+

50 ஆண்டுகளுக்கு முன் 6 நண்பர்கள் கண்ட கனவு - இன்று உலகத் தொழில்நுட்ப நிறுவனமாக உயர்ந்து நிற்கும் HCL

“பெரிய கனவு காணுங்கள்; துணிந்து இடர்பாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; எப்போதும் உயர்வை நோக்கி பயணியுங்கள்” — 50 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட இந்த எண்ணமே இன்று உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ந்துள்ள HCL-ன் அடையாளமாக உள்ளது. HCL-ன் 50-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நிறுவனத்தின் இணை நிறுவனர்க

’பெரிய கனவு காணுங்கள்; துணிந்து இடர்பாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; எப்போதும் உயர்வை நோக்கி பயணியுங்கள்...’ - 50 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட இந்த எண்ணமே இன்று உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ந்துள்ள HCL-ன் அடையாளமாக உள்ளது.

HCL-ன் 50-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான அஜய் சவுத்ரி தனது எக்ஸ் பக்கத்தில் HCL நிறுவனம் உருவான சுவாரஸ்யமான பயணத்தைப் பகிர்ந்துள்ளார்.

1976-ம் ஆண்டு இந்தியாவில் ஸ்டார்ட்அப் என்ற கருத்தே பெரிதாக இல்லாத காலம். வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் கிடையாது. வங்கிகளும் சொத்துகள் இல்லாத ஆறு இளைஞர்களுக்கு கடன் வழங்க ஆர்வம் காட்டவில்லை. கணினி என்றால் என்ன என்பதே பெரும்பாலான மக்களுக்கு தெரியாத சூழல்.

அந்த நேரத்தில், சிவ் நாடார், அர்ஜுன் மல்ஹோத்ரா, யோகேஷ் வைத்யா, சுபாஷ் அரோரா, டி.எஸ்.புரி மற்றும் அஜய் சவுத்ரி, என ஆறு பேர் தங்கள் வேலையை விட்டுவிட்டு தொழில்நுட்பத் துறையில் களமிறங்கினர். மைக்ரோபிராசஸர் உலகையே மாற்றப்போகிறது, என்ற நம்பிக்கையில் அவர்கள் இந்த ஆபத்தான பயணத்தைத் தொடங்கினர்.

ஆறு பேரும் இணைந்து ரூ.1.87 லட்சத்தை திரட்டினர். கடன் வாங்கியும், சேமிப்புகளை ஒன்றிணைத்தும், ஒரு காரை விற்றும் அந்தத் தொகையைச் சேர்த்தனர். டெல்லியின் கோல்ஃப் லிங்க்ஸ் பகுதியில் உள்ள சிறிய ‘பர்சாத்தி’ அறைதான் அவர்களின் முதல் அலுவலகம்.

We quit our jobs.

There were six of us — Shiv Nadar, Arjun Malhotra, Yogesh Vaidya, Subhash Arora, D.S. Puri and me.

It was 1976. Startups were not really a thing in India. Venture capital did not exist. Banks were not exactly lining up to lend money to six young men with an… pic.twitter.com/4fJHtX5qK4

— Ajai Chowdhry (@AjaiChowdhry) August 11, 2026 ">

‘மைக்ரோகாம்ப்’ என தங்களை அழைத்துக்கொண்ட அவர்கள், இந்தியாவிலேயே ஒரு கணினியை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டனர். ஆனால், அவர்களிடம் கணினி தயாரிப்பதற்கான உற்பத்தி உரிமம் இல்லை. இதையடுத்து, உத்தரப் பிரதேச எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனுடன் இணைந்து செயல்பட்டனர். அவர்களிடம் உரிமம் இருந்தது; இவர்கள் தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தனர். இந்தக் கூட்டணியின் விளைவாகவே ‘ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்’ எனப்படும் HCL உருவானது.

HCL-ன் ஆரம்ப காலத்தில் நடந்த மற்றொரு துணிச்சலான முயற்சி அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இன்னும் வடிவமைப்பு நிலையில் இருந்த கணினியையே அவர்கள் விற்பனை செய்யத் தொடங்கினர். கையில் இருந்தது கணினியின் மாதிரி வடிவமும் ஒரு விளக்கக் கையேடும் மட்டுமே.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்ற விற்பனைக் குழுக்கள், அதுவரை கணினியைப் பயன்படுத்திப் பார்த்திராத நிறுவனங்களிடம் தங்கள் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தினர். முதல் ஆர்டர்கள் ஐஐடி காரக்பூர் மற்றும் ஐஐடி மெட்ராஸிடமிருந்து கிடைத்தன.

அதன் பின்னர், வர்த்தக நிறுவனங்களை சம்மதிக்க வைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. கோயம்புத்தூரில் பெரியதும் ஏற்கெனவே நிலைபெற்றதுமான DCM DP நிறுவனத்துடன் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிரீமியர் மில்ஸ் நிறுவனத்தில் DCM குழுவினர் தங்கள் திட்டத்தை விளக்கிய பின்னர், இரண்டாவதாக HCL குழு தங்கள் தயாரிப்பை முன்வைத்தது. அந்த ஆர்டரை HCL கைப்பற்றியது.

அந்த ஒரு ஆர்டர் தொடர்ந்து மேலும் ஐந்து ஆர்டர்களையும், பின்னர் பத்து ஆர்டர்களையும் பெற்றுத்தந்தது.

“அந்த ஆரம்ப ஆண்டுகளில் HCL-ன் பலம் மிகப்பெரிய நிதி இருப்போ, பெரிய பிராண்டோ அல்லது எளிதான பாதையோ அல்ல. எந்தச் சூழலிலும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் மனப்பான்மையே எங்கள் பலம்,” என அஜய் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

புதிய வாய்ப்புகளைத் தேடுவதிலும், தொழில்நுட்பத்தை எளிமையாகவும் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் மாற்றுவதிலும் HCL கவனம் செலுத்தியது. தொழில்நுட்பத்தில் துணிச்சலுடன் செயல்படும் ‘கவ்பாய்’ மனப்பான்மை கொண்டவர்களை நிறுவனத்தில் இணைத்துக்கொண்டனர்.

HCL

இந்தியாவின் ஆரம்பகால உள்நாட்டு கணினிகளை உருவாக்கிய HCL நிறுவனம், தொடங்கிய நான்கு ஆண்டுகளிலேயே சிங்கப்பூருக்குச் சென்று தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியது. டெல்லியில் உள்ள சிறிய அறையில் தொடங்கிய பயணம், இன்று உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமாக HCL வளர்வதற்கு வழிவகுத்தது.

“50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் பார்க்கும்போது, 1976-ல் ஒன்றாக அமர்ந்திருந்த அந்த ஆறு பேர்தான் நினைவுக்கு வருகின்றனர். இந்தக் கனவு உண்மையில் சாத்தியமா என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். ஒரு சிறிய அறை, இன்னும் உருவாகாத கணினிக்கான ஒரு விளக்கக் கையேடு, அடுத்த கதவைத் தட்டிச் செல்லும் துணிச்சல் — அதுதான் உண்மையான HCL கதை,” என்று அஜய் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளில் தொழில்நுட்பம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் மாறியிருந்தாலும், HCL-ன் அடிப்படை உத்வேகம் மாறவில்லை, என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பெரிய கனவு காணுங்கள். ஆபத்தை ஏற்றுக்கொள்ளத் துணியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, தொடர்ந்து உயர்வை நோக்கி பயணியுங்கள் — Just Aspire...” என்று கூறி, HCL-க்கு 50-வது ஆண்டு வாழ்த்துகளை அஜய் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
facebook twitter