சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம், மாணவர்கள் மத்தியில் ஏஐ பயன்பாட்டை வலுவாக்கவும், ஏஐ நுட்பத்திற்கு தயாரான திறமையாளர்களை உருவாக்கவும், இந்தியாவில் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, செயல்பட உள்ளது.
கற்றல் மற்றும் ஆய்வில் ஏஐ நுட்பத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது அமைகிறது. தானியங்கிமயம் மற்றும் ஏஐ நுட்பத்தினால் பல்வேறு பணி சூழல் திறன்களில் மாறுதல் ஏற்படும், என எதிர்பார்க்கப்படுவதால், அதிகரிக்கும் டிஜிட்டல் உலக பொருளாதாரத்தில் நாட்டின் கொள்திறனுக்கான முக்கிய செயலாக இந்த கூட்டு அமைகிறது.
இந்த தொழில்நுட்ப மாற்றத்திற்கான முக்கிய பாலமாக கல்வி விளங்குகிறது என ஓபன் ஏஐ இந்தியா கல்வி பிரிவு தலைவர் ராகவ் குப்தா கூறியுள்ளார்.
“எதிர்காலத்திற்குத் தயாரான தலைமுறையை உருவாக்க ஏஐ கல்வியறிவு மிகவும் முக்கியம். இன்று பணியாளர்கள் சார்ந்துள்ள மைய திறன்களில் 40 சதவீதம், 2030ல் ஏஐ தாக்கத்தால் மாறும், என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஏஐ கருவிகளால் என்ன செய்ய முடியும் என்பதற்கும், அவற்றை மக்கள் எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதற்கும் ஒரு இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை போக்குவதில் கல்வி நிறுவனங்கள் முக்கியம்,” என்று அவர் கூறியுள்ளார்.
ஓபன் ஏஐ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ள கல்வி நிறுவன குழுவில் ஐஐடி தில்லி மற்றும் ஐஐஎம் அகமதாபாத் உள்ளிட்டவை அடங்கும். பொறியியல் மாணவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் ஆழ்நுட்ப ஆற்றலில் கவனம் செலுத்த வேண்டும்.
“எங்கள் மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்களுக்கு சாட்ஜிபிடி கல்வி கருவிகளின் அணுகல் கிடைக்க ஓபன் ஏஐ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் ஏஐ சார்ந்த புதுமையான பயன்பாட்டிற்கான ஆய்வில் ஈடுபடும் வாய்ப்பு உற்சாகம் அளிக்கிறது,” என ஐஐடி தில்லி இயக்குனர் ரங்கன் பானர்ஜி கூறியுள்ளார்.
நிறுவன நோக்கிலான முடிவெடுத்தலுக்கு ஏஐ கருவிகளை பயன்படுத்த எதிர்கால நிர்வாகிகளை தயார் செய்யும் வகையில் நிர்வாக கல்வியும் மாறி வருகிறது.
“இந்த கூட்டு, எங்கள் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் ஏஐ திறன் கொண்டவர்களாக மாற உதவுவதோடு, பல்வேறு வளங்கள் மற்றும் செயல்பாடுகள் வாயிலாக அவர்கள் பொறுப்பான ஏஐ பயன்பாட்டை புரிந்து கொண்டு தயாராகவும் உதவும் என்று ஐஐஎம் அகமதபாத் இயக்குனர் பரத் பாஸ்கர் கூறியுள்ளார்.
மருத்துவத் துறையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்விக்கான ஏஐ பயன்பாட்டை ஆய்வு செய்து வருகிறது.
“ஓபன் ஏஐ நிறுவனத்துடனான எங்கள் கூட்டு, மருத்துவ கல்வி, பேராசிரியர்கள் மேம்பாடு மற்றும் கிளினிகல் பயிற்சி உள்ளிட்டவற்றில் மேம்பட்ட ஏஐ கருவிகளை பொறுப்பாக பயன்படுத்துவதில் எங்களது ஈடுபாட்டை உணர்த்துகிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள எங்கள் மருத்துவ கல்வியில் ஏஐ மையத்தில் , தரத்திற்கான அளவுகோள்கள், பாதுகாப்பு வரம்புகள், அறம் சார்ந்த நிர்ணயம் ஆகியவற்றின் மூலம் கிளினிகள் முடிவெடுத்தலை வலுவாக்கி, கற்றலை மேம்படுத்தி, நோயாளிகளுக்கான பலனை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம்,” என எய்ம்ஸ் புதுதில்லி இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.
இதே போல, உயர் கல்விக்கான மணிபால் அகாடமி, பல துறைகளுக்கு இடையிலான ஆய்வு மற்றும் விமர்சன நோக்கிலான சிந்தனையை ஊக்குவிக்க உள்ளது. பல்கலைக்கழகம் கற்றல் வெளிப்பாட்டை மேம்படுத்தி, ஆய்வை வேகமாக்கி, துடிப்பான சூழலில் விமர்சன சிந்தனையை மேம்படுத்த பல்கலைக்கு ஏஐ உதவும், என்று அவர் கூறியுள்ளார்.
பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகளுக்கான பல்கலை மற்றும் பியர்ல் அகாடமியும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளது. யூபி.இ.எஸ் பல்கலை துணை வேந்தர் டாக்டர்.சுனில் ராய், ஒவ்வொரு கல்வி வளாகத்திலும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்று கூறியுள்ளார்.
“கற்றல், கற்பித்தல், ஆய்வு, மாணவர் வாழ்வு என எல்லாவற்றிலும் ஏஐ ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஏஐ சார்ந்த பல்கலையை உருவாக்கி வருகிறோம். ஒவ்வொரு மாணவர், பேராசிரியருக்கும் ஏஐ கல்வியறிவு அடிப்படையாக அமையும்,” என்று அவர் கூறியுள்ளார்.
கல்வி நிறுவனங்கள் தவிர, பிசிக்ஸ்வாலா மற்றும் அப்கிரேடு போன்ற மேடைகளையும் ஓபன் ஏஐ நாடி வருகிறது. எளிய அணுகலில் இருந்து கல்வி நிறுவன மாற்றத்திற்கு முன்னேறுவதன் மூலம் இந்த கூட்டு, ஒரு லட்சத்திற்கும் மேலான மாணவர்களை, பேராசிரியர்களை அடுத்த ஓராண்டில் ஏஐ சார்ந்த உலகிற்கு வழி நடத்தும்.
கடந்த ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனம், ஸ்டடி மோடு எனும் சாட்ஜிபிடி அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த வசதி, கேள்வி பதில் இயந்திரத்தை இணை கற்றலுக்கான வழியாக மாற்றுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து, கல்வியாளர்கள் ஏஐ கருவிகளில் தேர்ச்சி பெறும் திட்டத்தை அறிவித்தது. இதற்காக 5,00,000 டாலர் நிதியையும் அறிவித்தது.
ஆங்கிலத்தில்: இஷான் பத்ரா, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan