+

'ஹாஸ்டலில் துணி துவச்சு சோர்ந்த நண்பர்கள்' - லாண்டரி ஸ்டார்ட்-அப் ‘DhobiG' தொடங்கிய கதை!

கல்லூரி ஹாஸ்டலில், துணி துவைக்க தான் பட்ட பாடுகளையே, தனது ஸ்டார்ட் அப்பிற்கான ஐடியாவாக்கி, இன்று அதனை தேசிய சலவை தொழில்நுட்ப நகர்வாக மாற்றி கவனம் பெற்றிருக்கிறார் டோபி ஜி ஸ்டார்ட் அப்பின் நிறுவனர் ரவி ரஞ்சன்.

வீட்டை விட்டுப் பிரிந்து ஹாஸ்டலில் வசிப்பவர்களின் முதல் பிரச்சினை சாப்பாடு என்றால், இரண்டாவது பிரச்சனை துணி துவைப்பது. அதிலும் வீட்டில் இருப்பவர்களைவிட கல்லூரி ஹாஸ்டல்களில் வசிக்கும் மாணவர்கள் தான் அதிகம் அவதிபடுபவர்கள்.

பிரச்சனைகளும், தேவைகளும்தானே புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி செய்யும் என்பர். அந்தவகையில், ஹாஸ்டலில் தங்கிப் படித்த மூன்று கல்லூரி மாணவர்கள், தாங்கள் அனுபவித்த துணி துவைக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக உருவாக்கியதுதான் ‘டோபி ஜி’ (Dhobi G) என்ற லாண்டரி ஸ்டார்ட்-அப்.

இந்த ஸ்டார்ட்அப் இந்தியாவின் லாண்ட்ரிஓஎஸ்-ஐ இயக்குகிறது, 130+ பாரம்பரிய சலவை இயந்திரங்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, முன்னணி பல்கலைக்கழகங்களுடன் கூட்டு சேர்ந்து இயங்கி வருகிறது.

Dhobi G

தேர்வைவிட பயம் தந்த தருணம்

டோபி ஜியின் நிறுவனரும், சி இ ஓ-வுமான ரவி ரஞ்சனும் (Dhobi G | CinKod Technologies Pvt. Ltd), இணைநிறுவனர்களான தக்ஷ் சபர்வால் மற்றும் அங்கூர் குப்தாவும், 2016ம் ஆண்டு சென்னையில் கல்லூரி ஒன்றில் ஹாஸ்டலில் தங்கி பொறியியல் படித்து வந்தனர். அப்போது ஒருநாள் இரவு, தனது செமஸ்டர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோதுதான், அங்கூருக்கு தனது துணிகளைத் துவைக்கவில்லையே என்ற ஞாபகம் வந்தது.

அடுத்தநாள் செமஸ்டர் தேர்வுகள், ஆனால் போட்டுக் கொள்ள துவைத்த துணி எதுவும் இல்லை. இந்தக் கவலை அதுவரை படித்த அனைத்தையுமே அவருக்கு மறந்து போகச் செய்தது. துணி துவைக்க வேண்டுமே என்ற கவலை, அவரை மன அழுத்தத்திற்கும், பதட்டத்திற்கும் ஆளாக்கியது. தனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருந்ததால், தன் நண்பனின் மனநிலையை ரவியால் நன்கு உணர முடிந்தது.

துணி துவைப்பது என்பது எப்போதுமே கண்களுக்குத் தெரியாத வலியாகத்தான் இருந்தது. புகார் சொல்லும் அளவிற்கு இது பெரிய பிரச்சினை இல்லை என்றாலும், தினசரி வாழ்க்கையை தொந்தரவு செய்யும் அளவிற்கு பெரியதுதான். துணி துவைக்கும் பிரச்சினையால் அங்கூருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவரால் செமஸ்டர் தேர்வு எழுத முடியாமலே போனது. அப்போதுதான்,

"நாங்கள் மட்டும்தான் இப்படி துணி துவைப்பதை சுமையாக உணர்கிறோமா இல்லை மற்றவர்களும் அப்படித்தான் உணர்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ள, ஹாஸ்டலில் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் பேசினோம். அப்போது பெரும்பான்மையானவர்களுக்கு துணி துவைப்பது ஒரு பிரச்சினையாகத்தான் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது,” என்கிறார் ரவி.
Dhobi G

Dhobi G நிறுவனர் ரவி ரஞ்சன் மற்றும் இணை நிறுவனர்கள் (இடமிருந்து வலம்)

அதிர்ச்சி தந்த ஆராய்ச்சி முடிவுகள்

மாணவர்களின் இந்த சலவைப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்கும் முயற்சியில், ரவியும், அவரது இரு நண்பர்களும் ஈடுபடத் தொடங்கின. அதன் ஒரு கட்டமாக, உள்ளூரில் இருந்த சலவை இயந்திர உரிமையாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போதுதான் அவர்களுக்கு எதிர்பாராத பல அதிர்ச்சிகள் காத்திருந்தன.

