இந்திய செமி-கண்டக்டர் துறைக்கு அடுத்த 18 மாதகாலம் மிக முக்கியமானது - அறிக்கையில் தகவல்

12:57 PM Feb 28, 2026 | YS TEAM TAMIL

இந்திய செமிகண்டக்டர் துறைக்கு அடுத்த 18 மாதங்கள் மிகவும் முக்கியமான சோதனை காலமாக இருக்கும் என்றும், இந்தத் துறை உலகளவில் போட்டியிடும் நிலைக்கு உயருமா என்பதைக் தீர்மானிக்கும் காலமாக இது அமையும் என்றும் Endiya Partners வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

“India Semiconductor Ecosystem: From Policy to Execution” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் (fabs) அமைப்பது இந்தியாவின் முதல் கட்டமாக இருந்தாலும், அவற்றை உலகத் தரத்தில் போட்டியிடும் வகையில் செயல்படுத்த விரிவான மற்றும் ஆழமான சுற்றுச்சூழல் அமைப்பு அவசியம், என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்ட சதீஷ் ஆண்ட்ரா,

“நாம் fab-களை கட்டுவோமா என்பது கேள்வியாக இல்லை; அவற்றை போட்டித்திறனுடன் இயக்க முடியுமா என்பதே முக்கியம். இதனால் முதலீட்டு சூழல் மாறுகிறது. மேலும், ஒரு சிப் தயாரிப்பு ஸ்டார்ட்-அப்-ஐ விட, வடிவமைப்புக் கருவிகள் மற்றும் உற்பத்தி செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் முதலீடு அவசரமாக தேவைப்படுகிறது,” என தெரிவித்துள்ளார்.

டாடா குழுமம் உருவாக்கி வரும் ‘தோலேரா’ (Dholera) fab 2026 டிசம்பரில் உற்பத்தியைத் தொடங்க உள்ளது. இது இந்தியாவின் செமிகண்டக்டர் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. எனினும், முதல் ‘சிப்’ உற்பத்தி மட்டுமல்லாமல், 28nm/40nm node-களில் 6–12 மாதங்களுக்குள் இலக்கு உற்பத்தி திறன் (yield) அடைவதே உண்மையான வெற்றியாக இருக்கும், என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், அமைக்கப்பட்டுள்ள மூன்று OSAT (Outsourced Semiconductor Assembly and Test) மையங்கள் பெருமளவு உற்பத்திக்கு நகர வேண்டியது அவசியம் என்றும், Design Linked Incentive (DLI) திட்டத்தின் கீழ் செயல்படும் 23 ஸ்டார்ட்-அப்’கள் prototype tape-out நிலையிலிருந்து வருவாய் ஈட்டும் கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இலக்குகள் நிறைவேற்றப்பட்டால்தான் இந்தியாவின் செமிகண்டக்டர் முயற்சி உண்மையா அல்லது வெறும் லட்சியமா என்பது தெளிவாகும், என அறிக்கை தெரிவிக்கிறது.

2026–27 மத்திய பட்ஜெட்டில் ISM 2.0க்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உற்பத்தி உபகரணங்கள், மூலப்பொருட்கள், உள்நாட்டு அறிவுசார் சொத்து (IP) மேம்பாடு மற்றும் சிறப்பு திறனாளர்கள் உருவாக்கம் ஆகியவற்றுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ISM 1.0 காலத்தில் உள்கட்டமைப்பு முதலீடுகள் வேகமெடுத்திருந்தாலும், அடிப்படை சுற்றுச்சூழல் திறன்கள் குறைவாகவே இருந்தன என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா இன்னும் 90 சதவீதத்திற்கும் அதிகமான செமிகண்டக்டர் உபகரணங்கள் மற்றும் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. Analog, RF மற்றும் compute design IP போன்ற துறைகளில் உள்நாட்டு திறன்கள் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றன. 2023 ஆம் ஆண்டில் 5 மில்லியன் டாலராக இருந்த செமிகண்டக்டர் ஸ்டார்ட்-அப் முதலீடு, 2025 ஆம் ஆண்டில் 50 மில்லியன் டாலராக பத்து மடங்கு உயர்ந்தாலும், உலகளாவிய அளவுடன் ஒப்பிடுகையில் இது இன்னும் குறைந்த அளவிலேயே உள்ளது என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தொகுப்பு: முத்துகுமார்