இந்தியா தனது எல்பிஜி (LPG) தேவைக்கு, மூன்றில் இரண்டு பங்கு வளைகுடா நாடுகளையே நம்பி இருக்கிறது. இதனாலேயே மத்திய கிழக்கில் போர்ச் சூழல் உண்டானால், மறைமுகமாக நாமும் பாதிக்கப்பட வேண்டியதாகி விடுகிறது.
அந்தவகையில், தற்போது ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போரால் உலகின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டு விட்டது. இதனால் கடல்வழிப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு, இந்தியாவிற்கான எரிவாயு இறக்குமதி தாமதமாகியுள்ளது.
இதன் எதிரொலியாக வணிக மற்றும் தொழிற்சாலைகளுக்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்து விட்டது. எல்பிஜிக்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.
தற்காலிகமாக மூடப்படும் ஹோட்டல்கள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பால், சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல பெருநகரங்களில் இயங்கி வரும் உணவகங்கள் போதிய சிலிண்டர் இல்லாமல் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பெங்களூருவில் இன்று முதல் உணவகங்கள் இயங்காது, என அதிகாரப்பூர்வமாக ஹோட்டல் உரிமையாளர்கள் அறிவித்து விட்டனர்.
நேற்று வரை அண்டை மாநிலச் செய்தியாக இருந்து வந்த இந்த பாதிப்பு, தற்போது தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டு விட்டது. சென்னையிலும் பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன. உணவகத் துறையில் ஜாம்பவான்களாக உள்ள பல முன்னணி ஹோட்டல்களே, சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல், உணவகங்களில் பதார்த்தங்களின் எண்ணிக்கை குறைத்து, அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும், இனி குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றன. பெரிய உணவகங்களுக்கே இந்த நிலைமை என்றால், சிறிய உணவகங்கள் நிலைமை இன்னும் மோசம்.
மேலும், வீட்டில் உணவு சமைப்பதற்கு பெரும்பாலான மக்கள் கேஸ் சிலிண்டர்களையே நம்பியுள்ள நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கையும் இந்த சிலிண்டர் தட்டுப்பாட்டால் பாதிப்படையும் நிலை உண்டாகியுள்ளது.
இப்படியாக ஒரே நாளில் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெரிய உணவகளும் அடுத்தடுத்து அதிரடியாக பல அறிவிப்புகளை வெளியிட்டு வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்மா சட்டம் அமல் படுத்திய மத்திய அரசு
சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணும் நோக்கில் மத்திய அரசு எஸ்மா (Essential Services Maintenance Act - ESMA) சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. 'அவசிய பொருட்கள் பராமரிப்பு சட்டம்' என அழைக்கப்படும் இந்த எஸ்மா சட்டத்தின் கீழ்,
வணிகர்கள் அல்லது தனி நபர்கள் சிலிண்டர்களைப் பதுக்கினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், எரிவாயு சிலிண்டர்களை பதுக்கினாலோ அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ 3மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடலாம். தமிழ்நாடு அரசும் சிலிண்டர்களின் தட்டுப்பாட்டைத் தடுக்க, கையிருப்பு குறித்து அவசர ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை ரூ. 60 வரை உயர்த்தப்பட்டது. இந்த அதிரடி விலை உயர்வு தந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன்னதாகவே, சிலிண்டர் முன்பதிவிற்கான கால இடைவெளியும் 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்படலாம் என்ற அச்சத்தில், மாநில அரசுகள் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விநியோகத்திற்கே முன்னுரிமை அளித்து வருகின்றன. இதனால் வணிக ரீதியான சிலிண்டர் விநியோகம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. வணிக மற்றும் தொழிற்சாலைகளுக்கான சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. இதன் எதிரொலியாக மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டு விட்டன. தற்போது தமிழ்நாடும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, சென்னையில் பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளன. உணவகத் துறையில் ஜாம்பவான்களாக உள்ள பல முன்னணி ஹோட்டல்களே, சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல், உணவகங்களில் பதார்த்தங்களின் எண்ணிக்கை குறைத்து, அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
மெனுக்கள் குறைப்பு... வேலை நேரத்திலும் மாற்றம்
சென்னை ஹோட்டல் சங்க தகவலின்படி, சென்னையில் உள்ள 10 ஆயிரத்திற்கும் அதிகமான உணவகங்கள் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெரும் நெருக்கடியில் உள்ளது தெரிய வந்துள்ளது. பல பகுதியில் நேற்று முதலே வணிக சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இன்று முதல் பல ஹோட்டல்களில் மெனுக்களில் உணவுகள் குறைக்கப்பட்டும், பல கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டும் வருகின்றன.
