பெங்களூருவை தளமாகக் கொண்ட Sarvam AI நிறுவனம், இந்தியாவின் தன்னாதிக்கம் மிக்க செயற்கை நுண்ணறிவு (AI) முயற்சியை முன்னெடுக்கும் நிலையில், இரண்டு புதிய பெரிய மொழி மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற India AI Impact Summit நிகழ்வில் பேசிய இணை நிறுவனர் பிரத்யூஷ் குமார், நிறுவனம் 30 பில்லியன் அளவுருக்கள் கொண்ட ஒரு மாதிரியையும், 105 பில்லியன் அளவுருக்கள் கொண்ட மற்றொரு மாதிரியையும் ‘மிக்சர்-ஆஃப்-எக்ஸ்பெர்ட்ஸ்’ (MoE) கட்டமைப்பில் முற்றிலும் புதிதாகப் பயிற்சி அளித்து உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
MoE கட்டமைப்பு, ஒவ்வொரு உள்ளீட்டிற்கும் அனைத்து அளவெல்லைகளையும் இயக்காமல், தேவையான சிலவற்றை மட்டுமே செயல்படுத்துவதன் மூலம் செயல்திறனை அதிகரிக்கிறது. முன்னதாக 3 பில்லியன் அளவெல்லை கொண்ட அடர்த்தியான (dense) மாதிரியை உருவாக்கியிருந்தாலும், மேலும் விரிவாக்கம் அவசியமானது, என குமார் குறிப்பிட்டார்.
30 பில்லியன் அளவுருக்கள் கொண்ட புதிய மாடல், ஒவ்வொரு டோக்கனுக்கும் வெறும் 1 பில்லியன் அளவுருக்களையே செயல்படுத்துகிறது. இதனால் கணக்கீட்டு செலவு குறைந்து, குறிப்பாக காரண விளக்க (reasoning) பணிகளில் செயல்திறன் மேம்படுகிறது. இந்த மாடல் 32,000 டோக்கன் கான்டெக்ஸ்ட் விண்டோவை ஆதரிக்கிறது மற்றும் 16 டிரில்லியன் டோக்கன்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 105 பில்லியன் அளவுருக்கள் கொண்ட MoE மாடல், ஒவ்வொரு டோக்கனுக்கும் 9 பில்லியன் அளவுருக்களை செயல்படுத்துகிறது. இது 128,000 டோக்கன் கான்டெக்ஸ்ட் விண்டோவை ஆதரிக்கிறது மற்றும் சிக்கலான காரண விளக்க மற்றும் ஏஜென்டிக் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த 105B மாடல், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட DeepSeek நிறுவனத்தின் R1 என்ற 600 பில்லியன் அளவுருக்கள் கொண்ட மாதிரியை விட சிறப்பாக செயல்படுகிறது, என குமார் கூறினார். மேலும், Google நிறுவனத்தின் Gemini Flash மாதிரியை விட குறைந்த செலவில் இயங்குவதுடன், பல தர அளவுகோள்களில் அதனை மிஞ்சுகிறது என்றும் தெரிவித்தார். இந்திய மொழி பணிகளில், Gemini 2.5 Flash-ஐ விட மேம்பட்ட செயல்திறன் கொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்த அறிமுகங்கள், அரசு ஆதரவு பெற்ற IndiaAI Mission திட்டத்தின் கீழ் இந்தியாவில் தன்னாட்சி அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கும் முயற்சியுடன் இணைந்தவையாகும். ரூ.10,000 கோடி நிதியுடன் செயல்படும் இந்த திட்டம், இதுவரை ரூ.111 கோடி மதிப்பிலான GPU மானியங்களை வழங்கியுள்ளது.
Sarvam AI நிறுவனம் சுமார் ரூ.99 கோடி மானியங்களை பெற்றதுடன், Yotta Data Services மூலம் 4,096 NVIDIA H100 SXM GPU-களைப் பெற்றுள்ளது. இதன் மூலம், IndiaAI Mission திட்டத்தின் கீழ் அதிக பயனடைந்த நிறுவனமாக இது விளங்குகிறது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவின் அடிப்படை ஏஐ மாதிரியை உருவாக்கத் தேர்வு செய்யப்பட்ட முதல் ஸ்டார்ட்அப் நிறுவனமாகவும் இது இருந்தது.
2023 ஜூலை மாதத்தில் விவேக் ராகவன் மற்றும் பிரத்யூஷ் குமார் ஆகியோரால் நிறுவப்பட்ட சர்வம் AI, AI4Bharat ஆராய்ச்சி ஆய்வகத்தில் முன்னதாக பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ளது. நிறுவனம் ஆராய்ச்சி மையப்படுத்தப்பட்ட மாதிரி உருவாக்கம் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்ற ஏஐ அமலாக்க கருவிகளை வழங்குகிறது.
மாதிரிகளைத் தாண்டி, Sarvam AI தற்போது ஹார்ட்வேர் துறையிலும் விரிவடைகிறது. ‘Sarvam Kaze’ என்ற ஸ்மார்ட் கண்ணாடி சாதனத்தை மே மாதத்திற்குள் இந்தியாவில் வடிவமைத்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. டெவலப்பர்கள் பயன்பாடுகளை உருவாக்கக்கூடிய வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்பத்தின் அனைத்து அடுக்குகளிலும் சுயாட்சியை நிலைநிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இது இருப்பதாகவும் குமார் தெரிவித்தார்.
தொகுப்பு: முத்துகுமார்