‘ரேப்டீ.எச்வி’ மின் பைக்கில் 7,530 கி.மீ அகில இந்திய பயணம் செய்து சாதனை!

12:56 PM Feb 17, 2026 | cyber simman

இந்திய மின்சார பைக் ஸ்டார்ட் நிறுவனமான ‘ரேப்டீ.எச்வி’ 7,530 கி.மீ தொலைவிலான அகில இந்திய பயணம் தனது மின் பைக் கொண்டு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் டி30 பைக் கொண்டு 19 நாட்களில் இந்தச் சாதனை பயணம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

ரேப்டீ.எச்வி (Raptee.HV) நிறுவன பைக்கின் இந்த சாதனை ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகம் ஆகியவற்றில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மின் பைக் கொண்டு அகில இந்திய பயணம் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதை இந்த சாதனை குறிக்கிறது. டி 30 மின்பைக்கின் அதிவேக CCS2 DC சார்ஜிங் திறன் மூலம் இது சாத்தியமானதாக நிறுவனம் இது தொடர்பான செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த சார்ஜிங் வசதி, இந்தியா முழுவதும் உள்ள 40,000-க்கும் மேலான, மின் கார்களுக்கான பொது டிசி சார்ஜிங் மையங்களை அணுக வழி செய்கிறது. இந்த வசதி மின் பைக்கின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கிறது.

டெஸ்லா நிறுவன முன்னாள் ஊழியரான தினேஷ் அர்ஜுன் மற்ற மூன்று இணை நிறுவனர்களுடன் இணைந்து 2019-ல் இந்த ஸ்டார்ட் ப்பை துவக்கினார்.

சர்வதேச தரம் வாய்ந்த மின் பைக் தொழில்நுட்பத்தை கொண்டு வருவதை நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது. சமரசத்திற்கு இடம் இல்லாத மின் பைக் மூலம், வழக்கமான இஞ்சின்கள் கொண்ட பைக்கின் செயல்திறனை அளிக்க முயற்சிக்கிறது.

சென்னையை தலைமையகமாக கொண்ட இந்த ஸ்டார்ட் அப், மின் காரின் அதிக வோல்டேஜ் மேடையில் மின் பைக்கை தயார் செய்யும் ஒரே நிறுவனமாக விளங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அளவிலான சாதனை பயணத்தை, மின் வாகன ஆர்வலரான பாலா மணிகண்டன் மேற்கொண்டார். இவர் ஏற்கெனவே இரண்டு முறை மின் பைக் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

”டி30 மின்பைக்கை, குறிப்பாக அதன் வேகமாக சார்ஜ் செய்யும் CCS2 திறனுக்காக பயன்படுத்துவதில் உற்சாகம் கொண்டேன். இந்த மின் பைக்கில் பயணிப்பது எந்த அளவுக்கு நடைமுறைக்கு ஏற்றது என்பதை இந்த பயணம் உணர்த்தியது” என்று பாலா மணிகண்டன் கூறியுள்ளார்.

இதன் வளைந்து கொடுக்கும் தன்மையினால், நாள் ஒன்றுக்கு 407 கி.மீ தொலைவை கடக்க முடிந்ததாகவும், முந்தைய பயணங்களை விட இது 100 கி.மீ அதிகம் என்றும் கூறியுள்ளார்.

“சமரசம் இல்லாத ஆய்வில் உலகத்தரமான புராடக்டை உருவாக்க முடியும் என நம்புகிறோம். டி30 பைக் ஏழு ஆண்டுகளில் சொந்த தொழில்நுட்பம் மற்றும் சாப்ட்வேர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அளவிலான 7500 கி.மீ பயணத்தில் இதன் நம்பகத்தன்மை நிருபணம் ஆகியுள்ளது” என இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.தினேஷ் அர்ஜுன் கூறியுள்ளார்.

இந்தப் பயணம் முழுவதும் டிஜி வேகமான சார்ஜிங் வசதி தீவிரமாக பயன்படுத்தப்பட்டாலும், பேட்டரி ஆரோக்கியம் 100 சதவீதம் சிறப்பாக இருந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Edited by Induja Raghunathan