan