+

லாபப் பாதைக்கு திரும்பிய பேடிஎம்; நான்காம் காலாண்டில் ரூ.183 கோடி நிகர லாபம்!

நிதி தொழில்நுட்ப நிறுவனமான பேடிஎம்-இன் தலைமை நிறுவனமான One97 Communications, 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.183 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியுள்ளது. முக்கிய கட்டண சேவைகள், வணிகர் மற்றும் தனிநபர் கடன் சேவைகளின் வளர்ச்சி, மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நுகர்வோர் பிரிவில் அதிக

நிதி தொழில்நுட்ப நிறுவனமான பேடிஎம்-இன் தலைமை நிறுவனமான One97 Communications, 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.183 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியுள்ளது.

முக்கிய கட்டண சேவைகள், வணிகர் மற்றும் தனிநபர் கடன் சேவைகளின் வளர்ச்சி, மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நுகர்வோர் பிரிவில் அதிக லாபகரமான காலாண்டாக அமைந்தது ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

கடந்த ஆண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.545 கோடி இழப்பை சந்தித்திருந்த நிலையில், தற்போது லாபத்திற்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2025-26 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் நடைமுறை இயக்க வருவாய் 18.4 சதவீதம் உயர்ந்து ரூ.2,264 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.1,912 கோடியாக இருந்தது.
Paytm

இதுகுறித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் குழும தலைமை நிதி அதிகாரி மாதுர் தியோரா கூறுகையில்,

“கட்டணச் சேவைகளில் வலுவான முன்னேற்றம் காணப்படுகிறது. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வணிகர்களிடமும் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. நிதிசார் சேவைகளிலும் நல்ல வளர்ச்சி உள்ளது. தனிநபர் கடன்களில் மீட்சியும், சொத்து மேலாண்மை பிரிவில் சந்தைப் பங்கு உயர்வும் தற்போது தென்படுகின்றன."

நுகர்வோர் பிரிவில் கடந்த எட்டு காலாண்டுகளில் மிகவும் லாபகரமான காலாண்டாக இது அமைந்துள்ளது. கூடுதல் செலவுகள் இருந்தபோதிலும் அதன் பலன் இறுதி லாபத்தில் பிரதிபலிக்கிறது,” என்றார்.

முழு 2025-26 நிதியாண்டில் ரூ.552 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் நிறுவனம் ரூ.663 கோடி இழப்பை சந்தித்திருந்தது.

அதேவேளை, ஆண்டு நடைமுறை இயக்க வருவாய் 22.2 சதவீதம் உயர்ந்து ரூ.8,437 கோடியாக அதிகரித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் இது ரூ.6,900 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் வருவாயில் சுமார் 55 சதவீதம் கட்டண சேவைகளிலிருந்தும், 30 சதவீதம் நிதிசார் சேவைகளிலிருந்தும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் நிறுவனம் அதிக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா கூறுகையில்,

“2030க்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்துறையின் முழு அமைப்பையும் மறுசீரமைக்கும். ஏற்கனவே பெரிய அளவில் முதலீடு செய்யாமல் இருந்தது நமக்கு அதிர்ஷ்டம். ஏனெனில் AI உலகில் அனைத்தும் மீண்டும் புதிதாக மாறுகிறது,” என்றார்.

வங்கியல்லாத நிதி நிறுவன (NBFC) உரிமம் பெறும் திட்டம் இல்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து மாதுர் தியோரா கூறுகையில்,

“NBFC உரிமம் பெறுவதில் எங்களுக்கு பெரும் ஆர்வம் இல்லை. விநியோகம், தொழில்நுட்பம் மற்றும் வசூல் பணிகளை நாங்கள் மேற்கொள்வதும், மூலதனம் மற்றும் அபாய மேலாண்மையை எங்கள் வலுவான கடன் கூட்டாளிகள் கவனிப்பதும் ஆகிய ‘இருதரப்புக்கும் பயனளிக்கும்’ கூட்டாண்மை முறை எங்களுக்கு விருப்பமானது,” என்றார்.

மேலும், “இந்தியாவில் கட்டண சேவை சந்தை மிகப்பெரியது. அந்த சந்தை தொடர்ந்து வளர்கிறது. அதேசமயம் எங்கள் சந்தைப் பங்கும் உயர்ந்து வருகிறது. குறைந்தளவிலான ஊடுருவலுடன் இணைந்து பார்க்கும்போது, குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் இந்த வாய்ப்பு மிகவும் பெரியதாக உள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.

facebook twitter