80’களில் வீடு வீடாக சைக்கிளில் வெண்ணெய் விற்ற இளைஞர் உருவாக்கிய ரூ.1400 கோடி GRB பிராண்ட்!

06:30 PM Mar 20, 2026 | Induja Raghunathan

வீடுவீடாக சைக்கிளில் வெண்ணெய் விற்றுக்கொண்டிருந்த ஒருவரின் அசாத்திய கனவு, தொழில் நுணுக்கம், கடின உழைப்பு, தன்னம்பிக்கையின் பலனாக, ஒரு நாள் 1000+ கோடி ரூபாய் மதிப்பு நிறுவனத்தை உருவாக்க முடியும் என்றால் அது ஒரு சாதாரண கதை அல்ல தானே...

இந்தியாவின் கடுமையான போட்டி நிறைந்த பால் பொருட்கள் சந்தையில், அமுல், பிரிட்டானியா, ஐடிசி போன்ற மாபெரும் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பிரிவில், ஒரு உள்நாட்டு பிராண்டு அமைதியாக தனது வளர்ச்சிப் பயணத்தை உச்சிக்குக் கொண்டு சென்றது பலரும் அறிந்திராத விஷயம். அதுவும், இந்த ப்ராண்ட் ஒரு தமிழரால் தொடங்கப்பட்டு, வெண்ணெய் விற்பனையில் தொடங்கி, இன்று 70-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுடன் ரூ.1,500 கோடி மதிப்பு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது என்றால் அது உலகிற்குத் தெரியவேண்டிய கதை தானே...

இன்று பால் பொருட்களுக்கு குறிப்பாக நெய்-க்கு பிரபலமாகி இருக்கும் ‘ஜிஆர்பி’ (GRB) என்ற அந்த ப்ராண்டின் கதையையும், அதன் வளர்ச்சியையும் தெரிந்து கொள்ள அதன் நிறுவனர் ஜி.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்களை சந்திக்கச் சென்றேன்.

எளிமையான தோற்றம், யதார்த்த பேச்சு, சிம்பிளான மனிதராக இருந்தார் பாலசுப்பிரமணியம். 1984-ல் ஒரு எளிய முயற்சியாகத் தொடங்கி, இன்று வெண்ணெய், நெய், என பால் பொருட்களைத் தாண்டி ஸ்னாக்ஸ், இனிப்பு வகைகள் தயாரிப்பில் இறங்கி, உலகளாவிய ப்ராண்டாக மாறியது எப்படி சாத்தியமானது என்று விரிவான பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

GRB நிறுவனர் ஜி.ஆர்.பி.பாலசுப்பிரமணியம்

குக்கிராமத்தில் தொடங்கிய வெண்ணெய் கதை!

திண்டுக்கல், பழனிக்கு இடையே உள்ள விருப்பாச்சி அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் பாலசுப்பிரமணியம். அடிப்படை வசதியில்லா கிராமத்தில், 6 குழந்தைகளுடனான சிறுதொழில் செய்யும் குடும்பத்தில் 5வது குழந்தையாக பிறந்தார். படிப்பில் ஆர்வம் இருந்தும் குடும்பச் சூழ்நிலை காரணமாக 8வது வரை மட்டுமே அவரால் படிக்கமுடிந்தது. படிப்பை நிறுத்திவிட்டு, பெங்களூருவில் திருமணமாகி செட்டில் ஆகியிருந்த அவரது சகோதரி வீட்டுக்கு பிசினசில் உதவி புரிய அனுப்பிவைக்கப்பட்டார் பாலசுப்பிரமணியம்.

”எனக்கு மேலே படிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது, நன்றாகவும் படித்துக்கொண்டிருந்தேன், ஆனால் சில காரணங்களால் படிப்பை பாதியில் விட்டுவிட்டு 13 வயதில் பெங்களூருக்கு சென்றுவிட்டேன். எனக்கு பிசினஸ் செய்வதிலும் கொஞ்சம் ஆர்வம் இருந்தது, என் அக்கா செய்து கொண்டிருந்த வெண்ணெய் பிசினசில் இணைந்துகொண்டு மெல்ல, மெல்ல தொழிலை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்,” என்றார் பாலசுப்பிரமணியம்.

