செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பலன்கள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குச் சமமான முறையில் சென்றடைய வேண்டும், என்று மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயலதிகாரி சத்ய நாடெள்ளா தெரிவித்துள்ளார்.
டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது கூறியதாவது,
”செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பலன்கள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குச் சமமான முறையில் சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இதில் ஏற்படக்கூடிய சந்தைக் குமிழி (bubble) அபாயம் குறித்தும் எச்சரித்தார்.”
மேலும், கல்வித் தரம் மேம்படுவது முதல் பொதுத்துறை செயல்திறன் அதிகரிப்பது வரை, ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதே இந்தத் தொழில்நுட்பத்தின் உண்மையான இலக்காக இருக்க வேண்டும், என்றார்.
தற்போது உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் நிறுவனங்களும் உற்பத்தித் திறனை அதிகரிக்க செயற்கை நுண்ணறிவை வேகமாகத் தழுவி வரும் நிலையில், அதன் சமூகத் தாக்கம் குறித்த விவாதங்கள் இந்த ஆண்டின் முக்கியப் பொருளாக மாறியுள்ளன.
வணிக ரீதியான பயன்பாடுகளைத் தாண்டி பொதுச் சேவைகள், அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் மற்றும் உலகளாவிய மேம்பாட்டிற்கு இந்தத் தொழில்நுட்பம் எவ்வாறு உதவும் என்பதில் தொழில்துறை தலைவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
மருந்தாக்க நிறுவனங்கள் புதிய மருந்துகளை விரைவாகக் கண்டறியவும், மருத்துவப் பரிசோதனைகளைத் துரிதப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய நாடெல்லா, வெறும் செலவினங்களை அதிகரிப்பதற்குப் பதிலாக உண்மையான பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இந்தத் தொழில்நுட்பம் செயல்பட வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு குறித்த உரையாடல்கள் அனைத்தும் வெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அல்லது அதன் விநியோகம் (supply side) சார்ந்தே அமைந்திருந்தால், அது ஒரு குமிழி ஏற்படுவதற்கான அறிகுறியாகும். இந்தத் தொழில்நுட்பப் புரட்சிக்குத் தேவையான ஆற்றல் உள்கட்டமைப்பை உறுதி செய்ய பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு அவசியம்.
”தரவு இறையாண்மை (data sovereignty) குறித்த சவால்களை எதிர்கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவின் பயன்கள் மிகவும் சமமாகப் பகிரப்பட்டால் மட்டுமே இது ஒரு நிலையற்ற குமிழியாக மாறுவதைத் தவிர்க்க முடியும்,” எனக் கூறினார் சத்யா நாடெள்ளா.
தொகுப்பு: முத்துகுமார்