அதாவது, சலவைத் தொழிலாளர்களிடம் போதிய தொழில்நுட்ப வசதி இல்லை என்றும், அவர் இயந்திரங்கள் இல்லாமல் ஆற்றங்கரைகளில்தான் துணிகளைத் துவைத்து உலர வைக்கின்றனர் என்றும் தெரிந்து கொண்டனர். அதோடு, உழைப்பிற்கேற்ற ஊதியமோ, வருமானம் மற்றும் வாடிக்கையாளர்கள் பற்றிய போதிய டாக்குமெண்டுகளோ அவர்களிடம் இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரிய வந்தது.

“சமூகத்தில் சலவைத் தொழிலாளர்களுக்கென போதிய பயிற்சியோ, அவர்களது உரிய அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் கணத்தில்தான் சலவைத் தொழில் என்பது மாணவர்களுக்கு மட்டும் சிரமமாக இருக்கவில்லை என்பதும் எங்களுக்குத் தெரிய வந்தது,” என்கிறார் ரவி.
dhobi G

Dhobi G ஊழியர்கள் வேலை செய்யும் இடம்

டோபி ஜி பிறந்த கதை

மார்க்கெட்டில் சலவைத் தொழிலுக்கு இருக்கும் எதிர்காலத்தை உணர்ந்த ரவியும், அவரது நண்பர்களும் சேர்ந்து புதிய ஸ்டார்ட் அப் ஒன்றை உருவாக்கினார்கள். கல்லூரி மாணவர்கள் தொடங்கிய ஸ்டார்ட் அப் என்பதால், ஆரம்பத்தில் பல தோல்விகளையும், சறுக்கல்களையும் சந்தித்தனர்.

நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து துணிகளைப் பெற்று சலவை செய்து கொடுப்பது, கல்லூரி வளாகத்தில் கியாஸ்க் வைப்பது என பல மாதிரிகளை அவர்கள் சோதித்துப் பார்த்துள்ளனர். ஆனால் இவற்றில் பெரும்பான்மையானவை தோல்வியில்தான் முடிந்துள்ளன.

“ஆரம்பத்தில் போதிய அனுபவம் இல்லாம் பல தவறுகளை நாங்கள் செய்தோம். ஆர்டர்களில் குழப்பம், வீண் செலவு என நிலைமை கை மீறியதால், இரண்டு முறை எங்களது முயற்சியையே கைவிட நினைத்தோம். ஆனால், அந்த தோல்விகள் எங்களுக்கு அனுபவ உண்மைகளைக் கற்றுக் கொடுத்தன. சலவை என்பது சேவைப் பிரச்சினையில்லை, அதில் சிஸ்டம் சரியில்லை என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்."

அதில் முதலாவதாக, சலவைத் தொழிலில் டிஜிட்டல் மயமாக்கல் இல்லை. கிட்டத்தட்ட அனைத்தும் கைமுறையாகவே இருந்தன. இரண்டாவது, இந்தத் தொழிலுக்கென எஸ்ஓபி'க்கள் இல்லை, இது நம்பகத்தன்மையின்மை மற்றும் விரக்திக்கு வழிவகுக்கிறது. மூன்றாவதாக, திறமையான பணியாளர்கள் இல்லை. சலவைத் தொழில் ஒருபோதும் ஒரு தொழிலாக முறைப்படுத்தப்படவில்லை.

"எனவே இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும்படியான ஒரு ஸ்டார்ட் அப்பை நாங்கள் உருவாக்க முடிவு செய்தோம். எங்களது விடாமுயற்சியின் பலனாக உருவானதுதான் இந்த 'டோபி ஜி' ஸ்டார்ட் அப், என தன் ஆரம்பகால நாட்களை நினைவு கூர்கிறார் ரவி.
dhobi G

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் dhobi G நிறுவனர்

இணை நிறுவனர் ஆன இண்டெர்ன்

டோபி ஜியின் இந்த வெற்றிப் பயணத்தில், நிறுவனர் ரவி ரஞ்சன், இணை நிறுவனர்களான தக்ஷ் சபர்வால் மற்றும் அங்கூர் குப்தாவும் ஆகியோரோடு, தற்போது மற்றொரு புதிய இணை நிறுவனர் மற்றும் Chief People & Product Officer ஆக பொறுப்பேற்றிருப்பவர்தான் விதுஷா மணிமாறன்.  