1970-ல் அக்கா குடும்பத்துடன் சேர்ந்து மார்கெட்டில் வெண்ணை வாங்கி வீடு வீடாக சப்ளை செய்யும் பிசினஸ் அது. அப்போது ப்ராண்ட் பெயர் எதுவும் இல்லை. இப்படியே சுமார் 14 வருடங்கள் அங்கே இருந்துள்ளார் ஜி.ஆர்.பி. திருமணம் முடிந்து தனியாக பிசினஸ் ஆரம்பிக்கும் கட்டாயம் ஏற்படவே, அக்கா பிசினசை விட்டு வேளியே வந்து தனியாக எதாவது செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வெண்ணெயை நெய்யாகி வளர்ச்சியடைந்த பிசினஸ்

கையில் முதலீடு செய்ய பணமில்லை, வேலைக்கு போக போதிய படிப்பும் இல்லை, தெரிந்தது இந்த பட்டர் பிசினஸ் மட்டுமே, அதில் தான் பாலசுப்பிரமணியத்துக்கு அனுபவம் இருந்தது. அதனால் தெரிந்த இந்த வெண்ணெய் தொழிலையே செய்யலாம்னு முடிவு செய்துள்ளார்.

”28 வயதில் தனியாக பிசினஸ் ஆரம்பித்தேன். கூட உதவிக்கும் ஆள் இல்லை, ஆனால் சர்வைவலுக்காக தொடங்கினேன். கையில் ₹6,000 மட்டுமே இருந்தது, வீட்டு வாடகைக்கு ₹3,000 கொடுத்துவிட்டு, மீதமுள்ள ₹3,000 வைத்து பிசினஸ் தொடங்கினேன், ஆனா முதல் மாதம் 1,000 ரூபாய் கூட என்னால் சம்பாதிக்க முடியவில்லை.”

பின்னர், மாமா சீட்டு நடத்திய நினைவு வர, அதையே தானும் செய்யலாம் என முடிவுசெய்து, தெரிந்தவர்களிடம் 50,000 ரூபாய் சீட்டு போட்டு இரண்டாவது மாதம் சீட்டு பணத்தை எடுத்து முதல் முதலீடாக செய்து வெண்ணெய் பிசினசை தொடங்கியுள்ளார் பாலசுப்பிரமணியம்.

“மாதம் 1,000 ரூபாய் சம்பாதிக்க கஷ்டப்பட்ட நான், முதலீடு செய்து தொடங்கிய சில மாதங்களிலேயே, ரூ.25,000 வரை சம்பாதித்துவிட்டேன். ஆரம்பத்தில் 25 கிலோ அளவில் இருந்த வெண்ணெய் விற்பனை, மூன்றாவது மாதத்திலேயே 75 கிலோ அளவுக்கு உயர்ந்தது. அதற்கு நான் தொழிலில் செய்த சில மாற்றங்களும் காரணம். வீடுவீடாக வெண்ணெய் விற்றதோடு, வெண்ணெயை நெய்யாக காய்ச்சி ஹோட்டல்களுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்தது, பிசினசில் வேகமான வளர்ச்சியையும், வருமானத்தையும் தந்தது,” என்றார்.

மாதத்தில் முதல் 10-15 நாட்கள் மட்டுமே வெண்ணெய் வியாபாரம் இருக்கும், அதனால் மீதமுள்ள நாட்களில் வெண்ணெய் கெட்டுப்போய்விடும் என்பதால், அதனை நெய்யாக காய்ச்சி விற்பனை அதுவும் ஹோட்டல், ஸ்வீட் கடைகள், கேட்டரிங்க் செய்பவர்களுக்கு சப்ளை செய்தால் வியாபாரம் பெருகும், கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற பாலசுப்பிரமணியத்தின் ஐடியா வெகுவாக கிளிக் ஆனது.

