‘அனைத்து வேலைகளையும் AI பறிக்காது’ - எப்போதும் நிலைத்திருக்கும் பணிகளை பட்டியலிட்ட ஸ்ரீதர் வேம்பு!

11:26 AM Mar 03, 2026 | muthu kumar

தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) வேகமாக முன்னேறி பல நிறுவனங்களில் பணிநீக்கங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீதர் வேம்பு மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட சில தொழில்கள் எப்போதும் AI மூலம் மாற்ற முடியாதவை என்று தெரிவித்துள்ளார்.

மனிதத்துவம் நிறைந்த தொழில்கள் நிலைத்திருக்கும்

Zoho நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, X (முன்னாள் Twitter) தளத்தில் வெளியிட்ட பதிவில், AI மனிதர்களின் தன்னம்பிக்கைக்கும் சுயமதிப்பிற்கும் சவால் விடுக்கிறது என்று குறிப்பிட்டார்.

“நமது சுயமதிப்பு நாம் உருவாக்கும் பொருளாதார மதிப்பிலிருந்தோ அல்லது அறிவாற்றல் பெருமையிலிருந்தோ வந்தால், AI அதற்கு கடுமையான சவாலாக இருக்கும்,” என அவர் பதிவிட்டுள்ளார்.

ஆனால், சம்பளம் அல்லது புகழுக்காக அல்லாது, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பலர் உள்ளனர்; அவர்களின் பணிகள் AI மூலம் பாதிக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

AI-க்கு அப்பாற்பட்ட தொழில்கள்

ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் முதியோரைக் கவனிக்கும் பராமரிப்பாளர்கள், விவசாயிகள், வனக் காவலர்கள், கோவில் பூசாரிகள், பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஆகியவை, ஏஐ-க்கு அப்பாற்பட்ட ஸ்ரீதர் வேம்பு எடுத்துக்காட்டிய தொழில்கள்.

“குழந்தைகளை பராமரிப்பது, கற்பித்தல், நல்ல ஊதியம் தரும் வேலையை விட்டு விவசாயத்திற்கு திரும்புவது, காடுகளை நேசித்து ரேஞ்சராகப் பணியாற்றுவது, யாரும் இல்லாவிட்டாலும் தினசரி பூஜைகளை நடத்தும் கோவில் பூசாரிகள் – இவர்கள் யாரும் பணம் காரணமாக இவற்றைச் செய்யவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

சிறிய கூட்டங்களுக்கு முன்னாலும் கலை நிகழ்த்தும் கலைஞர்கள், பாரம்பரியத்தை பாதுகாக்கும் நபர்கள் போன்றோர் கூட அதிக வருமானம் எதிர்பார்க்காமல் பணியாற்றுகின்றனர். இத்தகைய பணிகள் மனித உணர்வு, அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பொறுப்புடன் இணைந்தவை என்பதால் AI அவற்றை மாற்ற முடியாது, என அவர் நம்புகிறார்.

AI மாற்றும் வேலைவாய்ப்புகள்

தொழில்நுட்பத் துறையில் சமீபத்தில் பல பெரிய நிறுவனங்கள் பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. Block நிறுவனம் தனது பணியாளர்களில் சுமார் 40 சதவீதத்தை குறைப்பதாக அறிவித்தது. அதேபோல் eBay நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. AI பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

AI தரவுகளை பகுப்பாய்வு செய்து முடிவுகள் எடுக்கக்கூடியதாக இருந்தாலும், ஒரு பராமரிப்பாளரின் இரக்கம், ஒரு ஆசிரியரின் உணர்ச்சி பூர்வமான அணுகுமுறை, ஒரு பூசாரியின் பக்தி போன்ற மனித இயல்புகளை அது முழுமையாக பிரதிபலிக்க முடியாது.

மனித மதிப்பின் எதிர்காலம்

AI வளர்ச்சியால் பல தொழில்கள் மாற்றமடையலாம். ஆனால், மனித உணர்வு, அர்ப்பணிப்பு, சமூக உறவு ஆகியவற்றை மையமாகக் கொண்ட தொழில்கள் நிலைத்திருக்கும் என்பதே ஸ்ரீதர் வேம்புவின் கருத்து.

“மனித சமூகம் எதிர்காலத்தில் அதிகமாக இத்தகைய அர்த்தமுள்ள செயல்பாடுகளுக்கே திரும்பக்கூடும்,” என அவர் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

AI வளர்ச்சி பற்றிய அச்சங்களுக்கு மத்தியில், மனிதத்துவமே உண்மையான மதிப்பு என்பதை ஸ்ரீதர் வேம்பு கூறும்போது மனிதத்துவ பணிகளில் சம்பளம் கிடைக்குமா? இப்போதைய விலை வாசிகளில் மனிதத்துவ வேலைகளில் இருந்தால் திருமணம் கூட நடக்குமா போன்ற கேள்விகளுக்கு ஸ்ரீதர் வேம்புவிடம் பதிலில்லை.