பிரான்சில் நடைபெறும் ‘Bharat Innovates 2026' நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்!

04:19 PM Jun 11, 2026 | cyber simman

இந்தியாவின் டீப்டெக் ஸ்டார்ட் அப்கள், ஆய்வகங்கள் மற்றும் புதுமையாக்க சூழலை காட்சிப்படுத்தும் ’பாரத் இன்னவேட்ஸ் 2026’ (Bharat Innovates 2026) நைஸ் நகரில் 14 முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. அதே சமயத்தில், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

பிரதமர் மோடி, வரும் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேகியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் போது பிரான்ஸ் நாட்டில், 'பாரத் இன்னவேட்ஸ் 2026' கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்தியா பிரான்ஸ் புதுமையாக்க ஆண்டின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த நிகழ்வில், இந்திய ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப்கள், முன்னணி கல்வி கழகங்கள், முதலீட்டாளர்கள், அரசு அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதன் துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பங்கேற்கின்றனர். புதுமையாக்கம், தொழில்நுட்ப கூட்டுறவு மற்றும் ஆய்வு கூட்டு முயற்சியில் இரு நாடுகளும் கொண்டிருக்கும் ஈடுபாட்டின் அடையாளமாக இது அமைகிறது.

இந்திய புதுமையாக்கத்துடன், சர்வதேச முதலீட்டாளர்கள், அமைப்புகள் மற்றும் சந்தையை இணைக்கும் மேடையாக இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வு கூட்டு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வர்த்தகமயத்திற்கான வாய்ப்பாக இது அமையும்.

பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் பின்னணியில் நடைபெறும் இந்த நிகழ்வு இந்தியா தனது புதுமையாக்க சூழலை சர்வதேச அளவில் முன்னிறுத்துவதற்கான ஜன்னலாக அமைகிறது.

நிகழ்வின் தாக்கம்

இந்த நிகழ்வு அரசின் பரவலான நோக்கம் கொண்ட திட்டமாக அமைகிறது.

“இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் புதுமையாக்கங்களுக்கான சர்வதேச ஆக்சிலரேட்டராக இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய புதுமையாக்க சூழல் மற்றும் சர்வதேச பங்களிப்பாளர்களுக்கு இடையே கூட்டுறவு மேடையாக அமையும்,” என பாரத் இன்னவேட் தளம் தெரிவிக்கிறது.

இது ஸ்டார்ட் அப்’களுக்கான வர்த்தக கண்காட்சி மட்டும் அல்ல. அறிவியல், மூலதனம், மற்றும் கொள்கைகளை எல்லைகள் கடந்து இணைக்கும் முயற்சியாக இது அமைகிறது. இதை தேசிய திட்டமாக கல்வி அமைச்சகம் கருதுகிறது மற்றும் ஐஐடி மும்பையை மைய கல்வி நிறுவனமாக கருதுகிறது.

ஆய்வை செயல்படுத்தக்கூடிய தொழில்நுட்பமாக மாற்றும் வகையில் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் முதல் பதிப்பில் 120 ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப்கள் பங்கேற்க உள்ளன. முன்னோட்ட திட்டங்கள், முதலீடு, ஆய்வு கூட்டு, சந்தை மற்றும் உற்பத்தி அணுகலை இது சாத்தியமாக்க உள்ளது.

ஆழ் நுட்பம் என்பது, அறிவியலை அதிகம் சார்ந்த நிறுவனங்களாகும். இவை பெரும்பாலும் நீண்ட ஆய்வு சுழற்சிகள் மற்றும் பிரத்யேக பொறியியலை அடிப்படையாக கொண்டிருக்கும். எனவே, இந்த மேடை, ஆய்வகங்கள் மற்றும் இன்குபேட்டரில் இருந்து வாய்ப்புள்ள திட்டங்களை வர்த்தக மற்றும் நிறுவன பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல உள்ளது. புதுமையாக்க வெற்றித்தோல்வியை தீர்மானிக்கும் கட்டமாக இது அமைகிறது.

நிகழ்ச்சி நிரல்

துவக்க விழா நிகழ்ச்சி பிரதமர் மோடி மற்றும் அதிபர் மேக்ரன் முன்னிலையில் நடைபெறுகிறது. இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி சிறப்புரை நிகழ்த்த இருப்பதாகவும், தொடர்ந்து ’ஏஐ ஃபார் குலோபல் குட்’ எனும் தலைப்பிலான அமர்வில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன், ராஜன் அனந்தன், சந்தீப் பக்‌ஷி, ஹென்ரி வெக்டர் உள்ளிடோர் பங்கேற்கின்றனர்.

இதன் பிறகு, இந்தியா அண்டு யூரோப்; ’டீப்டெக் வித்தவுட் பார்டர்ஸ்’ எனும் தலைப்பில் அமர்வு நடைபெறுகிறது. இந்திய பிரெஞ்சு வர்த்தக மற்றும் ஆய்வு கூட்டுறவுக்கான மையமாக புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வாகவும் அமைகிறது.

