புது தில்லியில் இன்று நடைபெற்ற 'இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026' (India AI Impact Summit 2026) நிகழ்ச்சியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், கூகுள் மற்றும் ஆல்பபெட் (Alphabet) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) லட்சியங்களை விரைவுபடுத்துவது குறித்தும், திறன் மேம்பாடு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு துறை சார்ந்த மாற்றங்களில் கூகுளின் பங்கை ஆழப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இது குறித்து பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
"டெல்லியில் நடைபெற்ற ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக சுந்தர் பிச்சையை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும், இத்துறையில் நமது திறமையான மாணவர்கள் மற்றும் வல்லுநர்களுடன் கூகுள் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பது குறித்தும் பேசினோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் இந்தப் பதிவிற்குப் பதிலளித்த சுந்தர் பிச்சை,
"சுகாதாரம், அனைத்து மொழிகளிலும் தகவல் அணுகல், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளை மேம்படுத்தவும், இந்தியாவின் அனைத்து மட்டங்களிலும் செயற்கை நுண்ணறிவை புகுத்தவும் பிரதமர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கூகுள் எவ்வாறு உதவி வருகிறது என்பது குறித்து நாங்கள் விவாதித்தோம்," என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு கணினி உள்கட்டமைப்பு (Compute Infrastructure), தனித்துவமான ஏஐ மாடல்கள் மற்றும் லட்சக்கணக்கானவர்களை ஏஐ சார்ந்த பொருளாதாரத்திற்குத் தயார்படுத்தும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து, தன்னை ஒரு உலகளாவிய ஏஐ மையமாக இந்தியா நிலைநிறுத்தி வரும் வேளையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
மேலும், ஏஐ நிர்வாகம், அதற்கான விதிமுறைகள் மற்றும் பொறுப்பான பயன்பாடு (Responsible deployment) ஆகியவற்றை வடிவமைப்பதில் அரசுகளுக்கும், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பையும் இந்தச் சந்திப்பு பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் பரந்த பன்மொழி பேசும் மக்கள் தொகை மற்றும் விவசாய அடித்தளத்தைக் கருத்தில் கொண்டு, மொழி அணுகல், துல்லியமான விவசாயம் (Precision Farming) மற்றும் மருத்துவக் கண்டறிதல் ஆகியவற்றில் ஏஐ பயன்பாடுகள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான (Inclusive growth) முக்கியக் கருவிகளாகப் பார்க்கப்படுகின்றன.
புது தில்லியில் நடைபெற்று வரும் 'இந்தியா ஏஐ இம்பாக்ட் கண்காட்சியில்' 600-க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் நவீன கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன. மேலும், ஏஐ துறையில் சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தும் வகையில் 13 சர்வதேச அரங்குகளும் (Pavilions) இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த உச்சிமாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், 60 அமைச்சர்கள் மற்றும் சுமார் 500 உலகளாவிய ஏஐ தலைவர்கள், என மிக முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.