”மாதம் 75 கிலோ வெண்ணெயில் தொடங்கிய பிசினஸ், நெய் விற்பனையில் வந்தவுடன் வேகமாக வளர்ந்து ஒரே ஆண்டில் நல்ல வளர்ச்சியையும், லாபத்தையுன், மனதில் நம்பிக்கையையும் கொடுத்தது,” என்றார்.

1986-ல் ஒரு ப்ராண்டாக பாட்டில் பேக்கிங், லேபிளிங் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தில் இறங்கி, GRB என்ற தனது பெயரின் சுருக்கத்தையே ப்ராண்டுக்கும் வைத்தார்.

“மற்றவர்களைவிட நாம் வித்தியாசமா செய்யணும்னு என்ற எண்ணமே ஒரு ப்ராண்டாக இந்த பிசினசை செய்யும் ஐடியா எனக்கு இருந்தது. பெங்களுருவின் முக்கிய ஏரியாக்களுக்குச் சென்று நானே கடை கடையாக ஏறி எங்கள் நெய் பற்றியும், அதன் தரம், சிறப்பு பற்றியும் சொல்லுவேன். அதுவே, எனக்கு அவர்களிடம் நன்மதிப்பை கொடுத்து, எங்கள் ப்ராண்ட் நெய்யை வாங்கவைத்தது. ஏற்கனவே பல முன்னணி ப்ராண்ட்கள் இருந்தாலும் என் மீதுள்ள நம்பிக்கையில் நெய்யை ஆர்டர் செய்யத் தொடங்கினர். பின்னர், மக்களுக்கு எங்கள் டேஸ்ட், தரம் பிடித்தவுடன் பிசினஸ் தொடர்ச்சியாக வந்தது."

1991-க்குள், பெங்களூருவின் பரபரப்பான வணிக மையங்களான ஜெயநகர், பசவனகுடி, ராஜாஜிநகர், மல்லேஸ்வரம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் 1,000 கிலோ நெய் விற்பனை அளவு பெருகி முக்கிய இடத்தைப் பிடித்தது ஜிஆர்பி நெய் ப்ராண்ட். வாய் வழிப் புகழும், தரத்தில் சமரசமில்லா அணுகுமுறையும் இதற்குக் காரணமாக இருந்தன.

குடும்ப முயற்சியிலிருந்து கார்ப்பரேட் ப்ராண்ட்

1983 முதல் பாலசுப்பிரமணியம், தனது சகோதரர்களையும் சேர்ந்துகொண்டு இந்த பிசினஸை நடத்தி வந்துள்ளார். பின்னர், 1990-வாக்கில் அவர்கள் தனியாக தொழில் செய்ய பிரிந்து சென்றது, ஒரு திடீர் சவாலை அவருக்கு தந்தது. அதுவரை பிசினசில் பல பிரிவுகளை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் சென்றதால், தனி ஆளாக ஒட்டுமொத்த ப்ராண்டையும் நிர்வகிக்கும் பொறுப்பிற்கு தள்ளப்பட்டார் பாலசுப்பிரமணியம்.

“ப்ராண்ட் என்னிடம் இருந்தது, பிசினஸ் என்னிடம் இருந்தது, நன்றாக வளர்ந்திருந்தது, ஆனால், நான் தனி ஆளாக அப்போது இருந்தேன். பர்ச்சேஸ், சேல்ஸ், ப்ரொடக்‌ஷன், கலெக்‌ஷன், என எல்லா பிரிவுகளையும் பார்க்கும் நிலை ஏற்பட்டது. தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப என்னால் ஈடு கொடுக்கமுடியாது போனது. ஆனால், அப்போது என் மனைவி பிசினசுக்குள் வந்து, எனக்கு பக்கபலமாக நின்றது எனக்கு பெரும் உதவியா இருந்தது,” என்றார்.

அதுவரை குடும்பத்துக்குள் பார்த்துக்கொண்டிருந்த பிசினசை தொடர்ந்து நடத்தவும், அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லவும் ஒவ்வொரு பிரிவுக்கும் ஊழியர்களை பணியமர்த்துவதே சரியான வழி, என தீர்மானித்து; ப்ரொடக்‌ஷன், அட்மின், சேல்ஸ் என்று எல்லா பிரிவுகளிலும் ஆட்களை அமர்த்திவிட்டார்.