இந்த திட்டம், பொது தலைமை, தனியார் முதலீடு, பல்கலை தலைமை, பிராந்திய பிரெஞ்சு புதுமையாக்க பங்கேற்பாளர்களை உள்ளடக்கியது. முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் சூட், ஐஐடி கான்பூர், ஐஐடி பாம்பே, ஐஐடி தில்லி இயக்குனர்கள், சிட்பி, புரோசஸ், பெர்டில்ஸ்மன் இன்வெஸ்ட்மண்ட்ஸ், சோனி வென்சர்ஸ் தலைமை நிர்வாகிகள் பேச்சாளர்களாக பங்கேற்கின்றனர். பிரான்சைச் சேர்ந்த வல்லுனர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

கருப்பொருள்

செமிகண்டக்டர்ஸ், விண்வெளி –பாதுகாப்பு, சுகாதார நலன், மருத்துவ நுட்பம், அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு, மேம்பட்ட மெடிரியல்கள், நீடித்த தன்மை மற்றும் காலநிலை, ஸ்மார்ட் நகரங்கள், மொபிலிட்டி மற்றும் நீல பொருளாதாரம் உள்ளிட்ட 13 முன்னணி நுட்பங்களில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

முன்னோட்ட வடிவம் பெறத்தக்க, வளர்த்தெடுக்கக் கூடிய தொழில் நுட்பங்களில் நிகழ்ச்சி கவனம் செலுத்த உள்ளது.

இந்தியா தனது புதுமையாக்க கதையை ஐரோப்பாவுக்கு எப்படி முன்னிறுத்த விரும்புகிறது என்பதை நிகழ்ச்சி கருப்பொருட்கள் உணர்த்துகின்றன. செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட கம்ப்யூட்டிங் தொழில்துறை வியூக திறனை குறிக்கிறது. உயிரி நுட்பம், மருத்துவ நுட்பம் சமூக தேவைகள், வர்த்தக வாய்ப்புகளை உணர்த்துகிறது.

விண்வெளி, பாதுகாப்பு, முக்கிய பொருட்கள், மேம்பட்ட பொருட்கள் ஆகிய கருப்பொருள் தேசிய ஆற்றல் மற்றும் சப்ளை சைன் உறுதியை உணர்த்துகிறது. காலநிலை, நீல பொருளாதாரம், பேரிடர் உறுதி ஆகியவை இந்த நிகழ்வு ஆழ்நுட்பத்தை கடந்தும் கவனம் செலுத்துவதை உணர்த்துகிறது.

கல்வி நிறுவன தொடர்பு

'பாரத் இன்னவேட்ஸ்' தளத்தின் உயர் கல்வி பக்கம், இந்திய கல்வி நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட 42 அதிக தாக்கம் மிக்க புதுமையாக்க திட்டங்களை பட்டியலிடுகிறது.

ஐஐடி கான்பூர், ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பெங்களூரு, ஐஐடி தில்லி, ஐஐடி ரூர்கலா, ஐஐடி கவுகாத்தி, ஐஐடி ஐதராபாத், ஐஐடி இந்தூர், ஐஐடி திருப்பது, பிட்ஸ் பிலானி, உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு ஆய்வு முதல் சந்தைக்கான வழியை மையமாக கொண்டுள்ளது. இதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது ஆய்வகங்கள் ஐடியாக்கள், காப்புரிமைகள், முன்னோட்ட வடிவங்களை அளிக்க உள்ளன.

இந்த நிகழ்வுக்கு முன்னோட்டமாக மே மாதம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய போது,

“புதுமையாக்கத்தினர், முதலீட்டாளர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் மற்றும் அரசு அமைப்புகளுக்கான தேசிய புதுமையாக்க இயக்கம் மற்றும் சர்வதேச மேடையாக பாரத் இன்னவேட்ஸ் 2026 இருக்கும்,” என குறிப்பிட்டிருந்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மைக்கான புதுமையாக்கத்தை இந்தியா பின்பற்றுவதாகவும், இந்தியா தனித்து வளர விரும்பவில்லை மற்றும் கூட்டு முயற்சி, ஒப்பந்தங்கள் மூலம் வளர்ச்சியை விரும்புகிறது என்றும் கூறினார்.

இந்த நிகழ்வு, உயர்கல்வி நிறுவனங்கள், ஆய்வகங்கள், ஆய்வு பூங்காக்கள், புதுமையாக்க அமைப்புகள் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பதாக உயர்கல்வி செயலாளர் டாக்டர்.வினீத் ஜோஷி தெரிவித்தார். இந்தியாவில் உயர்கல்வி கல்வியியலில் இருந்து தொழில்முனைவு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி நோக்கி நகர்வதாகவும் தெரிவித்தார்.

பரந்த பார்வை

இந்தியாவுன் புதுமையாக்க அமைப்பை சீரான முறையில் நிறுவனமயமாக்கும் நோக்கில் பாரத் இன்னவேட்ஸ் அமைகிறது. வெளிநாடுகளுக்கு இந்திய ஸ்டார்ட் அப்களை காட்சிபடுத்துவதோடு, இதே மேடை வாயிலாக ஆய்வு பல்கலைகள, அரசு அமைப்புகள், ,முதலீட்டாளர்கள் செயல்படவும் வழி செய்கிறது. ஐரோப்பிய வலைப்பின்னலுக்கான பாலமாக பிரான்ஸ் அமைகிறது.

2026 ம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் புதுமையாக்க ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த நிகழ்வுக்கு ராஜாங்க வரைவை அளித்து, ஏஐ, ஆழ்நுட்பம், மற்றும் ஆய்வு கூட்டு இதற்கான வர்த்தக தன்மையை அளிக்கிறது. இவை இரண்டும் இணைந்து இந்த நிகழ்வை அதிகம் எதிர்பார்க்க வைக்கிறது.

யுவர்ஸ்டோரி குழு


Edited by Induja Raghunathan