+

பழங்குடியின மக்கள் வாழ்வை மாற்றிய ‘சிறுதானிய சோலார் மதிப்புக்கூட்டு மையம்’ - Oscar Solar Pump ஸ்டார்ட்அப்-ன் உன்னத முயற்சி!

ஈரோடு மாவட்டத்தில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் பழங்குடியின மக்களின் வாழ்வை மாற்றிய ‘சோலார்’ சிறுதானிய மதிப்புக்கூட்ட மையம். Battery இல்லாமல் இயங்கும் இந்த சோலார் மையத்தில் அப்படி என்னதான் சிறப்பு? Oscar Solar Pump எனும் ஸ்டார்ட் அப்பின் ஒரு சிறிய ஐடியா நூற்றுக்கணக்கான பழங்குடியின குடும்பங்களின்

ஈரோடு மாவட்டத்தில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் பழங்குடியின மக்களின் வாழ்வை மாற்றிய ‘சோலார் சிறுதானிய மதிப்புக்கூட்ட மையம்’. Battery இல்லாமல் இயங்கும் இந்த சோலார் மையத்தில் அப்படி என்னதான் சிறப்பு? Oscar Solar Pump எனும் ஸ்டார்ட் அப்’பின் ஒரு சிறிய ஐடியா நூற்றுக்கணக்கான பழங்குடியின குடும்பங்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தியது எப்படி? வாங்க பார்ப்போம்…

”பழங்குடியின விவசாயிகளுக்கு எதாவது செய்ய வேண்டும், நான் பெற்ற ‘சோலார்’ இயந்திர வடிவமைப்பு அனுபவம் அவர்களுக்கு உதவ வேண்டுமென நான் செய்த முயற்சிகள் இன்று அவர்களின் வாழ்வை மாற்றியுள்ளது,” என்கிறார் Oscar Solar Pump நிறுவனர் வேணுகோபால்.
solar millet machine

சோலார் மையம் ஐடியா உருவானது எப்படி?

ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் 10க்கும் மேற்பட்ட செட்டில்மென்ட் மக்களின் கிராமங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான கிராமங்களில் இன்றளவும் மின் வசதி இல்லாத நிலையே நீடிக்கிறது. இங்குள்ள பழங்குடியின மக்கள் ராகி, தினை போன்ற சிறுதானியங்கள் சாகுபடி செய்து வாழ்ந்து வருகின்றனர்.

மின்சார வசதிகளற்ற இந்த மலைப்பகுதியில் வாழும் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது Oscar Solar Pump என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம். இங்கு டிசம்பர் மாதம் சூரியசக்தியில் இயங்கும் பேட்டரி இல்லா சிறுதானிய மதிப்பு  கூட்டு மையம் துவங்கப்பட்டது.

இந்த மையத்தின் உதவியுடன் தாங்கள் விளைவித்த ராகி, தினை போன்ற சிறுதானியங்களை உலர வைத்து சுத்தம் செய்து, அதை மிக விரைவாக அரைத்து மாவாக மாற்றுவதுடன், அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்து, கூடுதல் வருமானம் பெறுகிறார்கள் இந்த பழங்குடியின மக்கள்.

இந்த மாற்றத்திற்ககெல்லாம் காரணம் Oscar Solar Pump நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால். பத்தாம் வகுப்பு முடித்து விட்டு, ITI (Electrical) படித்துள்ள இவர், தன் அனுபவத்தைக் கொண்டு அமைத்துள்ள சோலார் இயந்திரங்கள் தான், இன்று பழங்குடியின மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளதுடன், அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அவர் நம்மிடம் தான் கடந்து வந்த பாதை, சோலார் இயந்திரங்கள் உருவாக்கிய காரணங்களை பகிர்ந்து கொண்டார்…

millet solar machine

பழங்குடியின மக்களின் நலனுக்கான முயற்சிகள்…

‘‘ஈரோடு மாவட்டம் முடக்குறிச்சி ஒன்றியத்தின் கண்டிக்காட்டு வலசு கிராமத்தில் பிறந்தவன் நான். கிராமப்பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ITI (Electrical) படித்து விட்டு சோலார் இயந்திரங்கள் தயாரிக்கும் சில நிறுவனங்களில் 10 ஆண்டுகளாக வேலை செய்தேன். அப்போது, எனக்கென தனியாக தொழில் துவங்க வேண்டுமென நினைத்தேன்.

