
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் நிறுவனம், புகழ் பெற்ற 'மன்னா பிராண்ட்' கீழ், ஆரோக்கிய உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வரும் ’சதர்ன் ஹெல்த் புட்ஸ்’ நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்ட்ஸ்டிரீஸ் நிறுவனத்தின் நுகர்வோர் பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் நிறுவனம் ஏற்கனவே உணவு மற்றும் ஆரோக்கிய உணவு பிரிவில் உதயம், இண்டிபன்ஸ் மற்றும் SiL உள்ளிட்ட பிராண்ட்களை பெற்றுள்ள நிலையில், மன்னா பிராண்ட் தனது தொகுப்பில் இணைந்திருப்பது சிறு தானியம் சார்ந்த உணவு பிரிவில் தனது நிலையை மேலும் வலுவாக்கும் என தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வாங்கக் கூடிய விலையில் தரமான பொருட்களை தருவது எனும் கோட்பாட்டிற்கு ஏற்ப இந்த கையகப்படுத்தல் அமைகிறது என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
”தமிழ்நாட்டில் ஆரோக்கிய உணவு பிரிவில் மன்னா நன்கறியப்பட்ட பெயராக இருப்பதோடு, அருகாமை மாநிலங்களிலும் இருப்பை கொண்டுள்ளது. சிறுதானியம் சார்ந்த ஆரோக்கிய உணவு மற்றும் பாணங்கள், குழந்தைகள் உணவுக்காக அறியப்படுகிறது. நிறுவனத்தின் பேக்கேஜ் உணவு பிரிவை வலுவாக்குவதோடு, வாடிக்கையாளர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்க இது உதவும்,” என ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் இயக்குனர் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.
எங்கள் வலுவான விரிவாக்கம் மற்றும் ஆய்வு, சப்ளை செயின் ஆற்றலோடு மன்னா பிற பகுதிகளிலும் விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Induja Raghunathan