இதனிடையே, கோவையில் செயல்படும் பிரபல உணவகமான அன்னபூர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் நெருக்கடி காரணமாக சிலிண்டர் வழங்கலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கவனத்தில் கொண்டு எங்கள் மெனுவில் உணவுகள் குறைக்கப்பட்டுள்ளன. முழுமையான விநியோகத்தை மீட்டெடுக்க அரசு மற்றும் விநியோகஸ்தர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு மன்னிப்பு கோருகிறோம்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் 350 வகையான உணவுப் பொருட்களைத் தயாரித்து வழங்கி வந்த இந்த உணவகம், தங்களது மெனு எண்ணிக்கையை 100ஆக குறைத்துள்ளது. அதோடு, அதிக எரிவாயு செலவு செய்து தயாரிக்கப்படும் ரவா தோசை, ஆனியன் ஊத்தப்பம், தந்தூரி போன்றவற்றையும் நிறுத்தியுள்ளது.
பிரபல சங்கிலித் தொடர் உணவகமான சங்கீதாவும் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
‘சிலிண்டர் தட்டுப்பாட்டால் தங்களது மெனுவில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், அதோடு தங்களது வேலை நேரத்திலும் மாற்றம் கொண்டு வந்துள்ளதாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடுபி (A2B) உரிமையாளர் டைம்ஸ் நவ்விற்கு அளித்துள்ள பேட்டியில்,
“நாளொன்றிற்கு எங்களது ஒவ்வொரு கிளையிலும் 5 முதல் 15 சிலிண்டர்கள் வரைத் தேவைப்படுகின்றன. இன்னும் இரண்டு நாட்களுக்கு பயன்படும் அளவிற்கு மட்டுமே எங்களிடம் எரிவாயு கையிருப்பு உள்ளது. அதற்குள் இந்தப் பிரச்சினை சரி செய்யப்படாவிட்டால், எங்களது உணவகங்களை மூடும் நிலை ஏற்படலாம்,” என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இயங்கி வரும் ஆனந்தாஸ் உணவகம், தங்களது உணவகத்தில் இனி வெரைட்டியான காலை சிற்றுண்டி மற்றும் சாத வகைகள் கிடைக்காது, என அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையம் மற்றும் ரயில் நிலைய உணவகங்களில் பெரும்பாலும் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கு மின்சார அடுப்புகளே பயன்படுத்தப்படுகின்றன. எனவே அவை இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பித்துள்ளன. மற்ற உணவகங்களும் மின்சார அடுப்பிற்கு மாறும் வேலைகளை துரிதப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவுப் பொருட்கள் விலை ஏறும் அபாயம்
உணவகங்கள் அதிரடியாக மூடப்பட்டும், மெனுக்களைக் குறைத்தும் வருவது, உணவகங்களை மட்டுமே உணவுக்கான ஆதாரமாக நம்பி வெளியூரில் இருந்து வந்து, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசித்து வருபவர்களைப் பெரிதும் பாதிக்கும். அதோடு உணவக உரிமையாளர்களுக்கும் இது பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும்.
எனவே, தங்களது நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் உணவக உரிமையாளர்கள் உணவுப் பதார்த்தங்களின் விலையை ஏற்றலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. வெளியூரில் இருந்து வந்து, உணவகங்களில் சாப்பிட்டு வருபவர்களுக்கு இந்த விலையேற்றம் மேலும் சிரமத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலைமை மேலும் 10 நாட்களுக்கு நீடித்தால், டீ, காபி போன்ற பானங்களின் விலையும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.