+

பங்குச் சந்தை பட்டியலிடலை முன்னிட்டு ChatGPT-ஐ ‘சூப்பர் ஆப்’ ஆக மாற்ற OpenAI திட்டம்!

அமெரிக்க செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, தனது பிரபலமான சாட் ஜிபிடி சேவையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்களின் மூலம் சாட் ஜிபிடியைப் பல்வேறு சேவைகளை ஒருங்கிணைக்கும் “சூப்பர் ஆப்” ஆக மாற்றி, வருவாயை அதி

அமெரிக்க செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, தனது பிரபலமான சாட்ஜிபிடி சேவையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்களின் மூலம் சாட் ஜிபிடியைப் பல்வேறு சேவைகளை ஒருங்கிணைக்கும் “சூப்பர் ஆப்” ஆக மாற்றி, வருவாயை அதிகரிப்பதுடன் எதிர்கால பங்குச் சந்தை பட்டியலிடலுக்கான அடித்தளத்தையும் வலுப்படுத்த நிறுவனம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை ஓபன் ஏஐ-யின் விரிவான மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். குறிப்பாக, அதிக வருவாய் தரும் நிறுவன வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்படுவதோடு, போட்டி நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ உடனான போட்டியையும் தீவிரப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Open AI

இந்த புதிய மாற்றங்களில், ஓபன் ஏஐ-யின் குறியீட்டு (coding) உதவி தயாரிப்பான கோடெக்ஸுக்கு அதிக முக்கியத்துவமும் வளங்களும் வழங்கப்படவுள்ளன. அடுத்த சில வாரங்களில் இந்த மாற்றங்கள் சாட் ஜிபிடி இணையதளம் மற்றும் மொபைல் செயலிகளில் புதுப்பிப்புகளாக முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

கோடெக்ஸ் பயன்பாட்டாளர்களில் பெரும்பாலானோர் கட்டண சந்தாதாரர்களாக உள்ளனர். மேலும், சுமார் 20 லட்சம் நிறுவனங்கள் ஓபன் ஏஐ-யின் மொத்த வருவாயில் 40 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இந்த பங்கு நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 50 சதவீதமாக உயரும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

ஓபன் ஏஐ வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, சாட் ஜிபிடி தற்போது வாரந்தோறும் 90 கோடிக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது. மேலும், கட்டண அடிப்படையிலான நுகர்வோர் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது.

இதற்கிடையில், ஓபன் ஏஐ அமெரிக்காவில் ஆரம்ப பங்கு வெளியீட்டிற்கான (IPO) ரகசிய ஆவணங்களைத் தாக்கல் செய்யத் தயாராகி வருவதாக கடந்த மே மாதத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், பங்குச் சந்தை பட்டியலிடலுக்கான காலக்கெடுவில் நிறுவனம் கவனம் செலுத்தவில்லை என்றும், அதற்கான சரியான நேரம் வரும்போது மட்டுமே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

facebook twitter