+

ஏஐ மாநாட்டில் சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேனை அசத்திய 8 வயது சிறுவன் - யார் இந்த ரன்வீர் சச்தேவா?

டெல்லியில் நடந்த இந்திய AI உச்சி மாநாட்டில், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, சாட் ஜிபிடியின் தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் என முன்னணி டெக் நிறுவனத் தலைவர்களே தேடி வந்து பேசும் அளவிற்கு, அனைவரது கவனத்தையும் ஈர்த்து அசர வைத்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த 8 வயது சிறுவனான ரன்வீர்.

2026ம் ஆண்டிற்கான இந்திய ஏஐ உச்சி மாநாடு (India AI Impact Summit 2026), கடந்த வாரம் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, சாட்ஜிபிடியின் தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட முன்னணி டெக் நிறுவனத் தலைவர்கள் மற்றும் ஏஐ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

வயதிலும், அனுபவத்திலும் மூத்த தலைவர்கள் அமர்ந்திருந்த அந்த அவையில், இளம் பேச்சாளராக, அனைவரையும் அசர வைத்து சர்வதேச ஊடகங்களில் பேசு பொருளாகி இருப்பவர்தான் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 8 வயதேயான ரன்வீர் சச்தேவா.

உலகமே உற்று நோக்கும் வகையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இளம் வயது பேச்சாளராக இருந்தாலும், தனது தனித்துவமான பேச்சாலும், தான் உருவாக்கிய ஏஐ மாடலாலும், மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரையும் அசரடித்துள்ளார் இந்த சிறுவன்.

ரன்வீர் சச்தேவாவைப் பாராட்டும் வகையில், சுந்தர் பிச்சையும், சாம் ஆல்ட்மேனும், அவரைத் தேடிச் சென்று பேசியதன் மூலம், சர்வதேச ஊடகங்களிலும் செய்தியாகி விட்டார் இந்த ரன்வீர் சச்தேவா. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்திலும் டிரெண்டிங்காகி உள்ளன.

ranvir sachdeva

யார் இந்த ரன்வீர் சச்தேவா?

2017ம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் பிறந்தவர்தான் ரன்வீர் சச்தேவா. தனது 3 வயது முதலே கோடிங் கற்கத் தொடங்கிய இவர், 5 வயதிலேயே டெட் எக்ஸ் (TEDx) பேச்சாளராகி விட்டார். அதனாலேயே, அதிமேதாவி எனப் பொருள்படும் வகையில், ரவியை Child prodigy என்றே மக்கள் அழைக்கின்றனர்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கைகளின்படி, 2022 குளோபல் ரீடிங் சேலஞ்சில் சூப்பர் பிரசண்டராக ரன்வீர் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். அதே காலகட்டத்தில், செவ்வாய் கிரக ஆய்வுக்கான ரன்வீர் உருவாக்கிய, முன்மாதிரி ராக்கெட் மாடல், நாசா ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்திலில் அங்கீகாரத்தைப் பெற்றது.

ரோபோடிக்ஸ் மற்றும் ஏஐ பிரிவுகளில் இளம் வயதிலிருந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் ரன்வீர், இதுவரை பல்வேறு ஏஐ மாடல்களை உருவாக்கி இருக்கிறார். ஏஐ தொடர்பாக உலகத்தின் எந்த மூலையில் மாநாடு நடைபெற்றாலும், அதில் இளம் பேச்சாளராக கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமையும் சேர்த்து வருகிறார்.

கேம்பிரிட்ஜ் மதிப்பீட்டின் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு மையம் அவரது பாட அறிவை 14 வயது சிறுவனின் அறிவுடன் ஒப்பிடத்தக்கதாக மதிப்பிட்டுள்ளது.

ranvir sachdeva

டெக் தலைவர்களை அசத்திய ரன்வீர்

தற்போது எட்டு வயதாகும் ரன்வீர், இந்தியாவின் பண்டைய தத்துவங்களை, நவீன தொழில்நுட்பத்தோடு இணைக்கும் வகையில், புதியதொரு ஏஐ மாடலை உருவாக்கியிருக்கிறார். அதனை இந்திய ஏஐ உச்சி மாநாட்டில் அவர் அறிமுகம் செய்து வைத்தார். கூடவே, தனது இந்த மாடலானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவில் உதவும் என ரன்வீர் அம்மாநாட்டில் பேசினார்.

மிக இளம் வயது பேச்சாளராக இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, தன்னுடைய திறமையான பேச்சால் அங்கிருந்தவர்களைப் பெரிதும் கவர்ந்தார். ஏற்கனவே, 8 வயது சிறுவன் ஏஐ மாடல்களை உருவாக்கி இருப்பது குறித்து, ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போன டெக் தலைவர்களுக்கு, ரன்வீரின் பேச்சு மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ரன்வீரின் பேச்சைக் கேட்டு வியந்து போன கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் சாட் ஜிபிடியின் தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் ஆகியோர், அவரை நேரில் சந்தித்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டிங்காகி இருப்பதோடு, சர்வதேச ஊடகங்களிலும் இந்த சந்திப்பு கவனம் ஈர்த்துள்ளது.

ranvir sachdeva

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் படிப்பு

சர்வதேச அளவில் இப்படி கவனம் பெறுவது ரவிக்கு இது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த 2023ம் ஆண்டு ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் இந்தியா வந்தபோது, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரன்வீர் அவரைச் சந்தித்தார். அப்போது ரவியின் கோடிங் திறமையைக் கண்டு வியந்து போன டிம் குக், கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்திற்கு நேரடியாக வரும்படி, ரவிக்கு அழைப்பு விடுத்தார்.

 

அதன் தொடர்ச்சியாக, கடந்தாண்டு ஜெனிவாவில் நடைபெற்ற அனைவருக்கும் ஏஐ என்ற ஐநாவின் மாநாட்டிலும் ரன்வீர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஏஐ-ன் தந்தை அழைக்கப்படும், ஜெப் ஹிண்டனோடு மேடையை அவர் பகிர்ந்து கொண்டது சர்வதேச அளவில் பேசப்பட்டது.

2023 ஆம் ஆண்டில், லண்டன் அறிவியல் அருங்காட்சியகம், தி ரீடிங் ஏஜென்சி யுகே, ஷ்னீடர் எலக்ட்ரிக், ஆப்பிள், கூகிள், அடோப், ஐஐடி டெல்லி மற்றும் சயின்ஸ் ஆக்ஸ்போர்டு யுகே போன்ற நிறுவனங்களிடமிருந்து ரன்வீருக்கு அங்கீகாரம் கிடைத்தது.

தனது வயதுக்கே உரித்தான பள்ளிப் படிப்பைத் தாண்டி, தனது கற்றலை விரிவுபடுத்தி வருகிறார் ரன்வீர். தற்போது அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இயந்திர கற்றல் படிப்பைத் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ranvir sachdeva

தொழில்நுட்ப பேச்சாளர், எழுத்தாளர்

ரன்வீர் முக்கியமான சில தூதர் பதவிகளையும் வகித்து வருகிறார். சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) ITU160 தூதராகவும், சக்ரா உரையாடல் அறக்கட்டளை போன்றவற்றின் தொழில்நுட்ப தூதராகவும் உள்ளார்.

தனது டெக் திறமைகளை விவரிக்கும் வகையில், Are you born with AI என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றையும் ரன்வீர் எழுதியிருக்கிறார். இந்த இளம் வயதில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதோடு, சிறந்த பேச்சாளராகவும் கலக்கி வரும் ரவியின் சாதனை, ஆசியா புக் ரெக்கார்ட்ஸ்-ல் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

facebook twitter