2026-இல் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியது - Hurun அறிக்கை!

03:34 PM Jul 28, 2026 | muthu kumar

2025–26 நிதியாண்டில் (மார்ச் 31, 2026-இல் முடிவடைந்த ஆண்டு) ஆண்டு வருமானம் ரூ.100 கோடிக்கு மேல் இருப்பதாக வருமான வரி கணக்கில் தெரிவித்த இந்தியர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவரங்களை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. முராரி லால் மீனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது வெளியிட்டார். வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளின் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 2025–26 நிதியாண்டில் 576 பேர் ஆண்டு வருமானமாக ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் இருப்பதாக அறிவித்துள்ளனர். இது 2024–25 நிதியாண்டில் 415 பேராகவும், 2023–24 நிதியாண்டில் 284 பேராகவும் இருந்தது.

இதற்கிடையில், ஹுருன் குளோபல் ரீச் பட்டியலின்படி, 2026 மார்ச் நிலவரப்படி

இந்தியாவில் 308 பில்லியனர்கள் உள்ளனர். ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 284 ஆக இருந்தது. இருப்பினும், ’பில்லியனர்’ என்ற சொல்லுக்கு வருமான வரிச் சட்டம், 2025 அல்லது முன்னர் அமலில் இருந்த 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் எந்த சட்டபூர்வமான வரையறையும் இல்லை, என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஃபோர்ப்ஸ் ரியல்-டைம் பில்லியனர்கள் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 86.7 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார். அவரைத் தொடர்ந்து கவுதம் அதானி 85.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடனும், சாவித்ரி ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தினர் 37.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடனும் இடம்பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில், இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு குறித்து விவாதங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. உலக வருமான சமத்துவமின்மை அறிக்கை 2026-ன் படி, வருமானப் பகிர்வில் உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. அந்த அறிக்கையின்படி, நாட்டின் மொத்த வருமானத்தில் முதல் 10 சதவீதம் அதிக வருமானம் பெறுபவர்கள் 58 சதவீதத்தைப் பெறுகின்றனர். அதேவேளையில், கீழ்மட்ட 50 சதவீத மக்களுக்கு வெறும் 15 சதவீத வருமானமே கிடைக்கிறது.

ஆனால், இந்த மதிப்பீட்டை மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது. 2023–24 குடும்ப நுகர்வு செலவினக் கணக்கெடுப்பின் சமீபத்திய தரவுகளின்படி, வருமான ஏற்றத்தாழ்வைக் கணக்கிடும் ஜினி குணகம் கிராமப்புறங்களில் 0.237 ஆகவும், நகர்ப்புறங்களில் 0.284 ஆகவும் குறைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2022–23ல் இந்த மதிப்புகள் முறையே 0.266 மற்றும் 0.314 ஆக இருந்தன.

ஜினி குணகம் என்பது ஒரு சமூகத்தில் வருமானம் அல்லது செல்வம் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதை அளவிடும் புள்ளியியல் குறியீடாகும். இதன் மதிப்பு 0 என்றால் முழுமையான சமத்துவத்தையும், 1 என்றால் முழுமையான சமத்துவமின்மையையும் குறிக்கிறது.