2014ம் ஆண்டு தனியாக தொழில் தொடங்கும் முயற்சியை துவங்கிய போது, என் உறவினர் ஒருவர் எங்கள் பகுதியில் டீசல் பம்புசெட் வைத்து விவசாயம் செய்து வந்தார். அவர் மாதம் குறைந்தபட்சமாக 25 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் பயன்படுத்தி பம்புசெட் வைத்து விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். டீசல் விலை உயர்வால் அவரால் அதைத் தாக்குப்பிடிக்க முடியாத போது, நான் அவருக்கு சோலார் பம்புசெட் அமைத்துக் கொடுத்து என் தொழிலை துவங்கினேன்.

“சோலார் அமைத்த பிறகு அவர் செலவுகளின்றி நெல், மரவள்ளிக்கிழங்கு விவசாயம் செய்து நல்ல வருமானமும் பெற்றார். அதன்பின்பு, தொடர்ச்சியாக விவசாயம் சார்ந்த சோலார் பம்புசெட், இயந்திரங்களை நானே டிசைன் செய்து விற்பனை செய்யத்துவங்கினேன். சில ஆண்டுகள் இப்படியே சென்ற நிலையில் ஒரு கட்டத்தில் என்னால் இந்தத் தொழிலை நடத்த முடியாமல் கோவிட் சமயத்தில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டேன். 2022ம் ஆண்டு திரும்பவும் தொழிலை துவங்கி மீண்டு வந்தேன்,’’ என தனது ஆரம்ப காலத்தை பற்றிக்கூறினார் வேணுகோபால்.

தொடர்ச்சியாக விவசாயிகளுடன் பணியாற்றிய போது, 2022ம் ஆண்டில் பழங்குடியின மக்கள் வாழும் கத்தரிமலை, கடம்பூர் மலையின் சுற்றுப்பகுதிகளில் பயணிக்க நேர்ந்தது. அங்குள்ள பழங்குடியின மக்கள் பலரும் வன உரிமைச்சட்டத்தில் அரை ஏக்கர் – ஒரு ஏக்கர் நிலம் பெற்று அதில், ராகி மற்றும் தினை போன்ற சிறு தானியங்கள் பயிரிட்டு வந்தனர்.

ஆனால், கால மாற்றத்தால் அவர்கள் பழமையான முறைப்படி பொட்டு எனப்படும் தூசு நீக்குவது, அரைக்கும் கல்லில் போட்டு அரைத்து மாவாக மாற்றுவது போன்றவற்றைச் செய்யாமல், அதை அப்படியே வியாபாரிகளுக்கு மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

சிலர் 20–25 கிலோ மீட்டர் பயணித்து சமவெளிப்பகுதிக்கு வந்து அரைத்து ராகி மாவாக மாற்றி தங்கள் உணவிற்காக சேமித்து வைத்து வந்தனர். அவர்கள் விளைவித்த உணவை அவர்களே பயன்படுத்த இயந்திரம் மற்றும் மின்சாரம் இல்லாததால் பல தடைகளும், பிரச்சினைகளும் இருந்தது.

