யுவர் ஸ்டோரியின் SheSparks 2026 கருத்தரங்கில், நேச்சுரல்ஸ் சலூன் & ஸ்பா நிறுவனத்தின் இணை நிறுவனர்,
"ஒரு ஆண் பெண்களின் தொழில்முனைவுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி, ஒதுங்கி நிற்பது மட்டுமே," என்று கூறினார்.
பெண் தலைவர்கள் நிறைந்த அரங்கில் குமாரவேல் பேச்சு
ஷீஸ்பார்க்ஸ் கருத்தரங்கில், யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா சர்மாவுடன் உரையாடிய சி.கே.குமாரவேல்,
"நான் யார் பெண்களை ஊக்குவிப்பதற்கு...?" என்று தொடங்கினார். அரங்கு ஒரு நிமிடம் அதிர்ந்தே விட்டது, காரணம், SheSparks என்னும் பெண்கள் முன்னேற்றம், தொழில்முனைவு பற்றிய கருத்தரங்கில் இப்படி பேசினால் அதிர்ச்சி ஏற்படுவது இயல்புதானே?
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் சி.கே.குமாரவேல் பேசியபோதுதான் அது உண்மையான ஆதரவு, தொழில்முனைவு கனவு, பெண்களின் நிதி சுதந்திரத்தின் அமைதியான புரட்சியை விளக்கும் இன்ஸ்பையரிங் பேச்சாக மாறி அரங்கத்தின் ஏகோபித்த கரகோஷத்தையும் வரவேற்பையும் பெற்றது.
அனைத்திற்கும் தொடக்கப் புள்ளி: மனைவியின் சாமர்த்தியம்
அவரது மனைவி வீணா,
"வெறும் ஹவுஸ் வைஃப் ஆக இருக்க மாட்டேன், நான் தொழில்முனைவர் ஆக வேண்டும்," என்று கூறியதே நேச்சுரல்ஸின் தொடக்கம். இன்று 1,000க்கும் மேற்பட்ட சலூன்கள், 600க்கும் மேற்பட்ட பெண் ஃப்ரான்சைசி உரிமையாளர்கள் (அதில் 99% முதல் முறை பெண் தொழில்முனைவோர்கள்).
பெண்கள் தங்கள் கணவர்கள் வியாபாரம், தந்தை நிதி, சகோதரர்கள் கணக்கு என்று நம்பியிருந்தனர். நேச்சுரல்ஸ் அந்த சமன்பாட்டை மாற்றியது.
"இல்லத்தரசிகளை அல்ல நான் இல்லத்தரசர்களை உருவாக்கியிருக்கிறேன்"
"என் பெண் தொழில்முனைவோர்கள் தங்கள் கணவர்களை விட அதிகம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர். கணவர்கள் பயந்துதான் போயுள்ளனர், அது அவர்களின் பிரச்சினை..." என்று சிரித்துக்கொண்டே கூறினார். அரங்கு சிரிப்பால் நிறைந்தது.
இது வெறும் பணம் மட்டுமல்ல, குடும்ப வலிமை மாற்றம். "பெண்களிடம் பணமும் அதிகாரமும் இருந்தால் சிறந்த குடும்பமும் நாடும் உருவாகும், என்றார்.
மறைந்திருக்கும் வாய்ப்புகள்: ஃபால்குனி நய்யரிடமிருந்து பாடம்
மும்பை கான்பரன்ஸில் அருகில் சுமார் 60 வயது மதிப்புள்ள இன்வெஸ்ட்மென்ட் பேங்கர் பெண், அழகு துறைக்கு வருவதாகக் கூறினார். அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரிடம் விசிடிங் கார்ட் கூட அன்று வாங்கவில்லை. ஆனால் அவரின் நிருவனத்தின் இன்றைய மதிப்பு 1 லட்சம் கோடி. அவர் தான் ஃபால்குனி நாயர்; Nykaa-வின் நிறுவனர்.
"மதிப்புகள் மறைந்திருக்கின்றன. தொழில்நுட்பத்தால் அவற்றை விடுவிக்கும் வியாபார மாதிரிகள் வெற்றி பெறும்," என்று கூறினார். ஐஸ்கிரீம் முதல் டெய்லரிங் வரை, இந்தியாவில் பில்லியன் டாலர் வாய்ப்புகள் எங்கும் உள்ளன.
பிராந்திய வெற்றியைத் தாண்டி: தேசிய கனவு
தென்னிந்திய வெற்றியாக இருந்த நேச்சுரல்ஸ் இப்போது 1,000 சலூன்களைக் கடந்து, இந்திய அளவில் பெரிதாக விரிவடைகிறது.
"ஏன் ஒரு மண்டலத்தில் மட்டும் இந்திய பிராண்ட் ?" என்று கேட்கிறார் குமாரவேல். 1.4 பில்லியன் இளைஞர்கள் - இந்தியாவின் பெரிய சாத்தியங்கள் என்றார்.
1+1=11: சிறந்த திருமண மாதிரி
பாரம்பரிய திருமணம்: "நான் உன்னை கவனித்தால் நீ என்னை கவனி" - தவறு. சரியானது: "நான் என்னை கவனித்தால் நீ உன்னை கவனி." சுயசார்பு திருமணத்தின் அடிப்படை. 1+1=11 ஆக இருக்க வேண்டும்.
நேச்சுரல்ஸ் உருவாக்கிய உண்மையான மரபு
நேச்சுரல்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும், பின்னர் உலகளாவிய அளவிலும் தனது பயணத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டு, 2029 ஆம் ஆண்டில் பங்குச்சந்தை (IPO) நோக்கத்தையும் மனதில் வைத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த பிராண்டின் மிகப் பெரிய சாதனை ஒரு அழகு சேவை அல்லது சலூன் அனுபவம் மட்டுமல்ல.
அதற்குப் பின்னால் அமைதியாக உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய மாற்றம் இருக்கிறது — சுமார் 600 பெண்களுக்கு உருவான தன்னம்பிக்கை. வாழ்க்கையில் முதன்முறையாக, வணிக உலகம் தங்களுக்கு அந்நியமானது அல்ல என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அது அவர்களால் அடைய முடியாத இடமல்ல; வீட்டிலோ வெளியிலோ ஒருவராவது தடை செய்யாமல் இருந்தால், அவர்கள் செல்லக்கூடிய பாதை இதுதான் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.
அந்த பெண்களின் மனதில் விதைக்கப்பட்ட அந்த தன்னம்பிக்கையே நேச்சுரல்ஸ் உருவாக்கிய உண்மையான மரபு.