தனது ஐபிஓ வெளியீட்டுச் சமயத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக திரட்டிய ரூ.575 கோடி மூலதனத்தை மாற்றுப் பயன்பாட்டிற்கு மடைமாற்ற ஓலா நிறுவனத்தின் இயக்குநர்கள் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
மின்சார வாகன உற்பத்தியாளர் Ola Electric, தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) செலவுகளுக்காக திரட்டிய நிதியில் ஒரு பகுதியை கடன் திருப்பிச் செலுத்தவும், எதிர்கால வளர்ச்சிக்கும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் சந்தைப் பங்கு குறைந்து வரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில், IPO மூலம் R&D-க்கு திரட்டிய ரூ.1,505 கோடியிலிருந்து ரூ.575 கோடியை மறுவினியோகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ.475 கோடி நிறுவனத்தின் அல்லது அதன் துணை நிறுவனங்களின் கடனை திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்படும். மேலும், ரூ.100 கோடி எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பாவிஷ் அகர்வால் தலைமையிலான இந்த நிறுவனம் IPO நிதியின் பயன்பாட்டை மாற்றும் இரண்டாவது நிகழ்வாக இது அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும், பங்குதாரர்களின் அனுமதியுடன் நிதி பயன்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
IPO ஆவணங்களில், ரூ.1,227.64 கோடி செல்கள் உற்பத்தித் திறனை விரிவுபடுத்த, ரூ.800 கோடி கடன் திருப்பிச் செலுத்த, ரூ.1,600 கோடி R&Dக்கு, மேலும், ரூ.1,297.42 கோடி பொதுக் கார்ப்பரேட் தேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இருசக்கர மின்சார வாகனச் சந்தையில் போட்டி அதிகரித்துள்ளதால், நிறுவனத்தின் விற்பனை கடுமையாகக் குறைந்துள்ளது. ஜனவரியில் 7,531 யூனிட்கள் விற்ற நிறுவனம், பிப்ரவரியில் 3,968 யூனிட்களே விற்று சரிந்துள்ளது.
இந்த விற்பனை சரிவு, நிறுவனத்தின் வருவாயையும் பாதித்துள்ளது. Q3 காலாண்டில், வருவாய் ரூ.1,045 கோடியிலிருந்து ரூ.470 கோடியாக அரைவாசிக்கும் குறைந்துள்ளது. இருப்பினும், நிகர இழப்பு ரூ.564 கோடியிலிருந்து ரூ.487 கோடியாக குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.