‘‘தாங்கள் விளைவிக்கும் பாரம்பரியமான ராகி உணவை சாப்பிட, அதை மாவாக மாற்ற பழங்குடியின விவசாயிகள் இவ்வளவு சிரமப்படுகிறார்கள், விளைவித்த ராகிக்கு நியாயமான விலை கூட கிடைக்கவில்லை, என நினைத்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் படித்த, கற்றுக்கொண்ட சூரிய மின்சக்தி இயந்திர வடிவமைப்பை வைத்து இவர்களுக்கு எதாவது உதவ வேண்டுமென நினைத்தேன். அப்போது நான் எடுத்த முயற்சியால் சோலார் மதிப்புக்கூட்டு மையம் அமைத்து, இன்று பழங்குடியின மக்கள் நிம்மதியாக விவசாயம் செய்து, தங்களுக்குத் தேவையான ராகியை சேமித்து வைப்பதுடன், தரமான ராகியை மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்பனை செய்கின்றனர். மேலும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி கூடுதல் லாபம் பெறுகிறார்கள்,’’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் வேணுகோபால்.

பழங்குடியின மக்களின் நலனுக்காக ‘தழல்’ எனும் சமூக பாதுகாப்பு இயக்கம் ஒன்றை உருவாக்கியுள்ள வேணுகோபால், அதில் மாணவர்கள், சமூக பாதுகாப்பு இயக்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பழங்குடியின மக்களை இணைத்துள்ளார். இந்த அமைப்பின் மூலம் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பயணித்து வரும் அவர், தற்போது, துவங்கப்பட்டுள்ள சோலார் சிறுதானிய மதிப்புக்கூட்ட மையத்திற்கும் ‘தழல்’ எனப்பெயரிட்டுள்ளதாக நம்மிடம் தெரிவிக்கிறார் வேணுகோபால்.

oscar solar pump

பழங்குடியின மக்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடம்பூர் பகுதியில் பல பழங்குடியின கிராமங்களில் மின்சார வசதி இல்லை. இதன் காரணமாக பழங்குடியின மக்கள் 25 கிலோ மீட்டர் பயணித்து சமவெளிப் பகுதிகளுக்குச் சென்று தான் தாங்கள் விளைவித்த ராகியை மாவாக அரைத்து அதை சேமித்து வைத்து பயன்படுத்துகிறார்கள். அவர்களின் சேமிப்பு போக மீதமுள்ள 70 சதவீத ராகியை குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

”இப்படியான சூழலில் கடம்பூர் பழங்குடியினர் தாங்கள் விளைவித்த ராகியை ஒரு கிலோ வெறும் 28-30 ரூபாய்க்கு சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இந்த மோசமான நிலையை மாற்றுவதற்கு திட்டமிட்டு தான் Battery இல்லாத சோலார் இயந்திரங்களை வடிவமைத்து பொருத்தினேன்.”

கிராமம் தோறும் வளர்ச்சி எனச்செயல்படும் தமிழ்நாடு அரசின் StartupTN அமைப்பில் எனது திட்டங்களை விளக்கினேன். StartupTN ஆதரவில், Vivritti Capital நிறுவனத்தின் CSR நிதி 23.5 லட்சம் ரூபாய் கிடைத்தது. இந்த நிதியில், ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகேயுள்ள குன்றி பழங்குடியின கிராமத்தில், Oscar Solar Pump சூரியசக்தி சிறுதானிய பதப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டது.

பழங்குடியினரின் வாழ்வை எப்படி மாற்றியது சூரிய மின்சக்தி இயந்திரங்கள்?

குன்றி கிராமத்தில் இரும்பு கன்டெய்னரில் சோலார் பேனல்கள் வாயிலாக நேரடியாக சூரிய மின் சக்தியில் இயங்கும் மூன்று வகையான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ராகி, தினை போன்ற சிறு தானியங்களில் பொட்டு எனப்படும் தூசு நீக்க தனி இயந்திரம், கல் நீக்கி தரத்தை தனியாக பிரிக்க ஒரு இயந்திரம் மற்றும் 10 HP மோட்டார் விசையில் இயங்கும் மாவு அரைக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மழைக்காலங்களிலும் ராகி உலர வைக்க Solar Dryer ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரங்களில் தினமும் 250–300 கிலோ ராகியை கல், பொட்டு நீக்கி தரம் பிரித்து அரைத்து மாவாக மாற்ற முடியும். இதே பணியை மனிதர்கள் செய்ய வேண்டுமென்றால், பொட்டு நீக்கி, அரைத்து மாவாக மாற்றுவதற்கு பழங்குடியின மக்களுக்கு 3–5 நாட்கள் தேவைப்படும், 3 பேர் அளவிற்கு முழு நேரமாக பணியாற்ற வேண்டும். ஆனால், இந்த இயந்திரம் மூலம் ஒரு நபரே 5–6 மணி நேரத்தில் 300 கிலோவை அரைத்து விடலாம்.