“எனக்கு முதலில் ஊழியர்கள் அமர்த்துவதில் பயம் இருந்தது. பிசினஸ் அந்த அளவிற்கு நடக்குமா, நம்மால் தொடர்ந்து சம்பளம் கொடுக்கமுடியுமா என்ற அச்சம் இருந்தது. ஆனால், அண்ணன், தம்பி என்னுடன் பிசினசில் இருந்தபோது, அவர்களுக்கு வருவாயில் 50% பங்கினை கொடுத்துவந்தேன், அது சாத்தியமான போது, இதுவும் முடியும் என்று துணிந்து எல்லா பிரிவுக்கும் ஆட்களை பணியமர்த்திவிட்டேன்,” என்று தனக்கு பிசினசில் இடையில் வந்த சிக்கலை எதிர்கொண்ட விதத்தை பகிர்ந்தார் ஜிஆர்பி.

இதே பிரிவில் பல போட்டி நிறுவனங்கள் இருந்தாலும், நெய்யின் தரம், அதற்கான விலையில் சமரசமின்மையே ஜிஆர்பி-யின் மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்குக் காரணமாக அமைந்தது.

GRB-யின் வளர்ச்சியின் முக்கிய திருப்புமுனை

1993-இல் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. அந்த ஆண்டில், ஜிஆர்பி இந்தியாவில் முதன்முறையாக நெய்யை FMCG (Fast-Moving Consumer Goods model) முறைப்படி விநியோகித்த முதல் நிறுவனம் ஆனது.

பாரம்பரிய பால் கூடங்கள் அல்லது சில எண்ணெய் கடைகளில் வாடிக்கையாளர்கள் வந்து நெய் வாங்கிக்கொண்டிருந்த பழக்கத்தை மாற்றி, GRB விநியோகஸ்தர்களை நியமித்து, பயிற்சி பெற்ற விற்பனையாளர்களை கடை தோறும் அனுப்பி நேரடி விற்பனையை மேற்கொண்டது. இதுவே இவர்களின் ப்ராண்டை சிறிய மளிகைக் கடைகளுக்கும் கொண்டு சென்று எல்லா ஊர் மக்களுக்கும் கிடைக்கும்படி செய்தது.

”1993-இல் GRB பெரிய மாற்றத்தைத் தொடங்கியது. 1999-ல் ஓசூரில் எங்களின் முதல் நவீன நெய் உற்பத்தி ஆலையை நிறுவினோம். பின்னர், சென்னையை மையமாகக் கொண்ட கார்ப்பரேட் அமைப்புடன் distributor அடிப்படையிலான மாடலுக்கு மாறினோம்,” என விரிவாக்கத்தை விளக்கினார் பாலசுப்பிரமணியம்.

ஆனால், சென்னை கடுமையான போட்டி கொண்ட சந்தையாக இருந்ததால், அவர்கள் ’Udhayam’ என்ற புதிய உள்ளூர் பிராண்டை உருவாக்கியுள்ளனர். இவர்களின் நெய், மற்ற ப்ராண்ட்களைவிட விலை அரை கிலோக்கு ரூ.20–30 வரை அதிகமாக இருந்ததால், அவர்களின் விற்பனை குழுவுக்கு கடுமையான நிராகரிப்புகள் ஏற்பட்டன.

"ஆரம்பத்தில் சென்னை மார்கெட் கடினமாக இருந்தாலும், விரைவில் கடைக்காரர்களும் நுகர்வோரும் GRB நெய்; பாரம்பரியமாக வீட்டில் தயாராகும் ’Desi Ghee’-யின் உண்மையான மணம், சுவை மற்றும் தரத்துடன் ஒத்தாக இருப்பதை உணர்ந்தனர். எந்தவித சமரசமும் இல்லாத எங்களின் கடுமையான கொள்கை, அதிக விலைக்கு உரிய மதிப்பை ஏற்படுத்தி, வாடிக்கையாளர்களிடையே மிகுந்த நம்பிக்கையையும் விசுவாசத்தையும் உருவாக்கியது,” என்றார்.