ஆரம்பத்தில் டோபி ஜியில், இன்டர்னாக இணைந்த விதுஷா மணிமாறன், தயாரிப்பு மற்றும் மனிதவள செயல்பாடுகளில் படிப்படியாக பொறுப்புகளை ஏற்று, அவற்றை திறன்பட செய்து காட்டி வருகிறார். அவரது செயல்பாடு, பொறுப்புணர்வு மற்றும் நீண்டகால அர்ப்பணிப்பு மூலம், தற்போது அவர் நிறுவனத்தின் முக்கிய தலைமைப் பொறுப்பிற்கு உயர்த்தப்பட்டு,  டோபி ஜியில் இணை நிறுவனர் மற்றும் Chief People & Product Officer ஆக பதவியேற்றுள்ளார்.

dhobi G

dhobi G இணை நிறுவனர் விதுஷா

3.4 லட்சத்திற்கும் அதிகமான ஆடைகள்

இன்று தினசரி சுமார் 1 டன் துணிகளை சலவை செய்து தருகிறது டோபி ஜி. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆடைகள் இவர்களது நிறுவனம் மூலம், வாடிக்கையாளர்கள் குறை கூற முடியாத அளவிற்கு சலவை செய்து தரப்படுகின்றன. சலவை மற்றும் உலர் சுத்தம் செய்வதற்கான ஆசியாவின் முதல் புதுமை மையமாக (CILDC) டோபி ஜி உள்ளது.

2022ம் ஆண்டில், அதிகரித்து வரும் சலவைத் துறை புகார்களைத் தீர்க்க SRM IST ராமாபுரம், டோபி ஜி உடன் இணைந்தது. அதைத் தொடர்ந்து டோபி ஜி யின் வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது: புகார்களின் எண்ணிக்கை வெறும் 6 மாதங்களில் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைந்தது

தங்களது இந்த முயற்சியின் பலனாக, அவ்வளாகம் 14 லட்சம் லிட்டர் தண்ணீரைச் சேமித்தது. 89,000 கிலோ CO₂ உமிழ்வு மட்டுமே நிகழ்ந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக மாணவர்கள் சலவை செய்வதற்காக நேரத்தை வீணடிக்காமல், மன உளைச்சலுக்கும் ஆளாகாமல், படிப்பதில் அதிக கவனம் செலுத்த முடிந்ததாக, பெருமையுடன் ரவி கூறுகிறார்.

dhobi G

சலவைத் தொழிலாளர்களுக்கான முதல் திறன் மேம்பாட்டுத் திட்டம்

டோபி ஜி-யின் கதையின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதிகளில் ஒன்று, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து பணியாற்றுவதாகும். இவர்கள் இணைந்து, சலவைத் தொழிலாளர்களுக்கான இந்தியாவின் முதல் கட்டமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கினர்.

சலவைத் தொழிலாளர்களுக்கு முறைப்படி பயிற்சியும், அதன் தொடர்ச்சியாக சான்றிதழும் வழங்கப்பட்டது. சுமார் 130க்கும் மேற்பட்ட பாரம்பரிய ஆற்றங்கரை துவைப்பாளர்கள், இவர்களது முயற்சியால் நவீன சலவைத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.

2025ம் ஆண்டு ஸ்டார்ட்அப் மகாரதி, UC பெர்க்லி ஆக்ஸிலரேட்டர், ஐஐஎம் பெங்களூரு ஆகியோரிடமிருந்து பல விருதுகளைப் பெற்றுள்ளது இந்த டோபி ஜி.

dhobi G

நிறுவன நிதி சுற்றுக்கு தயார்

ஆரம்பத்தில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து ரூ. 20 லட்சம் மற்றும் ஐஐஎம் பெங்களூரு இன்னோவேஷனில் இருந்து ரூ.20 லட்சம் நிதியும் பெற்றுள்ள டோபி ஜி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில், ஸ்டார்ட் அப் இனிஷியேட்டிவ் கீழ் ரூ.1.5 கோடியும் நிதி கடனாகப் பெற்றுள்ளனர்.

இது தவிர, நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் டோபி ஜி வளாகம் மற்றும் சலவை இயக்க முறைமையை (OS) அளவிடுவதற்கான, முதல் நிறுவன நிதி சுற்றுக்கு தயாராகி வருகிறது.

facebook twitter