millet products

இந்த இயந்திரங்கள் அனைத்துமே சூரிய வெளிச்சம் இருக்கும் நேரங்களில் நேரடியாக அதன் சூரிய சக்தியில் இயங்குபவை. இந்த அமைப்புகளில் நான் பேட்டரி அமைக்கவில்லை. ஏனெனில், பேட்டரி பராமரிப்பும், அதனை Replace செய்வதும் அதிக தொகை தேவைப்படும், அதனைச் செய்வதற்கு பழங்குடியின மக்களால் முடியாது என்பதால் தான்.

இதனால், வெளிச்சம் குறைவான மழைக்காலத்தில் பயன்படுத்துவதற்கு சிறிய அளவிலான டீசலில் இயங்கும் Generator வழங்கப்பட்டுள்ளது. இந்த 23.5 லட்சம் ரூபாய் நிதியில் இந்த

 நகரும் சூரியசக்தி சிறுதானிய பதப்படுத்தும் மையம் மட்டுமின்றி, நான்கு சிறு அரவை இயந்திரங்கள் நான்கு கிராமங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

குன்றி அருகேயுள்ள மாக்காம்பாளையம், குட்டையூர், அந்தியூர் மற்றும் அக்னிபாவி ஆகிய நான்கு கிராமங்களில், சிறுதானிங்களை அரைத்து மாவாக மாற்றும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. 3 HP விசை கொண்ட இந்த மோட்டார்கள் மூலம் தினமும், 50 கிலோவை மாவாக மாற்ற முடியும். இப்படி இந்த ஐந்து இயந்திரங்கள் மூலமாக தற்போது, 700-800 ஏக்கர் அளவிலான, 1100க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் பயன்பெறுகிறார்கள்.

‘‘இயந்திரங்கள் பொருத்தி மூன்று மாதங்களாகும் நிலையில், இதுவரையில் பழங்குடியின விவசாயிகள் வெறும் ராகியை மாவாக மாற்றி விற்பனை செய்து, கல் நீக்கி வெறும் மாவாக அரைக்கப்படாத ராகியாக விற்பனை செய்து வருகிறார்கள். இதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்காக தற்போது, இங்குள்ள பழங்குடியின பெண்களை குழுவாக மாற்றி, ராகி, தினை மாவில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து லட்டு தயாரித்தும், இதர மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்ய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்கள் தற்போது தங்கள் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை சந்தையில் விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.

”பழங்குடியின விவசாயிகளுக்கு எதாவது செய்ய வேண்டும், நான் பெற்ற ‘சோலார்’ இயந்திர வடிவமைப்பு அனுபவம் அவர்களுக்கு உதவ வேண்டுமென நான் செய்த முயற்சிகள் இன்று அவர்களின் வாழ்வை மாற்றியுள்ளது,’’ என மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார் வேணுகோபால்.

‘‘கடம்பூரில் கடந்த டிசம்பர் 26ல் துவங்கப்பட்ட இந்த முயற்சி வெறும் துவக்கம் தான். அரசிடம் கூடுதலாக சில நிதி உதவிகளைக் கேட்டுள்ளோம். நிதியுதவி கிடைத்தால் மேலும் பெரிய அளவில் இதே போன்ற அமைப்புகளை உருவாக்க முடியும்,’’ என நம்பிக்கை தெரிவிக்கிறார் வேணுகோபால்.

கட்டுரையாளர்: பிரசாந்த்

facebook twitter