க்ளோபல் மற்றும் ஸ்னாக் பிரிவில் அடியெடுத்த ஜிஆர்பி

GRB-யின் கனவு இந்திய எல்லைகளில் மட்டுமே நிற்கவில்லை. 2,000-களில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு ஏற்றுமதியை தொடங்கிய இந்நிறுவனம், இன்று அமெரிக்கா, யூகே, ஐக்கிய அரபு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.

அதோடு, இவர்கள் தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தத் தொடங்கினர். 2005ஆம் ஆண்டு ஐஸ்கிரீம் துறையில் முதல் முயற்சியை எடுத்திருந்தாலும் (பின்னர் அது நிறுத்தப்பட்டது), 2010 முதல் இனிப்புகள், ஸ்நாக்ஸ், இன்ஸ்டன்ட் மிக்ஸ்கள் மற்றும் மசாலா பொருட்கள் போன்ற துறைகளில் நுழைந்தனர்.

”பாரம்பரிய இனிப்பு மற்றும் instant mix தயாரிப்புகள்; ஜிஆர்பி ப்ராண்ட் பெயரிலும், சமோசா, முறுக்கு போன்ற ஸ்னாக் வகைகள் ‘டவுன் பஸ்’ என்ற ப்ராண்ட் பெயரிலும் உற்பத்தி செய்கிறோம். இந்திய உணவுப் பாரம்பரியத்தை நவீன வடிவில் வழங்கும் ப்ராண்டாக உருவாகி இருக்கிறோம்,” என்றார்.

கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ₹200 கோடி மதிப்பிலான புதிய ஆலை தொடங்கி உற்பத்தையை பெருக்கியுள்ள ஜிஆர்பி ப்ராண்டுக்கு, நாடு முழுவதும் மொத்தம் ஆறு உற்பத்தி ஆலைகள் தற்போது உள்ளது. இந்த காலாண்டில் ஸ்னாக்ஸ் மற்றும் ஸ்வீட்ஸ் உற்பத்தியை அதிகரிக்க நிறுவனம் இலக்கிட்டுள்ளது.

இன்று, GRB முழுமையாக bootstrapped அடிப்படையில், எந்த venture capital முதலீடும் இல்லாமல் வளர்ந்த நிறுவமாக திகழ்கிறது. கடந்த ஆண்டு டர்ன் ஓவர் சுமார் ₹1,400 கோடி மற்றும் தற்போது 2,500 ஊழியர்களுடன் நாட்டின் பெரிய ப்ராண்டாக வளர்ந்து நிற்கிறது.

வணிக தத்துவம் மற்றும் தலைமைப் பாடங்கள்

ஜி.ஆர்.பாலசுப்பிரமணியத்துடனான உரையாடலின்போதே அவரின் தலைமைத்துவம், பிசினஸை நடத்திச் சென்ற விதம், வணிகத்தில் அவர் வைத்திருக்கும் தத்துவங்கள் வெளிப்பட்டன.

தரத்தில் சமரசமில்லா உறுதி

என்றைக்குமே தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாததே தனது பிராண்டின் மிகப்பெரிய வெற்றிக்கான முக்கியக் காரணம் என்று அவர் உறுதியாக நம்புகிறார். வியாபாரத்தை பெருக்க தயாரிப்பின் அடிப்படை தரத்தை குறைப்பதற்கு அவர் ஒரு போதும் தயாராக இல்லை.

ஆர்வமும், முழுமையான அர்ப்பணிப்பும்

வியாபாரத்தை ஒரு தொழிலாக மட்டும் அல்லாமல், ஆழமான ஆர்வமாக அவர் பார்க்கிறார்.

