ரூ.900 கோடி நிதி திரட்டி யூனிகார்ன் ஆன ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுக் கடன் சேவை நிறுவனம் Square Yards

04:29 PM Jun 24, 2026 | YS TEAM TAMIL

ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுக் கடன் சேவை தளமான Square Yards, கடன் மற்றும் பங்கு முதலீடு ஆகியவற்றின் கலவையாக ரூ.900 கோடி (சுமார் 95 மில்லியன் டாலர்) நிதியை திரட்டியுள்ளது.

இந்த நிதி திரட்டலுக்கு EAAA Alternatives நிறுவனம் முன்னிலை வகித்தது. மேலும், உலகளாவிய கார்ப்பரேட் கடன் மேலாண்மை நிறுவனமான Muzinich & Co இதில் பங்கேற்றது.

PTI வெளியிட்ட தகவலின்படி,

இந்த நிதி திரட்டல் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டதால் ஸ்கொயர் யார்ட்ஸ் யூனிகார்ன் நிறுவனமாக மாறியுள்ளது.

இந்த முதலீடு நிறுவனத்தின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், அதன் வணிக விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் முதல்முறை பொது பங்கு வெளியீடு (IPO) மேற்கொள்ளவும் திட்டமிட்டு வருகிறது. இருப்பினும், அதற்கான காலக்கெடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மேலும், தனது நீண்டகால மூலதன திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த காலாண்டில் கூடுதலாக 50 முதல் 60 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தனுஜ் ஷோரி கூறுகையில்,

“கடந்த சில ஆண்டுகளாக லாபகரமான, விரிவாக்கத்திற்குத் தகுந்த மற்றும் முழுமையாக ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வந்தோம். வரவிருக்கும் IPO-வை முன்னிட்டு இந்த புதிய முதலீடு, சந்தை விரிவாக்கத்தை வேகப்படுத்தவும், தொழில்நுட்பத்தில் எங்களது முன்னிலையை மேலும் வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு சிறந்த மதிப்பை தொடர்ந்து வழங்கவும் தேவையான வலிமையை அளிக்கும்,” என்றார்.

நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025-26 நிதியாண்டில் ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,086 கோடியாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 48 சதவீத வளர்ச்சியாகும். நிறுவனத்தின் EBITDA ரூ.176 கோடியை எட்டியுள்ளது.

முதன்மை சொத்து தரகு நிறுவனமாக தனது பயணத்தை தொடங்கிய ஸ்கொயர் யார்ட்ஸ், தற்போது சொத்து தேடல், வாங்குதல் மற்றும் விற்பனை பரிவர்த்தனைகள், வீட்டுக் கடன்கள், உள்துறை வடிவமைப்பு மற்றும் சொத்து மேலாண்மை உள்ளிட்ட சேவைகளை வழங்கும் ஒருங்கிணைந்த தளமாக வளர்ந்துள்ளது.

இந்த நிறுவனம் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த முதலீடு குறித்து EAAA Alternatives நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமித் அகர்வால் கூறுகையில்,

“அதிக அளவிலான செயல்பாட்டு திறன் கொண்ட, லாபகரமான சந்தை முன்னணி நிறுவனத்தில் முதலீடு செய்வதே எங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதிக போட்டியாளர்களுடன் சிதறிக்கிடக்கும் இந்த சந்தையில் ஸ்கொயர் யார்ட்ஸுக்கு நீண்டகால வளர்ச்சிக்கான மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன” என்றார்.