
தமிழ்நாடு 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது என்றும், மாநிலத்தில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும், என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாநில அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இளைஞர் நலனுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முதலீட்டை பயன்படுத்துவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் தொழில் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் அதில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற செயலாக்க மாநாடு ‘கான்வர்சேஷன் கான்கிளேவ்’ (Conversation Conclave) நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடு 4.5 சதவீத தொழில் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு மாநிலம் மும்மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தார்.

திராவிட மாடல் அரசு வளர்ச்சிக்கான மாதிரி என்றும் மக்கள் நலன் சார்ந்தது என்றும் கூறிய முதல்வர், இதை உணர்த்துவதற்காகவே இந்த மாநாடு நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
ஒரு சிலர் பொறுத்துக்கொள்ள முடியாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ்நாடு வளர்ச்சி தொடர்பான கேள்விகளிக்கு பதில் அளிக்கும் வகையில் நடைபெறுகிறது என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
’இன்று வெளியிடப்பட்டுள்ள தரவுகள் யாராலும் முறியடியக்க முடியாத சாதனையாகும். இங்கு வந்திருக்கும் எல்லோரிடமும் இந்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுகிறேன். பொதுவாக எல்லா மாநில அரசுகளும் முதலீடு மாநாடுகள் நடத்தி, முதலீடுகளை கொண்டு வருகின்றன. ஆனால் நாங்கள் உறவுகளை உருவாக்கி, இதை எப்படி மாநிலம் செய்ய வேண்டும் என வழிகாட்டுகிறோம்,” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதுடன் மாநில அரசு நின்று விடுவதில்லை, அவை செயலாக்கம் பெறுவதில் கவனம் செலுத்துகிறது. இதனால் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் தானே நேரடியாக கண்காணிப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலீட்டாளர்களுக்கான முகவரியாக இருக்கிறது. இதை தரவுகள் உணர்த்துகின்றன. எங்கள் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம். இந்திய வளர்ச்சி 4.5 சதவீதமாக இருக்கும் போது தமிழ்நாடு வளர்ச்சி அதில், மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 47 சதவீதமாக உள்ளது என்று முதல்வர் குறிப்பிட்டார்.
சிறிய ஒப்பந்தமாக இருந்தாலும், தலைமை செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தி அதன் முன்னேற்றத்தை பின் தொடர்கிறோம். இந்த செயலாக்கத்தை பார்ப்பவர்கள் தமிழ்நாடு எப்படி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வேகமாக நிறைவேற்றுகிறது என்று கேட்கின்றனர். இவற்றை செயலாக்க ஒற்றை சாளர முறை கொண்டுள்ளோம், என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 5 ஆண்டுகளில் 7 டைல் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் மாநில வளர்ச்சிக்காக இவற்றை சார்பில்லாமல் செய்வதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
எல்லாத்துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என்று கூறிய முதல்வர், தங்கள் அனுபவத்தை மற்ற முதலீட்டாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, தமிழ்நாட்டில் முதலீட்டை விரிவாக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.
முதலீட்டாளர்களுக்கு இலக்கு இருப்பது போலவே, 2030ல் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடையும் இலக்கும் மாநில அரசுக்கு இருப்பதாகவும், இதற்கு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் அழைப்பு விடுத்தார்.
Edited by Induja Raghunathan