24 மணி நேரமும் பிசினஸ் சிந்தனையிலே இருப்பேன், தொழிலை மானசீகமாக விரும்பிச்செய்கிறேன், எனக்கு அதுவே பேஷன். பிசினசை பிசனசாக செய்தேன். அதான் தொடங்கியது முதலே வெற்றியாகத்தான் எனக்கு அமைந்தது,” என்கிறார்.

தலைமை என்பது ஒரு சிறந்த வாய்ப்பும், சேவையும்

தன்னை வெறும் ஒரு முதலாளியாக, சம்பளம் வழங்கும் மேலாளராக கருதாமல், 2,500+ பணியாளர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் ஒரு பெரிய பொறுப்பாளராகவும், சமூக சேவையாகவும் அவர் பார்க்கிறார்.

“நிறுவன வெற்றிக்குக் காரணம் பணியாளர்களின் உழைப்பே. நான் ஊழியர்களை தேர்வு செய்யும்போது திறமையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே, சாதி, மதம், உறவினர் ஆதரவு போன்ற எந்தவித பாகுபாடும் இன்றி செய்கிறேன்,” என்றார்.


பிராண்டை குழந்தையைப் போல வளர்த்தல்

ஒரு பிராண்டை தொடர்ந்து பராமரித்து, முதலீடு செய்து வளர்க்க வேண்டும்; அது ஒரு செடியை நீரூற்றி வளர்ப்பது போலாகும், ஒரு குழந்தையை வளர்ப்பது போல, என அவர் கருதுகிறார்.

தனிப்பட்ட ஆடம்பரங்களுக்கு அல்லது செல்வத்தை காட்டிக்கொள்ள நிறுவன லாபத்தை பயன்படுத்தாமல், தனது தேவைக்கும் பிராண்டின் வளர்ச்சிக்கும் அவசியமானவற்றிற்கே செலவிடுகிறார்.


ஏற்றத் தாழ்வுகளில் சமநிலை

தன் எளிய தொடக்கத்தை எப்போதும் நினைவில் வைத்து, அவர் மிகவும் நிலைத்த மனநிலையுடன் இருக்கிறார்.

”வெற்றியின் உச்சத்தில் அகங்காரம் கொள்ளக்கூடாது; அதே போல், தோல்வியின் காலத்தில் மிகுந்த மனச்சோர்வும் கொள்ளக்கூடாது, ஏனெனில் எப்போதும் நம்மைவிட பெரிய சவால்களை எதிர்கொள்ளும் ஒருவர் இருப்பார்,” என்கிறார்.


போட்டியை நேர்மறையாக பார்க்கும் மனப்பாங்கு

போட்டி என்பது சந்தையின் இயல்பான மற்றும் அவசியமான ஒரு பகுதி என்று அவர் கருதுகிறார். மற்ற நிறுவனங்கள் இருந்ததால் தான், தானும் இந்த வியாபாரத்தில் நுழைய முடிந்தது போல, மற்றவர்களுக்கும் போட்டியிட்டு வளர முழு உரிமை உள்ளது, என நம்புகிறார்.


செல்வத்தின் உண்மையான நோக்கம்

ஆரம்பத்தில் வாழ்க்கைக்கு பணம் அவசியமானதாக இருந்தாலும், வளர்ச்சியுடன் அதன் நோக்கம் மாறுகிறது.

இறுதியில், செல்வம் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் பணியாளர்களின் ஆதரவுக்கும் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர; தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சிக்காக இருக்கக்கூடாது, என தீர்கமாக நம்புகிறார்.

சுமார் 1.30 மணி நேரம் நீண்ட உரையாடலின் முடிவில், ஜி.ஆர்.பி-யின் ப்ராண்ட் வளர்ச்சிக்கு பின்னால் இத்தனை ஆண்டுகள் உழைத்த பாலசுப்பிரமணியத்தின் உழைப்பும், இலக்கும் தெள்ளத்தெளிவாக புரிந்தது. இத்தனை பெரிய ப்ராண்டை நிறுவி இருந்தும், அவர் வெளியுலகில் தன்னை பெரிதாக விளம்பரப்படுத்திக்கொள்ளாது இருந்ததன் ரகசியமும் புலப்பட்டது.